headlines

img

போர்முனையில் வென்றது ஏர்முனை

தலைநகர் தில்லியில்  உழுகுடிகள் நடத்திய அறப்போர்  துவங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு  பெறுகிறது. சோசலிச லட்சியத்திற்காகவும்  சமூக நீதிக்காகவும் உலகம் முழுவதும் போராடிக்கொண்டிருக்கிற கோடான கோடி மக்களுக்கு நம்பிக்கை தருவதாக இந்த போராட்டம் அமைந்தது. 

அடக்குமுறைகளை பாசன நீராய்ப் பருகி அவதூறுகளை அடியுரமாக தின்று செரித்து, ஆணவக் களை பறித்து போராட்ட விவசாயத்தை பொருத்தமாக செய்து முடித்திருக்கிறார்கள் விவசாயிகள். இந்த வெற்றி கண்டு பதர்கள் பதறுகின்றன. இது தற்காலிக பின்வாங்கல்தான் இந்த சட்டங்களை கொண்டு வந்தே தீருவோம் என்று இப்போதும் கூட கூவிக் கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட்  கைக்கூலிகள்.

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்த பிறகும் விவசாயிகளுக்கு நம்பிக்கை வரவில்லை. ஒன்றிய அமைச்சரவை கூடி சட்டங்களை திரும்பப் பெறும் முடிவை எடுத்த பிறகும் போராட்டத்தை முடித்துக் கொள்ள தயாராக இல்லை. இதற்குக் காரணம் ஒன்றிய ஆட்சியாளர்களின் கடந்தகால செயல்பாடுகளே. 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எழுத்துப்பூர்வமாக திரும்பப்பெறுவதாக நாடாளுமன்றத்திலேயே அறிவிக்கும் வரை, நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வரை வீடு திரும்பப் போவதில்லை என அறிவித்து நடுங்க வைக்கும் குளிரில் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். 

இடைத்தேர்தல்களில் கிடைத்த தொடர் தோல்விகளும், அடுத்தடுத்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களும்தான் ஒன்றிய ஆட்சியாளர்களின் பின்வாங்கலுக்கு காரணம் என்ற போதும் இனியும் போராட்டத்தின் பெருநெருப்பை தாங்க முடியாது என்ற முடிவிற்கு ஆட்சியாளர்கள் வந்து விட்டனர்.

இந்த சட்டங்கள் விவசாயிகளிடமிருந்து விவசாயத்தைப் பறிக்கும் நோக்கம் கொண்டது மட்டுமல்ல, மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்பதை முன்னுணர்ந்து கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு நாட்டிலேயே முதன் முறையாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறை வேற்றியது. தமிழகத்தில் முந்தைய  அதிமுக ஆட்சியாளர்கள்  இந்த அராஜகச் சட்டங்களுக்கு வழக்கம் போல முட்டுதேய முட்டுக்கொடுத் தார்கள். தமிழகத்தில் திமுக அரசு மலர்ந்த பிறகு தமிழக சட்டப்பேரவையில் இந்த சட்டங்களை  திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 

போராட்டக் களத்திற்கு நேரில் சென்றும் தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றியும் போராடிய தமிழக விவசாயிகளும், கட்சிகள்  மற்றும் உழைக்கும் மக்களின் அமைப்புகளும் இந்த வெற்றியில் பங்கெடுக்க பாத்தியப்பட்டவைகள். ஆட்சியாளர்களுக்கு எதிரான போர்முனையில் வென்றிருக்கிறது ஏர்முனை. இந்த வெற்றி உலகில் ஏற்றத்தாழ்வுகளை உழுது நேர்முனை யாக்க உதவும் என்பது உறுதி.

;