headlines

img

உரிமையை நிலைநாட்டுக!

“சுதந்திர தினத்தன்று  ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள்  மட்டுமே தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். வேறு எவரேனும் தேசியக் கொடி ஏற்றி குழப்பம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்’’ என  தமிழக அரசு எச்சரித்துள்ளது வரவேற்கத்தக்கது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இந்த கொண்டாட்ட வேளையில் நாட்டின் பல பகுதிகளில் இன்னமும் தீண்டாமை  நீடிப்பது வேதனையளிக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி 20 ஊராட்சிகளில் தேசியக் கொடியை தேர்ந்தெடுக்கப்பட்ட  பட்டியல் சாதி தலைவர்களால் ஏற்றமுடியவில்லை. 

கடந்த ஆண்டு கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் இதேபோன்ற பிரச்சனை எழுந்தபோது  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் முன்னி லையில்தான் கொடியேற்ற முடிந்தது. அந்த பெண் தலைவர் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து ஊராட்சி அலுவலக அறையில் நாற்காலியில் கூட உட்கார முடியாத நிலை இருந்தது. மாவட்ட நிர்வாகம் தலையிட்ட பின்னரே அவரால் நாற்காலியில் அமர்ந்து பணியாற்றமுடிந்தது.

சமீபத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய கள ஆய்வில்  42 ஊராட்சிகளில் தலைவர்களின் பெயரை பெயர்ப் பலகையில் எழுத முடியவில்லை. பெயர்ப் பலகை வைத்தால் தானே தலைவர் பெயரை எழுத வேண்டும் எனக் கூறி பெயர்ப் பலகை அகற்றப்பட்ட ஊராட்சிகளும் உள்ளன. தலைவர் நாற்காலியில் அமரமுடியாமல்  அலுவலகங்களில் தனித்து அமர வேண்டிய நிலையும் நீடிக்கிறது.  தலித் தலைவர்கள் பொறுப்பில் உள்ள பல ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டத்தில் தலித்துகள் மட்டுமே பங்கேற்கும் நிலையும் வேதனையளிக்கிறது.

சில இடங்களில் கொடியேற்ற அனுமதிக்கப் பட்டாலும், மற்ற பிரிவினர் கலந்து கொள்ளா மல் புறக்கணிப்பது போன்ற பாகுபாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.  தலித் தொகுதி களில் பொது வாக்காளர்கள் வாக்களிக்காமல் தலித்துகள் மட்டுமே வாக்களித்த ஊராட்சிகளும் தமிழகத்தில் உள்ளன. ஆய்வு மேற்கொள்ளப் பட்ட 386 ஊராட்சிகளிலும் ஏதேனும் ஒரு வடிவத்தில் தீண்டாமை நீடிப்பதை மாநில அரசு தலையிட்டு தடுத்து நிறுத்தவேண்டும்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விடப்பட்டுள்ள  சவால்.   அரசு அதிகாரிகள் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யாமல் சாதியப் பார்வையோடு சட்டத்தை வளைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 

தமிழக அரசும் உடனடியாக 20 ஊராட்சிகளி லும் தனி அதிகாரிகளை நியமித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக் கொடியேற்றுவதை உறுதிப் படுத்த வேண்டும். தமிழகத்தில் கொடியேற்றும் உரிமை மறுக்கப்படும் ஒரு கிராமம் கூட இருக்கக் கூடாது.

 

;