வங்கி கடன் பெறுவதில் உள்ள இழுத்தடிப்புகளும், நிராகரிப்புகளும் குறைவதற்கு வழி வகுத்தால் மகிழ்ச்சிதான் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கடன் தகுதிக்கான முடிவுகளை எடுப்பதற்கான உள் மதிப்பீட்டு முறைமையை வெளி நிறுவனங்களின் உதவி இன்றி தாமாகவே அரசு வங்கிகள் செய்து கொள்வதற்கான தொழில் நுட்ப கட்டமைப்பு பணிகள் துவங்கியிருப்பதாக குறு சிறு நடுத்தர தொழில்கள் ஒன்றிய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2024 பட்ஜெட்டில் ஒரு சிறு நடுத்தர தொழில் கடன்களை எளிமையாக்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்ட போது இப்படியொரு கட்டமைப்பை அரசு வங்கிகள் ஏற்படுத்திக் கொள்ளும் என்று நிதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியை (எண் 539/28.11.2024) சு.வெங்கடேசன் எம்பி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஒன்றிய இணை அமைச்சர் சுஷ்ரி ஷோபா கரந்தலஜே, அரசு வங்கிகள் இதற்கான நவீன தொழில் நுட்ப மதிப்பீடு கட்டமைப்பை உருவாக்கி வருவதாக நிதிச் சேவைத் துறை தெரிவித்துள்ளதாக பதில் அளித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்பி, கடன் விண்ணப்பங்கள் வேகமாக பரிசீலிக்கப்படவும், கடன் பெறுவதில் உள்ள இழுத்தடிப்புகளும், நிராகரிப்புகளும் குறைவதற்கு இப்புதிய ஏற்பாடு வழி வகுத்தால் மகிழ்ச்சிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.