india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

‘அப்துல்கலாமை ஜனாதிபதிஆக்கியதே மோடிதான்...’

டாக்டர் அப்துல் கலாமை, நாட்டின் குடியரசுத் தலைவர் ஆக்கியதே நரேந்திர மோடிதான் என்று மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார். “பிரதமர் நரேந்திர மோடி சாதாரண மக்கள் பலருக்கும் வாய்ப்பு அளித்து வருகிறார். அவர்தான் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை நாட்டின் குடியரசுத் தலைவர் ஆக்கினார். பாஜக தேசபக்தி உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல. ஸ்லிப்பர் செல்களாக வேலை பார்த்து வருபவர்களையே நாங்கள் எதிர்க்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

                                                           ********************

ஊர்ப் பெயரை மாற்றும்  வேலையில் சவுகான்!

ம.பி. மாநிலம் ஹோஷாங்கபாத் நகரில் நர்மதா ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜகமுதல்வர் சிவராஜ் சவுகான், ஹோஷாங்கபாத் நகரின் பெயரை, நர்மதாபுரம் என்று மாற்றுவதாக அறிவித்தார். பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இதனை கொண்டாடிய நிலையில், “விலைவாசி உயர்வு, எரிபொருள் விலையேற்றம்போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை, திசைத் திருப்பவே ஊர்ப்பெயர் மாற்றத்தில் சவுகான் இறங்கி இருக்கிறார்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா விமர்சித்துள்ளார்.

                                                           ********************

பாஜக ஒரு இடத்திற்கு மேல்  வென்றாலே பெரிய விஷயம்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தீவிரமான போட்டியாளராக இருக்கும் என்று நினைக்கவில்லை. கடந்த தேர்தலில் பாஜக ஒரு இடத்தில்தான் வென்றது. இந்த தேர்தலில் அதற்கு மேல் அதிகமாக வென்றாலே அது பெரிய விஷயமாகத்தான் இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேசியுள்ளார். “நான் 53 வயதில் அரசியலுக்குள் வந்தேன். எனக்கு போதுமான தகுதி இருப்பதாக உணர்ந்தாலும்கூட, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த நான் தாமதித்துவிட்டதாக நினைக்கிறேன். அப்படியிருக்கும் போது 88 வயதில்பாஜகவில் சேரும் ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரனைப் பற்றி என்ன சொல்வது?” என்றும் தரூர்குறிப்பிட்டுள்ளார்.

                                                           ********************

பதஞ்சலி மருந்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை!

ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ‘கொரோனில்’ என்ற மருந்தைத் தயாரித்துள்ளது. இந்த மருந்து அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்யப்படாத நிலையிலேயே “கோவிட் -19 சிகிச்சைக்கு உதவும்” என மத்திய பாஜக அரசின் ஆயுஷ் அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி விட்டது. ஆனால், ராம்தேவோ “கொரோனில் கிட் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பே தரச் சான்றிதழ் வழங்கி விட்டது” என பொய் பரப்பத் துவங்கி விட்டார். இதையடுத்து, “கொரோனா சிகிச்சைக்கு எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் நாங்கள் மதிப்பாய்வு செய்யவோ ஒப்புதல் அளிக்கவோ இல்லை” என்று உலக சுகாதார அமைப்பு பதிவிட்டுள்ளது. 

                                                           ********************

நிலக்கரி ஊழல் வழக்கில் மம்தா உறவினருக்கு சம்மன்

நிலக்கரி மோசடி தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கு சிபிஐ சம்மன் வழங்கியுள்ளது. முன்னதாக சம்மனை அளிப்பதற்காக சிபிஐ குழு அபிஷேக் பானர்ஜியின் வீட்டிற்கு நேரிலேயே சென்றிருந்த நிலையில், அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜி வீட்டில் இல்லை. இதனால் அங்கிருந்த ஊழியர்களிடம் சிபிஐ அதிகாரிகள் சம்மனை வழங்கியுள்ளனர்.

;