headlines

img

நாவினில் அன்பு வைத்து...

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதியகல்விக் கொள்கை மாநிலங்களின் உணர்வுகளையும், ஆலோசனைகளையும் கேட்காமலேயே முற்றிலும் தானடித்த மூப்பாக நாடு முழுவதும் திணிக்கப்பட்டது. அதில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்பட்டாலும், கட்டாயமில்லை என்ற மத்திய அமைச்சரின் பேச்சு அதனைஅம்பலப்படுத்தியது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி என்பதுகட்டாயமில்லை. மாநில அரசுகள் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்யலாம் என்று கூறி தாய்மொழி கல்வியின்  வேரில் வெந்நீர் ஊற்றினார் மத்திய கல்வித்துறை அமைச்சர். அத்துடன் இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை அனைத்து மாநிலங்களிலும் திணிப்பதன் மூலம் சமஸ்கிருத மயமாக்குதல் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை அமல்படுத்த துடித்தது. இந்தக் கல்விக் கொள்கை தற்போது மாநிலத்தில் அமலில் உள்ள நடைமுறையை மாற்றி 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, கலைகல்லூரிகளில் சேருவதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு என்று ஏழை, எளிய மக்கள் கல்விக்கூட வாசலையே மிதிக்கவிடாமல் செய்யும்கபடத்தனம் நிறைந்தது. அதனால் நாடு முழுவதும்கல்வியாளர்களும் அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். 

ஆயினும் அதிமுக போன்ற பாஜகவின் ஆதரவாளர்கள் மூலம் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு மிகுந்த ஆணவப்போக்கையே கடைப்பிடித்தது. மாநில அரசுகளின், கல்வியாளர்களின் ஆலோசனைகளை கேட்காமலேயே கல்வி அதிகாரிகள் மற்றும்  ஆசிரியர்களிடம் பேருக்கு ஆலோசனை கேட்டது. அதுவும்கூட ஆலோசனை என்ற பெயரில் அதனை எப்படி அமல்படுத்துவது என்றே கருத்துக்கேட்டது. இந்தநிலையில் கல்விக் கொள்கையை மாநில மொழிகளில் குறிப்பாக தமிழில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

ஆயினும் காலம் கடந்து சனிக்கிழமையன்று மொழி பெயர்ப்புகள் 17 மொழிகளில் வெளியிடப்பட்டன. ஆனாலும் தமிழில் வெளியிடப்படவில்லை. இது தற்செயலான நடவடிக்கை என்றுகருதுவதற்கு இடமில்லை. ஏற்கெனவே கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் தமிழில் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டால்மேலும் கொந்தளிப்புகள் ஏற்படும் என்று கருதியே தவிர்க்க முயற்சித்தது மத்திய அரசு.இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் திங்களன்று தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பாஜகவினர் தமிழ் மொழி மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள்போல நடிப்பது அம்பலப்பட்டு போனது. பிரதமர் வெளிநாடுகளில் கூட வள்ளுவர் மற்றும் தமிழ் புலவர்கள் பற்றி பெருமிதமாக பேசி தமிழின் புகழ் பரப்புகின்றார் என்று சொல்வது வெறும் தேர்தல் கால நாடகமன்றி வேறல்ல என்பதுவெளிப்பட்டு விட்டது. நெஞ்சினில் நஞ்சை வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவர் போலநடிப்பார் ஞானத்தங்கமே என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. பாஜகவினர் எப்படித்தான் மாரீசவேடமிட்டு தமிழகத்தில்  நுழைந்தாலும் அவர்களது உண்மை ரூபத்தை கண்டறிந்து தமிழக மக்கள்புறக்கணிப்பார்கள்.

;