headlines

img

ஊழலின் ஊர்வலம்

ஊழல் செய்தவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தப்பிக்க முடியாது. ஊழல் செய்தவர்களுக்கு கருணை காட்டமுடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி நீட்டி முழக்கி யுள்ளார். குஜராத் மாநிலம் கீவாடியாவில் மத்திய புலனாய்வுத்துறை மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய அவர் 2017ஆம் ஆண்டு தாம் ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தமக்குத் தானே நற்சான்றிதழ் வழங்கி கொண்டிருக்கிறார். 

இவர் ஊழலை ஒழித்த லட்சணத்தை ஊரறி யும், உலகறியும். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய வர்களில் ஒருவரைக்கூட பிடித்து வந்து நீதியின்  முன்னால் இவரது ஆட்சியால் நிறுத்த முடியவில்லை. மாறாக மல்லையா, நீரவ் மோடி, சோக்சி உள்ளிட்ட ஊழல் குற்றவாளிகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இந்த லட்சணத்தில் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கருணைக் காட்ட மாட்டோம் என்ற சவடால் வேறு. 

ரபேல் ஊழல் ஒன்று போதும் மோடி அரசின் நேர்மையான செயல்பாட்டிற்கு. புலனாய்வு அமைப்புகளை கையில் போட்டுக் கொண்டு, நீதித்துறையையும் வளைத்து ஊழலை மறைக்க முயன்றாலும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அதுகுறித்து நடைபெறும் விசாரணை உண்மையை உலகிற்கு சொல்லும். 

மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை கூட ஒரு உலக மகா ஊழல்தான். அதில் பாஜகவினரும், கார்ப்பரேட் முதலாளி களும் பெரும் லாபமடைந்தனர். நாட்டின் பெரும்பகுதி மக்கள் நடுத்தெருவில் விடப்பட்ட னர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வின் மகன் குஜராத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கள் மூலம் பெரும் தொகையை பண மதிப்பிழப்பு காலத்தில் சுருட்டியது எந்தக் கணக்கில் சேரும் என்று தெரியவில்லை.

தேர்தல் செலவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பல கோடி சுருட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. ஊழலுக்கு தலைமை தாங்குவதில் முதலிடத்தில் இருப்பது மோடி தலைமையிலான பாஜகதான்.   

முறைகேட்டை தடுப்பதற்காக சமையல் எரிவாயு முன்பதிவு மற்றும் விநியோகத்தை ஆன்லைன் மூலமாக செய்வதாகவும், கூறியுள்ள பிரதமர் இதுவும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைதான் என்கிறார். உங்கள் பணம் உங்கள் கையில் என்று கூறி சமையல் எரிவாயுக்கான மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதாக கூறிவிட்டு அவ்வாறு செலுத்தாமல் மோசடி செய்தது ஊழல் கணக்கில் சேராதா? 

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  அவர் பிரதமராக வந்தபிறகு ஒரு சில கார்ப்ப ரேட் முதலாளிகள் கொழுப்பதற்காக பல ஆயிரம் கோடி ரூபாயை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பதிலும் கூட பெருமளவு முறைகேடும், ஊழலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இவ்வள வும் செய்துவிட்டு ஊழலுக்கு எதிராக பேச ஒரு தனி தைரியம் வேண்டும். அது நிச்சயமாக மோடிக்கு இருக்கிறது. 

;