headlines

img

அடுப்பு எரியவிடாமல் வயிறு எரிய வைக்கும் அரசு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் விலை ரூ.1068.50 அளவுக்கு உயர்த்தப் பட்டுள்ளது. கடந்த 14 மாதங்களில் மட்டும் சமையல் எரிவாயு விலை 12 முறை உயர்த்தப் பட்டுள்ளது. நாட்டு பட்ஜெட்டில் பெரும் பற்றாக் குறையை உருவாக்கியுள்ள ஒன்றிய பாஜக கூட்டணி அரசு சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்துவதன் மூலம் ஒவ்வொரு வீட்டின் பட்ஜெட்டிலும் பெரும் ஓட்டையை போட்டுள்ளது. 

கடந்த மே மாதம் 7ஆம் தேதி சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.1015.50 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதே மாதம் 19ஆம் தேதி மீண்டும் ரூ.3 உயர்த்தப்பட்டது. 

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு வந்த பிறகும் ஒவ்வொரு மாதமும் விலையை உயர்த்துவதை மோடி அரசு பெரும் கடமையாக கருதி நிறை வேற்றி வருகிறது. 

கடந்தாண்டு ரூ.710க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் ஒரு ஆண்டில் மட்டும் 305ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ 50.44 சதவீத அள வுக்கு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலை யில், மக்கள் கடும் கொந்தளிப்புக்கு ஆளானார் கள். இதை திசை திருப்புவதற்காக  உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சிலிண்டர்களுக்கு மட்டும் ரூ.200 குறைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டது. இதனால் பலன் பெற்றவர்கள் மிக சொற்பமே. இன்னும் சொல்லப்போனால் உஜ்வாலா 

திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெற்றவர்கள் கடும் விலை உயர்வு காரணமாக அடுத்தடுத்து சிலிண்டர்கள் வாங்கவில்லை. ஆனால் அவர்களுக்கு குறைத்ததையே பெரும் சாதனை யாக மோடி அரசு பீற்றிக் கொண்டது.

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை யில் சமையல் எரிவாயு விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

உங்கள் பணம் உங்கள் கையில் என்ற பெயரில் மானியத்தை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப் போவதாக ஒன்றிய அரசு கூறியது. அதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 2020 ஜூன் மாதத்திலிருந்து மானியம் முற்றாக நிறுத்தப்பட்டு விட்டது. இதைக்கூட நேரடியாக அறிவிக்காமல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெற்றவர்களுக்கு மட்டுமே மானியம் என்று மாற்றி அதையும் கூட மாதத்திற்கு 200  ரூபா யாக குறைத்து நாடகமாடியது மோடி அரசு.

பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து ஏறு முகமாகவே உள்ளது. கடந்த 46 நாட்களாக விலை யில் மாற்றம் இல்லை என்று கூறப்பட்டாலும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100க்கும் அதிகமாக வைத்தே விற்கப்படுகிறது.வீட்டின் அடுப்பு எரிய விடாமல் செய்யும் மோடி அரசு மக்களின் வயிற்றை எரிய வைத்து ரசிக்கிறது.

;