headlines

img

பதில் சொல்லுங்கள் ஜி....

“நன்றி மோடி ஜி” என்று நாடு முழுவதும் உள்ளமத்திய அரசு பள்ளிகளின் குழந்தைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிக் கடிதம் எழுதுமாறும், சில நிமிடங்கள் ஓடும் அளவிற்கு வீடியோக்கள் எடுக்குமாறும், இவற்றை குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிகள் சார்பில் சமூக ஊடகங்களில் பதிவுசெய்யுமாறும் பள்ளி முதல்வர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது கொடிய அலையை வெற்றிகரமாக தோற்கடித்து விட்டோம் என்று உள்துறை அமைச்சர் படாடோபமாக அறிவித்தார். கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகிஆதித்ய நாத் அறிவித்தார். இப்போது பிரதமருக்குநன்றி தெரிவிக்குமாறு குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

குழந்தைகள் விசயத்தில் இவர்களால் உண்மையை மறைக்க முடியவில்லை. இரண்டாவது அலை எத்தனை கொடியதாக இருக்கிறது என்பதையும் எத்தனை குழந்தைகளின் எதிர்காலத்தை பறித்திருக்கிறது என்பதையும் பார்த்தாலே, இந்தியாவின் பேரரசர்  நிர்வாணமாக நிற்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.சுமார் பத்து ஆயிரம் குழந்தைகள் கொரோனாவின் இரண்டாவது அலையில் தமது தாயையோ,தந்தையையோ அல்லது இரண்டு பேரையும் இழந்து தவிக்கிறார்கள். மே 29 அன்று இறுதி செய்யப்பட்ட விபரங்களின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் 4451 குழந்தைகள் தங்களது பெற்றோரில் ஒருவரை கொரோனாவுக்கு பலி கொடுத்திருக்கிறார்கள்; 141 குழந்தைகள் இரண்டு பேரையும் இழந்திருக்கிறார்கள். 

உத்தரப்பிரதேசத்தில் 2110 குழந்தைகள், பீகாரில் 1327 குழந்தைகள், கேரளாவில் 952 குழந்தைகள், மத்தியப் பிரதேசத்தில் 712 குழந்தைகள் எனபெற்றோரை இழந்த குழந்தைகளின் பட்டியல் நீள்கிறது. கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள்,பெற்றோரை இழந்த குழந்தைகளை தங்களது குழந்தைகளாகவே அறிவித்து அரவணைத்துக் கொண்டிருக்கின்றன. பெற்றோரை, உற்றோரை இழக்கும் குடும்பங்களின் பரிதவிப்பு இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை. ஏனென்றால் தேசிய அளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. பாதிப்பு பரவலை கட்டுப்படுத்த, முற்றாக தடுத்து நிறுத்த மருத்துவஅறிவியல் சமூகம் நமது கைகளில் கொடுத்திருக்கிற ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். ஆனால்ஆமை வேகத்திலேயே தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்தாண்டுஇறுதிக்குள் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டுமானால் இன்னும்188 கோடி டோஸ்கள் தடுப்பூசி தேவைப்படுகிறது. இதுவரையிலும் வெறும் 11 சதவீத மக்களுக்குத்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 89 சதவீத பேர் இன்னும் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் 23.8 கோடி பேருக்கு தடுப்பூசிசெலுத்தினால்தான் இலக்கை எட்ட முடியும். மேற்கண்ட பிரச்சனைகளுக்கு எந்த திட்டமிடலும் செய்யாத மோடி அரசு, இரண்டாவதுஅலையை எப்படி வெல்ல முடியும்?

;