headlines

img

அல்டிமேட் அறிவாளிகளும், ஆவரேஜ் திறமைசாலிகளும்!

அலுவலகத்தில் மிகவும் பரபரப்பாக இருந்த ஆனந்தியை வனஜா கூப்பிட்டாள், “ஆனந்தி மேடம் உங்களுக்கு கால்.’’  “யாருன்னு கேளுங்க?’’  “கேட்டேன் மேடம் ‘அனந்தராமன், டெல்லி’யாம்.’’ “இரு இரு இதோ வந்துடறேன்’’ என்று தேடிக்கொண்டிருந்த பைல்களையெல்லாம் போட்டுவிட்டு ஓடி வந்தாள் ஆனந்தி. “அண்ணா....., வாட் எ சர்ப்ரைஸ். எப்படிண்ணா இருக்கே. எப்படி என் நம்பரை தேடிக் கண்டுபிடிச்சே?’’ “அதுதான் பத்திரிகைக்காரன். நேத்துல இருந்து உன்னை தொடர்பு கொள்ளணும்னு தலைகீழா டக்கரடிச்சு உன்னை இப்போ பிடிச்சுட்டேன். ஆமாம் உன் செல்போன் ஏன் வேலை செய்யமாட்டேங்குது. எப்பப் பாத்தாலும் ஸ்விட்ச் ஆப்னு வருது?’’ “அது ஒரு பெரிய கதையண்ணா. அப்புறம் சொல்றேன். நேத்துல இருந்தா சென்னையில இருந்துகிட்டு என்னை தேடறீங்க.’’ “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேம்மா. சென்னைக்கு ஆபீஸ் விஷயமாத்தான் வந்தேன். அப்படியே உன்னை வீட்ல பாத்துடலாம்னு நெனச்சேன். வர்ஷன் எப்படியிருக்கான்?’’ “நல்லா இருக்கான் அண்ணா. அவனுக்கு இப்போ 10ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் இல்லையா. அதனால கொஞ்சம் நெர்வஸா இருக்கான். வீட்டுக்கு வாங்கண்ணா, எப்போ வர்றீங்க?’’ என்றாள். “முடிஞ்சா சாயங்காலமே வர்றேன் ஆனந்தி. உன்வீட்டு முகவரியை சொல்லு.’’ என்ற அனந்தராமனிடம் முகவரியை சொன்னாள் ஆனந்தி. காலிங்பெல் ஒலித்ததும் வீட்டுப் பணிப்பெண் வந்து கதவைத் திறந்தாள்.  “ஆனந்தி...?’’ என்று அனந்தராமன் விளித்ததும், “வாங்கய்யா அம்மா உள்ளே இருக்காங்க.’’  என்றவள் உள் அறையைக் காட்டிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள்.

அறைக்குள் நுழைந்தவன் வர்ஷன் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு டிவி பெட்டியை வெறிச்சோடி பார்த்துக் கொண்டிருந்ததையும், ஆனந்தி அவனருகில் சேரில் அமர்ந்து கொண்டு டீபாயின் மேல் வைக்கப்பட்டிருந்த செல்போனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததையும் கண்டு துணுக்குற்றான். அந்த அறையில் சோகம் ததும்பிய ஒரு மயான அமைதி நிலவியது. “ஆனந்தி..’’ என்று சொல்லி அங்கிருந்த அமைதியை கலைத்தான். ஏதோ யோசனையில் இருந்த ஆனந்தி சட்டென்று தன் சுயநினைவுக்குத் திரும்பி “அண்ணா வாங்கண்ணா.’’ என்றாள். “வர்ஷன் இவர்தான் உங்க மாமா நீ அடிக்கடி போன்ல பேசுவியே அனந்தராமன்.’’ என்றாள். அதற்கு வர்ஷன், “ஹாய் அங்கிள், எப்படி இருக்கீங்க’’ என்றான்.  “நான் நல்லாத்தான் இருக்கேன். ஏன் நீங்க ரெண்டுபேரும் இஞ்சி தின்ன குரங்குகளாட்டம் உட்கார்ந்துகிட்டிருக்கீங்க?’’ என்றான். “அதுவா அண்ணா, வர்ஷன் இந்த வருஷம் பத்தாம் கிளாஸ் பப்ளிக் எக்ஸாம் எழுதறதால அரையாண்டு தேர்வு முடிஞ்சதும் டிவி சேனலை கட் பண்ணிட்டோம். அதுனால கொஞ்சம் அப்செட் ஆகியிருக்கா.’’ “அதைப்பாத்து நீயும் சோகமாயிட்டியா தங்கச்சி?’’ என்ற அனந்தராமனை இடைமறித்து “அம்மா சோகத்துக்கு அது காரணமில்ல அங்கிள், நான் டிவி பார்க்கக்கூடாதுன்னா நீங்க இனிமே எக்ஸாம் முடியற வரைக்கும் செல்போனை தொடக்கூடாதுன் அம்மாகிட்டே கண்டிஷன் போட்டேன். சரிதானே.’’ என்றான். “நீ பண்ணது சரியா தப்பான்னு முடிவு பண்றதுக்கு முன்னடி உங்கம்மாகிட்டே கொஞ்சம் பேசிட்டு வர்றேன்.

ஆனந்தி இந்த ஐடியா உனக்கு யார் கொடுத்தது? ஸ்கூல்லயா, இல்ல நீயேவா?’’ என்று கேட்டான் அனந்தராமன். அதற்கு “ரெண்டுமேதான் அண்ணா.’’ என்றாள் ஆனந்தி.  “வர்ஷன் ஆவரேஜா எவ்ளோ மார்க் எடுப்பான்.’’  “70 முதல் 75 பர்சன்ட் வரைக்கும்.’’ “இன்னும் அதிகம் மார்க் வாங்கணும்னு டிவியை கட் பண்ணியாக்கும்.’’ “அதிக மார்க் மட்டுமில்ல. ஸ்கூல்ல முதல் மாணவனா வரணும்னு செஞ்சேன்.’’ “டிவியை கட் பண்ணினதுக்கப்புறம் ரிவிஷன் எக்ஸாம்ல எவ்வளவு மார்க் வாங்கினான்?’’ “65 பர்சன்ட். அதுதாண்ணா கவலையா இருக்கு.’’ வர்ஷன் பக்கம் திரும்பி, “வர்ஷா, டி.வி. இல்லாம உன்னால இருக்க முடியாதா?’’ “அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே அங்கிள். ரிலாக்ஸ் தேவைப்படும் போது ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கிட்டே அல்லது பால் குடிச்சுகிட்டே கொஞ்ச நேரம் காமெடி சீன் பாத்தா நல்லா இருக்கும்னு தோணுது. அதுக்கு விட மாட்டேங்கறாங்க.’’ “ஆனந்தி வர்ஷன் சொல்றதுல என்ன தப்பு?’’ “அண்ணா. ரிலாக்ஸ் பண்ணா பரவாயில்லை. ரிலாக்ஸ் பண்றேன்னு டிவியை போட்டுட்டு மணிக்கணக்கா பார்த்துகிட்டே இருந்தா?’’ “நீ தான் அவனுக்கு ஞாபகப்படுத்தணும், ரிலாக்ஸ் பண்ணது போதும், டிவியை ஆஃப் பண்ணிட்டு படிடா மகனேன்னு.’’ “வீட்டுல இருக்கறப்ப நீ சொல்றது ஓகே அண்ணா. ஆனா நான் ஆபீஸ்ல இருக்கும் போது இவன் டிவியே கதின்னு பாத்துகிட்டு இருந்தாண்ணா என்ன ஆவறது?’’ “முதல்ல வர்ஷன் மேல நம்பிக்கை வை ஆனந்தி. திரும்ப திரும்ப அவன்கிட்டே இந்த வருஷம் அவனுக்கு முக்கியமானதுன்னு ஞாபகப்படுத்திகிட்டே இரு. அவனுக்கும் புரியும்.

‘வெச்சா குடுமி, சிரைச்சா மொட்டை’ன்னு குழந்தைகள் விஷயத்துல பெற்றோர்கள் இருக்கக்கூடாது. தேர்வு சமயத்துல 24 மணி நேரமும் புத்தகமும் கையுமா இருக்கறது மனதளவுல அவங்களை பாதிச்சுடும். பொறுப்பை உணர வைக்க வேண்டியதுதான் நம்ப வேலை. பொறுப்பை உணர்ந்துட்டா அவங்களுக்கு எப்போ படிக்கணும், எப்படி படிக்கணும்னு நாம கத்துக் கொடுக்க வேண்டியதில்லை. நீ ஒரேயடியா எக்ஸாம் வரைக்கும் டிவியை கட் பண்ணினது நெகடிவா ரியாக்ட் ஆகியிருக்குங்கறதுக்கு சாட்சி மார்க்குல 5 பர்சன்ட் குறைஞ்சு போயிருக்கிறது. போ ஆனந்தி போய் ஸ்மார்ட் கார்டை எடுத்து டிவியில சொருகி டிவியை ஆன் பண்ணு.’’ என்றான் அனந்தராமன். “தேங்க்ஸ் அங்கிள்.’’ என்றான் வர்ஷன். “வர்ஷன் உன்னை டிவி பாக்க விடலேங்கறதுக்காக அம்மா செல்போன் பேசக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டது கொஞ்சம் கூட நியாயமில்ல. நீ டிவி பாக்காம இருக்கணும்னு சொன்னது உன் நன்மைக்காக. ஆனா ஒரு கவர்ன்மெண்ட் ஆபீஸ்ல வேலை பாத்துகிட்டு பத்து நூறு பேரோட பழகிக்கிட்டிருக்கற உங்க அம்மா கையில திடீர்னு செல்போன் இல்லேன்னா பாக்கறவங்க என்ன நெனப்பாங்க. நானே ரெண்டுநாளா ரொம்ப அவஸ்தை பட்டுட்டேன். என்னைப்போல எத்தனை பேரு உங்கம்மாவை கடந்த 10 நாளா தொடர்பு கொள்ள முடியாம இருக்காங்களோ தெரியல. எப்பவுமே நெனச்சுக்கோ அம்மா உன் நல்லதுக்காகத்தான் எதுவும் செய்வாங்க. அதுக்காக அவங்களை கஷ்டப்படுத்தக்கூடாது. என்ன புரிஞ்சுதா. அதோ டீபாய் மேல இருக்கற செல்போனை ஆன் பண்ணி அம்மாகிட்டே கொடு.’’ “கண்டிப்பா அங்கிள். அங்கிள் நீங்க ரியலி கிரேட்.’’ “அது கெடக்கட்டும் கழுதை.

நீ இப்போ  கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு படிக்கப்போறியா? இல்ல படிச்சுட்டு அப்பறமா டிவி பாக்கப் போறியா?’’ என்று கேட்ட அனந்தராமனுக்கு “இல்ல அங்கிள் நான் இப்போ படிக்கப்போறேன். 9.30 மணிக்கு நேத்து நடந்த  டி20 மேட்சோட ஐலைட்ஸ் வரும் அப்போ சாப்பிட்டுகிட்டே பாத்துக்கறேன் அங்கிள்.’’ என்றான். “சரி. ஆனந்தி நீ வா நாம ஹாலுக்கு போயிடு வோம். வர்ஷன் படிக்கட்டும்.’’ என்று  ஆனந்தியை அந்த அறையிலிருந்து அழைத்து வந்தான் அனந்தராமன். காபியை குடித்துக்கொண்டே, “ஒண்ணும் பயப்படாதே ஆனந்தி. இன்னும் எட்டுநாள் சென்னையிலதான் இருப்பேன். காலையில வர்ஷன் ரிவிஷன் எக்ஸாம் முடிச்சுட்டு வந்த பிறகு மதியம் நான் வீட்டுக்கு வந்துடறேன். அவனை நான் மோடிவேட் பண்றேன். என்ஜாய் பண்ணி படிக்க வைக்கறேன். படிக்கறதை சுமையா இல்லாம சுகமா மாத்தறேன். கூடவே என்னோட வேலையையும் இங்கயே உக்கார்ந்து பாத்துக்கறேன். ஓகேவா?’’ என்றான். “அது இல்லண்ணே, வர்ஷன் ஸ்கூல்லயே முதல் மாணவனா வரணும்னு நெனச்சேன்.’’ “ஆனந்தி. நீ பத்தாவது பன்னெண்டாவது படிக்கும்போது உன் ஸ்கூல்ல முதல் மாணவன்  அல்லது மாணவியா வந்தவங்க இப்போ என்ன  பண்ணிகிட்டிருக்காங்கன்னு உன்னால சொல்ல  முடியுமா? உன்னோட படிச்சவங்க மட்டுமில்ல,  என்னோட படிச்சு முதல் மார்க் வாங்கன வங்கல்லாம், அவங்க வாங்கன மார்க்குகளுக்கு இப்போ தத்துவ ஞானிகளாகவோ, கணித மேதைகளாகவோ, விஞ்ஞானிகளாகவோ இருக்கணும்.

எனக்கு தெரிஞ்சு  அப்படி யாரும் இருக்கறமாதிரி தெரியல. புள்ளி விவரங்களைப் பார்த்தால் இன்னிக்கு ஆராய்ச்சியாளர்களாகவோ, அறிஞர்களாகவோ, விஞ்ஞானிகளாகவோ இருக்கற பலபேர் அவங்களோட பள்ளிப் பருவத்துல ஆவரேஜ் மாணவர்களாகத்தான் இருந்திருக்காங்க. என்னைப் பொறுத்த வரைக்கும் முதல் மதிப்பெண் வாங்கறவங்கள்ல பெரும்பான்மையானவங்க நல்ல மனப்பாட சக்தி இருக்கறவங்க. அந்த வகையில அவங்களை அறிவாளிகள்னு வேணா சொல்லிக்கலாம். ஆனா ஆவரேஜா படிச்சுட்டு சமுதாயத்துல பெரிய ஆளா வர்றாங்க பாரு அவங்களை திறமைசாலிகள்னு சொல்வேன். வர்ஷனை நீ அறிவாளியாக்கப்போறியா இல்லை திறமைசாலியா மாத்தபோறியாங்கறதை நீயே முடிவு பண்ணிக்கோ.’’ “சரி நான் கிளம்பறேன். எட்டரைமணிக்கு எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. வர்ஷன்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிடறேன்’’ என்றவாறு வர்ஷன் இருந்த அறையின் கதவை திறந்தவன் வர்ஷன் சுவற்றின் முன்பு நின்று கொண்டு  “மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்ப தறிந்து ஏகுமென் சாலை! தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!” என உணர்ச்சியோடு சொல்லிக்கொண்டி ருந்தவனை குறுக்கீடு செய்ய விரும்பாமல் கதவை மூடிக்கொண்டு, “ஆனந்தி அவன் தமிழ் ரிவிஷன் படிக்க ஆரம்பிச்சுட்டான் அப்புறமா  சொல்லு நான் நாளைக்கு வருவேன்னு.’’ என்றவாறு படியிறங்கினான் அனந்தராமன்.

;