headlines

img

வெகுஜன பட்டினி, யார் காரணம்?

முதலாளித்துவ சுரண்டலின் கொடிய - குரூர வடிவங்களை மேலும் அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது 2021 உலகப் பட்டினி குறியீடு பட்டியல். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் ஒப்புக் கொண்டுள்ள உலகப் பட்டினி குறியீட்டு அறிக்கை, 50 நாடுகளில் மக்களின் பட்டினி நிலவரம் மிக மிக கடுமையானதாக, பெரும் எச்சரிக்கை தருவதாக உள்ளது; இந்த நிலை 2021 இறுதியில் மேலும் தீவிரமானதாக மாறும் என்று குறிப்பிட் டுள்ளது.

உணவுப் பொருட்களின் அளவில்லாத விலை வாசி உயர்வும், ஏழை, எளிய மக்களின் கைகளுக்கு உணவுப் பொருட்கள் கிடைக்காததும்தான் தீவிர மான பட்டினி நிலைமைக்கு அடிப்படைக் காரண மாக குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் விலைவாசி கடந்த இரண்டாண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு செப்டம்பரில் உணவுப் பொருட்களின் விலைவாசி 32.8 சதவீதம் அதிகரித் துள்ளது. கோவிட் 19க்கு முன்பு உலக மக்கள் தொகையில் 43 சதவீதம் பேர் ஆரோக்கியமான உணவு கிடைக்கப் பெறாமல் இருந்தார்கள்; இது 2020 இறுதியில் 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. வளர்முக நாடுகளில் பெரும்பாலான மக்கள் தங்களது மொத்த வருமானத்தில் 40 முதல் 60 சத வீதத்தை உணவுக்காகவே செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை யில் 70 கோடி பேர் - அதாவது 8.8 சதவீதம் பேர் காலி வயிற்றுடனே தூங்கச் செல்கிறார்கள். மொத்தத்தில் 237 கோடி மக்கள் உணவு பாதுகாப்பு இல்லாத சூழலில் வாழ்கிறார்கள். 

இத்தகைய பட்டினி நிலைமை தீவிரமடைந்தி ருப்பதற்கும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு க்கும், காலநிலை மாற்றம் கோவிட் 19 பெருந் தொற்று ஆகியவற்றுடன் தீராத மோதல்களும் இணைந்து உலக மக்களை ஒரு நச்சு சுழற்சி பீடித்துள்ளது என்கிறது உலக பட்டினி குறியீட்டு அறிக்கை.

நச்சு சுழற்சி என்று அந்த அறிக்கை குறிப்பிடு வதன் உண்மையான பொருள் என்ன? 

கோடிக்கணக்கான மக்கள் தங்களது வருமா னத்தை, வாழ்வாதாரத்தை, பிழைப்பூதியங்களை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ள இதே உலகில் தான், இத்தனை பாதிப்புகளும் சூழ்ந்து இருந்த இதே காலகட்டத்தில்தான் உலகின் மெகா கோடீஸ் வரர்கள் சில நூறு பேர் மட்டும் மொத்தமாக 1.9 டிரில்லியன் டாலர் செல்வங்களை கூடுதலாக குவித்திருக்கிறார்கள். இந்த செல்வங்கள் எல்லாம் கோவிட் பெருந்தொற்று துயரத்தையும் தாங்கிக் கொண்டு உயிரை பணயம் வைத்து ஒட்டு மொத்த உலகப் பாட்டாளிகளும் தங்களது உழைப்பைச் செலுத்தி உருவாக்கிய மனித குலத்தின் மகத்தான செல்வங்களே ஆகும். ஆனால் பாட்டாளி மக்களின் உழைப்பால் விளைந்த அந்த செல்வம், அவர்களது சொந்தக் குழந்தைகளின் பட்டினியை தீர்க்க உதவ வில்லை; அவர்களது கல்வி, உடை, உறைவிட தேவைகளை பூர்த்தி செய்ய உதவவில்லை. இந்த பூவுலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் உணவை உறுதி செய்யவில்லை. முரணாக, இந்தியா உட்பட உலகின் அனைத்துப் பகுதிகளி லும் வெகு சில பணக்காரர்கள்  உண்டி கொழுத்து திரிகிறார்கள். 

வெகுஜனப் பட்டினி, முதலாளித்துவ சுரண்ட லின் கோரத்தாண்டவமே!

;