headlines

img

கூட்டாட்சியின் குரல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடை பெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கூட்டாட்சி அமைப்பு முறைக்கு எதிராக ஒன்றிய பாஜக கூட்டணி அரசு செயல்படக்கூடாது என்று மாநில முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசும் போது, பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்கள் தொடர்பாக சட்டம் இயற்றும் போது மாநில அரசு களின் ஆலோசனைகளை பெற வேண்டுமென் றும், மாநில பட்டியலில் உள்ள விவகாரங்களில் ஒன்றிய அரசு சட்டம் இயற்றுவதை தவிர்க்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

கேரள முதல்வர் கூறியுள்ள கருத்து கூட்டாட்சியின் குரலாகும். முன்பு மாநில பட்டிய லில் இருந்த கல்வித்துறை அவசர நிலைக் காலத்தின் போது பொதுப் பட்டியலுக்கு மாற்றப் பட்டது. ஆனால் புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில அரசுகளின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளாமல் கார்ப்பரேட் மற்றும் காவிமயக் கல்வியை புகுத்தும் வகையில் ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியது. மேலும் அதை நிர்ப்பந்தமாக மாநில அரசுக ளின் மீது திணித்து வருகிறது. குறிப்பாக தமிழக ஆளுநர் உட்பட பல ஆளுநர்கள் புதிய கல்விக் கொள்கையை தன்னிச்சையாக திணிக்க முயல்கின்றனர்.

அதேபோன்று மாநிலப் பட்டியலில் உள்ள விவ சாயத்துறையையும் ஒன்றிய அரசு கபளீகரம் செய்து ஒட்டு மொத்தமாக கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க துடிக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே மூன்று வேளாண்  திருத்தச் சட்டங்கள் ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டன. இதை ஏற்க மாட்டோம் என கேரளம், தமிழகம் உள்ளிட்ட சில மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறை வேற்றப்பட்ட போதும், ஒன்றிய அரசு அந்தச் சட்டங்களை கைவிடவில்லை. 

இந்திய விவசாயிகளின் ஒன்றுபட்ட வீரஞ் செறிந்த  தொடர் போராட்டத்தின் விளைவாகவே இந்தச் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசும் போதும், விவசா யத்துறை முற்றிலும் ஒன்றிய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது போன்ற தொனியில்தான் பிரதமர் பேசியுள்ளார். 

ஜிஎஸ்டி வரி எனும் விரிந்த வலை இந்திய மக்களின் கழுத்தை நெரித்து வருகிறது. ஆனால் இன்னமும் ஜிஎஸ்டி வரி வசூலை அதிகரிக்க வேண்டுமென்று பிரதமர் பேசியுள்ளார். ஜிஎஸ்டி வரி வருவாயில் கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உரிய பங்கீட்டை காலத்தில் வழங்குவதும் இல்லை. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி முழுவதையும் ஒன்றிய அரசே சுருட்டிக்  கொள்ள காலக்கெடு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மாநிலங்களுக்கு இழப்பீடு தருவதை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என கேரள முதல்வர் வலியுறுத்தியுள்ளது முற்றிலும் நியாயமானது. மாநில அரசுகள் ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் அநீதிகளை ஒன்று பட்டு எதிர்ப்பதன் மூலமே கூட்டாட்சியை நிலை நிறுத்த முடியும்.

;