headlines

img

இரக்கமற்ற மத்திய அரசு....

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரணடாவது அலை காரணமாக மக்கள் கொத்துக்கொத்தாக செத்து விழுந்து கொண்டிருக்கின்றனர். ஞாயிறன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 2.4 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைவோர் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துவருகிறது. கொரோனாவை மிக மோசமாக கையாண்டஉலக நாடுகளின் தலைவர்கள் வரிசையில் பிரதமர்மோடி முதலிடத்தில் உள்ளார். 

நோய்த்தொற்று ஒருபுறம் மக்களை அச்சுறுத்தும் நிலையில் மறுபுறத்தில் ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து மத்திய அரசு குறைந்தபட்சம் பரிசீலிக்கக்கூட மறுக்கிறது. கடந்த அலையின் போது அளிக்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணமும் கூட மக்களுக்கு முறையாக கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களை மேலும் மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும் வகையில் மோடி தலைமையிலான அரசு இரக்கமற்ற முறையில் நடந்து கொள்கிறது.ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு மீண்டும் தொடர்ந்து ஏற்றப்பட்டு வருகிறது. ஞாயிறன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு15 காசும், டீசலுக்கு 26 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 1.03 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 1.39 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் நூறு ரூபாயை தாண்டி விட்டது.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருட்கள் மீதான வரியை ஓரளவு குறைத்தால்கூட மக்களுக்கு பெருமளவு நிவாரணம் கிடைக்கும். ஆனால் வரியைகுறைக்க நரேந்திர மோடி அரசு தயாராக இல்லை. 

பெருநோய் தொற்று காலத்தில் மக்களுக்கு ஆதரவாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு தயாராக இல்லை.  நாட்டில் பெரும்பாலான மரணங்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நிகழ்ந்துள்ளன. இத்தகைய மரணங்கள் இனப் படுகொலைக்கு சமம் என்று அலகாபாத் நீதிமன்றம்வர்ணித்தது.ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள் மற்றும் கோவிட் தொடர்பான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி, சுங்கவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்தியஅரசுக்கு பல மாநிலங்களிலிருந்து கோரிக்கை விடப்பட்டது. ஆனால் தடுப்பூசிகளுக்கு ஐந்து சதவீத வரி, மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு 12 சதவீத வரி அவசியம் என்று மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிடிவாதம் பிடித்தார். 

மேலும் இந்த வரியைக் குறைத்தால் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஏற்கெனவே செலுத்திய உள்ளீட்டு வரியை ஈடு செய்ய விலையை உயர்த்துவார்கள் என்று அவர் வியாக்கியானம் செய்தார்.ஆக்சிஜனை காற்றிலிருந்து பிரித்தெடுக்கும் கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்என தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்டது. ஒரு கொடுங்காலத்தில் விலை உயர்வு, வரி உயர்வு என கொரோனாவோடு சேர்ந்து மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறது மோடி அரசு.

;