திங்கள், செப்டம்பர் 27, 2021

india

img

கேரளத்தில் 13 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு நிலப்பட்டா... சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசின் ‘100 நாள்’ சாதனை....

திருவனந்தபுரம்:
கேரளத்தில், பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவிக்கு வந்த 100 நாட்களில் 13 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு நிலப்பட்டாக்களை வழங்கி சாதனை படைத்துள்ளது.
பினராயி விஜயன் அரசு பதவியேற்றபோது, “100 நாள், நூறு திட்டங்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து, பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டது. அவற்றை 100 நாட்களில் செயல்படுத்தவும் இலக்கு நிர்ணயித்தது.

அந்த வகையில், 100 நாட்களுக்குள் 58 ஆயிரத்து 301 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ள பினராயி விஜயன் அரசு, 13 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு நிலப்பட்டாக்களையும் வழங்கியுள்ளது. இவ்வளவு காலமும், தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்களால் உரிமை மறுக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் இந்த பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.இடது ஜனநாயக முன்னணி அரசின் 2016-2021 ஆட்சிக் காலத்தில், சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன. அது அதற்கு முன்புவரை இல்லாத சாதனையாகும்.இந்நிலையில், தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியைத் தொடரும் இடது ஜனநாயக முன்னணி அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா வழங்கப்படும். நிலமற்ற அனைவருக்கும் நிலம் மற்றும் வீடு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாயன்று 14 மாவட்ட மையங்கள் மற்றும் 77 தாலுகா மையங்களில் ‘பட்டா மேளா’க்கள் நடைபெற்ற நிலையில், “முடிந்தவரை தொழில்நுட்பத்தை எளிமையாக்குவதன் மூலம் அதிகமான மக்களுக்கு பட்டா வழங்கப்படும்” என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.“நிலமற்றோருக்கு வழங்குவதற்கான நிலம் டிஜிட்டல் கணக்கெடுப்புகள் மூலம் கையகப்படுத்தப்படும், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும் மனைப்பட்டா கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். பழங்குடி குடும்பங்களுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு தனி நிலவங்கி உருவாக்கப்படும். இதற்காக, மாநிலத்தின் முழு நிலத்தையும் டிஜிட்டல் முறையில் அளக்க முதல் கட்டமாக ரூ. 339 கோடி நிதி ‘ரீபில்டு கேரளா’ (Rebuild Kerala) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது” என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

;