headlines

img

வெறுமனே ஒரு சந்திப்பு...

ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டையொட்டி கடந்தபுதன்கிழமை ஜெனீவாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான சந்திப்பையும் நடத்திச்சென்றிருக்கிறார். 

சர்வதேச ஊடகங்களில் இந்த சந்திப்பு பரபரப்புச் செய்தியாக இடம் பெற்றிருந்த போதிலும், இது வெறுமனே ஒரு மரியாதைநிமித்தமான சந்திப்பே தவிர வேறல்ல என்பதாகத்தான் அமைந்திருந்தது. சர்வதேச அரசியலில் அமெரிக்காவும், ரஷ்யாவும் இடைவிடாமல் பரஸ்பரம் எதிரெதிர் துருவங்களில் நின்று காய்களை நகர்த்திக் கொண்டேஇருக்கின்றன. பல சந்தர்ப்பங்களில் உலகிற்குபெரும் ஆபத்தை கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சிகளை ரஷ்யா முறியடிப்பதும் அதற்கு
பதிலடி என்ற பெயரில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுவதும் தொடர்கிறது. இந்த நிலையில், அமெரிக்கா, ரஷ்யா இடையிலான பதற்றத்தை சற்று தணிக்கும் விதத்தில் இரு நாட்டு தலைவர்கள் இடையிலான சந்திப்பை நடத்திட ஜோ பைடன் விரும்பியிருக்கிறார். அதை புடினும்ஏற்றுக்கொண்டு சந்தித்திருக்கிறார்கள். கடுமையான மோதல் சூழலில் இப்படிப்பட்ட ஒரு சந்திப்புநடந்தது வரவேற்கத்தக்கதே.

ஆனால், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான பைடன், அவருக்கு முந்தைய ஜனாதிபதிகளான டொனால்டு டிரம்ப் மற்றும் பாரக் ஒபாமாஆகியோருடன் ஒப்பிடும் போது மிக மிக தீவிரமான ரஷ்ய எதிர்ப்பாளர் ஆவார்.  அவர் ஏன்ரஷ்ய ஜனாதிபதியுடனான சந்திப்பை விரும்பினார் என்பது கவனிக்கத்தக்கது. உலக அரசியல்அரங்கில் சீனாவும், ரஷ்யாவும் கிட்டத்தட்ட அனைத்து தளங்களிலும் கைகோர்த்து நிற்பது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகவும், ஏற்க முடியாததாகவும் உள்ளது. ஏதேனும் ஒரு கட்டத்தில் இரு தரப்பினருடனும், சமாதானமாக செல்வது போல  காட்டிக் கொள்ள வேண்டியதேவை அமெரிக்காவுக்கு இருக்கிறது. அந்த தேவைதான் புடினை சந்திக்குமாறு பைடனை தள்ளியிருக்கிறது. 

ஆனால் இந்த சந்திப்புக்குப் பிறகும் அமெரிக்கா- ரஷ்யா உறவுகளில் பெரிய மாற்றம் வந்துவிடப்போவதில்லை. அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது, அடுத்த சில நாட்களிலேயே - ஞாயிறன்று - அமெரிக்க பாதுகாப்புஆலோசகர் ஜேக் சுள்ளிவன், ரஷ்யாவுக்கு எதிராக அளித்திருக்கும் பேட்டி. அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை என்றால் ரஷ்யா மீதான தடைகள் மேலும் தீவிரமாகும் என்று ஜேக் பேசியிருக்கிறார். இது ரஷ்யத் தரப்பில் கடும் கண்டன அலையை எழுப்பியிருக்கிறது. ஜேக் தனது பேட்டியில் வழக்கம் போல சீனாவுக்கு எதிராகவும் விஷம் கக்கியிருக்கிறார்.

உக்ரைன் விவகாரம், சிரியா விவகாரம், பெலாரஸ் பிரச்சனை, மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனை, சீனாவுடனான ரஷ்யாவின் நெருக்கம், ரஷ்யாவுடனான பிற நாடுகளின் நெருக்கம், கொரோனா பிரச்சனையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு சர்வதேச அரங்கில்கிடைத்த வரவேற்பு உள்பட அமெரிக்காவால்ஏற்றுக் கொள்ள முடியாத - ரஷ்யாவுடன் எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ள முடியாதபிரச்சனைகளே அதிகம். இந்த நிலையில் புடின் - பைடன் சந்திப்பு ஒரு வெற்று நிகழ்வே!

;