headlines

img

டிஜிட்டல் பிரேமில் சீரியல் சவப்பெட்டிகள்! - ஜிஜி

நாட்டு நடப்பு

‘‘எங்கே இன்னும் பத்மாவைக் காணோம்?’’ என்று அனத்திய ராமகிருஷ்ணனை, ‘‘அய்யோ ஆரம்பிச்சுட்டீங்களா. மணி இன்னும் 11.00 கூட ஆகலை அதுக்குள்ள எப்படிங்க வருவா? கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க.’’ என்றாள் அவர் மனைவி மோகனாம்பாள்.
‘‘நேத்து மாதிரி, ‘டைம் ஆயிடுச்சு, ஆபிஸ் போயிட்டு வர்றேன்’னு சொல்லிடப் போறா. உடனே போன் போட்டு கிளம்பிட்டாளான்னு கேளு.’’ என்றவரை, ‘‘நான் பண்ண மாட்டேன். இப்போ வண்டி ஓட்டிகிட்டிருப்பா. அவள் கிட்டே கதை கேட்டு இப்போ என்ன சாதிக்கப்போறீங்க? டாக்டர் என்னைத்தான் திட்டறாரு. சாயங்காலம் நார்மலா இருக்கற பிரஷர் காலையில ஏன் ஏறிடுதுன்னு. நர்ஸ் வந்து பிபி செக் பண்ற வரைக்கும் டென்ஷன் ஆகாம பொறுமையா இருங்க. அய்யய்ய... உங்களுக்கு கண் ஆபரேஷன் பண்ணிட்டு நான் படற பாடு இருக்கே, போதும்டா சாமி.’’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள்.
அப்போது அறைக்குள் நுழைந்த அவருடன் பணியாற்றிய நண்பர் முருகேசன், மோகனாம்பாளிடம் சைகையில் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு ‘‘ராமகிருஷ்ணன் சார் எப்படி இருக்கீங்க?’’ என்று கேட்டார். 
‘‘யாரு?’’
‘‘என் குரலை வச்சு அடையாளம் கண்டுபிடிங்க பாப்போம்.’’ என்றார்.
‘‘இது ‘ரம்யா ஸ்டோர்’ ராகவன் குரல் மாதிரியில்ல இருக்கு.’’ என்றார் ராமகிருஷ்ணன்.
‘‘டேய் நான் முருகேசன்டா, ஈரோட்டுல இருந்து வந்திருக்கேன்.’’
‘‘டேய் முருகு வாடா வாடா. நல்லா இருக்கியா? குடும்பம் எல்லாம் நல்லா இருக்கா? ‘ரம்யா ஸ்டோர்’ல ராகவன் வரும்போதெல்லாம் உன் ஞாபகம்தான் வரும் அச்சு அசலா அதே நடை உடை பாவனை, பேச்சு.’’ என்றார்.
‘‘ஆச்சர்யமா இருக்கேடா. என்னைப்போல் ஒருவனா.’’
‘‘அது ‘என்னைப்போல் ஒருவன்’ இல்லடா. ‘ரம்யா ஸ்டோர்’. ‘என்னைப்போல் ஒருவன்’ல வர்றது மகேஷ்வரன். அவர் குரல் கிட்டத்தட்ட நம்ம சூப்பிரண்டு சுப்பிரமணி இருந்தார் இல்லே, அவரது மாதிரியே இருக்கும்.’’
ராமகிருஷ்ணன் சொன்னதில் குழம்பிப்போன முருகேசன், ராமகிருஷ்ணனின் மனைவியை பார்த்தார், ‘‘அவர் சொல்றதெல்லாம் இந்த பாழாய்போன டி.வி. சீரியல்களின் பேருங்களும் அதுல வர்ற கேரக்டர்களும். அதை பாத்து பாத்து கண்ணு கெட்டு போயி இப்போ ஆபரேஷன் பண்ற லெவலுக்கு வந்துட்டாரு.’’
‘‘ஈரோட்டுல இருக்கும்போது சினிமாவுக்கு கூப்பிட்டாகூட வர்றமாட்டானே. ஆபீஸ் வேலை. சங்க வேலை. குடும்ப வேலைன்னு தானே இருந்தான். என்னடா நண்பா என்ன ஆச்சு?’’ என்று முருகேசன் கேட்க,
‘‘அதெல்லாம் அப்போ. ரிட்டயர் ஆகி சென்னைக்கு வந்தபிறகு. இங்கே எங்க போவறது? இந்த வயசுல யாரை நட்பாக்கிக்கிறது. அதனால ‘அதே காதுகள்’ ஆண்ட்ரூ சொல்ற மாதிரி ‘பாஸூக்கெல்லாம் பாஸ், டைம் பாஸ்’னு டிவியை பாத்துகிட்டிருக்கேன்.’’ என்றார்.
அந்த நேரம் ‘‘ஹாய் அப்பா... ’’ என்றவாறு அறைக்குள் நுழைந்தவளை,
‘‘வாம்மா பத்து, வா...வா... உனக்காக நான் ஒன்பதரை மணியிலிருந்தே காத்துகிட்டிருக்கேன். ஏன் பிரெண்டு முருகேசன் வந்திருக்கார் பாத்தியா?’’ என்றார்.
‘‘பாத்துட்டேம்பா. ஹாய் அங்கிள். எப்படி இருக்கீங்க?’’  
‘‘நல்லாயிருக்கேம்மா. நீ மூணாவது பொன்னுதானே. உங்களையெல்லாம் எப்படி கரை சேர்க்கப்போறேனோன்னு ரொம்ப பயந்துகிட்டிருந்தாரு உங்க அப்பா. இப்போ உங்களை இப்படி பாக்கறது சந்தோஷமா இருக்கு.’’ என்றார்.
‘‘முருகு. ஒரு அஞ்சு நிமிஷம் உட்காரு. பொண்ணுகிட்டே பேசிட்டு வந்துடறேன். அவள் ஒரு மணிக்குள்ள ஆபீஸ் போகணும்.’’ என்றவர், அதற்கு முருகேசன் சரி என்று சொல்வதற்குள்ளேயே ‘‘பத்து, ‘பார்வதி பொன்னம்மா’வுல என்ன ஆச்சுன்னு சொல்லு’’ என்றார்.
பத்மா தன் கைப்பையிலிருந்து ஒரு சிறு நோட்டை எடுத்து வைத்துக்கொண்டு, ‘‘அப்பா நேத்திக்கு பார்வதி அல்வாவும், பொன்னம்மா பாயாசமும் செஞ்சி ஒருத்தருக்கு தெரியாம இன்னொருத்தர் மாத்தி மாத்தி அதுல விஷத்தை கலந்துடதோட சீன் முடிஞ்சது இல்லியா. இன்னிக்கு பார்வதி அல்வாவை ஒரு கிண்ணத்துலயும் பொன்னம்மா பாயாசத்தை ஒரு கிளாஸ்லயும் ஊத்திக்கிட்டிருக்க, தெருவுல எதுவோ சத்தம் கேக்குது. ரெண்டு பேரும் தெருவுக்கு வந்து பாக்கறாங்க அங்க மூணாம் கிளாஸ் பசங்கள்ல இருந்து எட்டாம் கிளாஸ் பசங்க வரைக்கும் கோஷம்போட்டு பேரணி போய்கிட்டிருக்காங்க. ‘ரத்து செய் ரத்து செய் பொதுத்தேர்வை ரத்து செய்’னு கோஷம் கேக்குது. ஒரு பையன் கையில் தூக்கி பிடிச்சிக்கிட்டிருக்கற அட்டையில ‘பொதுத்தேர்வு எழுத நாங்கள் தயார், அமைச்சர்களே எங்களுடன் தேர்வு எழுத நீங்கள் தயாரா?’னு போட்டிருக்கு. அதை பாத்துட்டு மாமியாரும் மருமகளும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. அந்த நேரம் சர்ப்பிரைஸா வீட்டுக்கு வரலாம்னு வந்த கதிர்வேலு அந்த தெருவுல பேரணி வர்றதுனால பக்கத்து தெரு வழியா வீட்டுக்கு பின்புறமா வீட்டுக்குள்ள வந்து டேபிள்ல அம்மாவும் பொண்டாட்டியும் வச்சிருக்கற அல்வாவையும், பாயாசத்தையும் சாப்பிட்டுடறான். பேரணி தெருவை தாண்டி போனதுக்கப்புறம் வீட்டுக்கு வந்த பார்வதியும் பொன்னம்மாவும் வாயில நுரைதள்ளி கிடக்கற கதிர்வேலுவைப் பார்த்து அதிர்ச்சியோட நிக்கறாங்க. அதோட இன்னிக்கு எபிசோட் முடியுது.’’
‘‘சரிம்மா ‘நாமே இருவர் நமக்கேன் இன்னொருவர்’ தொடர்ல இன்னிக்கு என்ன நடந்தது?’’ என்று கேட்க கையில் இருந்த நோட்டில் சில பக்கங்களைத் தள்ளி பத்மா சொல்ல ஆரம்பித்தாள், ‘‘நாமே இருவர் நமக்கேன் இன்னொருவர்னு குழந்தை குட்டி இல்லாம ஜாலியா வாழ்ந்துகிட்டிருக்கிற தீபன் சாக்சி வாழ்க்கையில ஒரு டிவிஸ்ட்பா. சாக்சி திடீர்னு மயக்கம் போட்டு விழறா. அவளை தீபன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறான். அவளை செக் பண்ற டாக்டர் சாக்சி கர்ப்பமா இருக்கறதா சொல்றாரு. தீபனுக்கு அதிர்ச்சியாயிடுது. சாக்சி மேல சந்தேகப்படறான். டாக்டருக்கு எதிர்லயே ‘அது யாரோட குழந்தை?’னு கேக்கறான். அதிர்ச்சியில சாக்சி திரும்பவும் மயக்கம்போடறா.’’
‘‘பாவம்மா சாக்சி நல்ல பொண்ணு. சரி தெய்வீக உறவுகள் என்ன ஆச்சு? நேத்து தன்னோட 4வது கணவன் 3வது காதலியோட இருக்கறதை பாத்துட்ட ரேகா தன்னுடைய 2வது கணவன் கிட்டே உதவி கேக்கறான் அப்புறம்?’’
‘‘அதைக்கேட்ட 2வது கணவன் 4வது கணவனோட காதலியை கொல்ல கத்தியோட போறான். குத்தப்போற நேரத்துல அந்தப்பொண்ணு தன்னோட தங்கச்சின்னு தெரியுது. அப்போதான் அவனுக்கு தன்னோட 2வது அம்மா உயிரோட இருக்கற விஷயமும் தெரியுது. ஒரே குழப்பத்தோட நிக்கறான், அவ்ளதாம்பா நான் ஆபீஸ் கிளம்பறேன்.’’ என்று கிளம்ப ‘‘ஏம்மா ரம்யா ஸ்டோர், என்னைப்போல் ஒருவன் அதே காதுகள்ல்லாம் விட்டுட்டியே.’’
‘‘அதை நான் இன்னிக்கு ஆபீஸ்ல உட்கார்ந்து ஹாட்ஸ்பாட்ல பாத்துட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்பா. பாய்.  பாய் அங்கிள்.’’ என்று சொல்லி விட்டு கிளம்பிப் போனாள்.
‘‘டேய் ராமகிருஷ்ணா என்னடா இது? உனக்கே நல்லா இருக்கா. எப்படி இருந்த ஆளு நீ. இன்னிக்கு டிவி சீரியல்களுக்கு அடிமையாகிக் கிடக்கறே. சீரியல் பாத்தா மனசும் உடம்பும் மட்டுமில்ல ஒழுக்கமும் கெட்டுப்போயிடும்டா. மாமியார் மருமகளை கொல்ல திட்டம் தீட்டறதும், மருமகள் மாமியாரை பழிவாங்க சதியாலோசனை செய்யறதும். குடும்ப உறவுகளை கொச்சை படுத்தறதும், தினசரி பரபரப்புங்கற பேர்ல நாம கற்பனை பண்ணி பாக்க முடியாததை யெல்லாம் நிஜமாக்கி காட்டுற இந்த டிவி சீரியல்களை தூக்கி எறிடா முதல்ல. இதுக்கு உன் பொண்ணு வேற சப்போர்ட் பண்ணி உனக்காக சீரியல்களை பாத்து குறிப்பெடுத்து உனக்கு கதை சொல்றா. சகிக்க முடியலடா.’’
உடனே மோகனாம்பாள் குறுக்கிட்டு, ‘‘அவள் இதுக்கு சப்போர்ட் கிடையாதுங்க. அப்படி தினமும் வந்து டிவி சீரியல்களை அப்டேட் பண்ற மாதிரியிருந்தாதான் கண் ஆபரேஷன் பண்ணவே ஒத்துக்குவேன்னு அடம்புடிச்சு அதுக்கு அவ ஒத்துக்கிட்டதாலதான் இங்கே வந்து ஆபரேஷனே பண்ணிக்கிட்டார்.’’
‘‘ராமகிருஷ்ணா, டிஜிட்டல் பிரேமுக்குள் உனக்கு தெரியாமலேயே நீ சீரியல் சவப்பெட்டியை செஞ்சுக்கிறயோன்னு தோணுது எனக்கு. உன் மைண்ட்செட்டை மாத்தியாகணும். வீட்டுலயே முடங்கிக் கிடந்தா நம்மால இனிமே ஒன்னும் பண்ண முடியாதுன்னுதான் தோணும். வெளியே வா. நான் இப்போ ஓய்வூதியர் சங்கத்துல உறுப்பினரா இருக்கேன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சங்கத்துக்குப் போய் சமூகப் பிரச்சனைகளையும், நம்ம பிரச்சனைகளையும் பேசி வீட்டுக்கும் நாட்டுக்கும் எதுனா உருப்படியா செய்யணும்னு பாக்கறேன். அப்படி எதுவும் செய்ய முடியாட்டியும் பரவாயில்லை. உடம்பும் மனசும் தெம்பா இருக்கறதா ஃபீல் பண்றேன். இப்போ நான் சென்னையில நடக்கற ஓய்வூதியர் சங்க மாநாட்டுக்கு வந்திருக்கேன். உன்னையும் மாநாட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னுதான் வந்தேன். ஆனால் உனக்கு கண் ஆப்பரேஷன்னு கேள்விப்பட்டு இங்கே வந்தேன்.’’
‘‘…............................’’
‘‘இதப்பாருடா ராமகிருஷ்ணா, நம்மைப்போல ரிட்டயர் ஆனவங்க, வயசானவங்க எல்லாருக்கும் ஏதாவது வலி வியாதிகள் இருக்கத்தான் செய்யும். அதுக்காக ஒரு இடத்துல முடங்கி வாழ்க்கை அவ்வளவுதான்னு இருந்துடக்கூடாது. இயங்கிகிட்டே இருக்கணும். சென்னையில இருக்கற உனக்கு புத்தகத் திருவிழா, கருத்தரங்கம், சங்க கூட்டங்கள்னு நிறைய நிகழ்ச்சிகளில் போய் கலந்துக்க வாய்ப்புகள் இருக்குறப்ப அதை நீ பயன்படுத்திக்கணும், என்ன? நான் மாநாட்டை முடிச்சுட்டு ஊருக்கு போயிட்டு திரும்பவும் சென்னைக்கு 15 நாள் கழிச்சு வரவேண்டிய வேலையிருக்கு. அப்போ என்கூட வா. இங்க இருக்கற ஓய்வூதியர் சங்கததுல நம்ப தோழர்களை அறிமுகப்படுத்தி உன்னோட அவங்களை தொடர்ந்து தொடர்புல இருக்க செய்யறேன். என்ன?’’ என்ற முருகேசனிடம் 
‘‘கொஞ்சம் சவாலான காரியம்டா இது. ம்...இருந்தாலும் பரவாயில்லை, நீ 15 நாள் கழிச்சு வா. அதுக்குள்ள நான் தயாராயிடுவேன்’’ என்றார் ராமகிருஷ்ணன். முருகேசன் சொன்ன வார்த்தைகளில் உள்ள யதார்த்தங்கள் அவருக்குப் புரிந்தது. வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சந்தித்துவிட்ட அவருக்கு. டி.வி. தொடர்களை துறப்பது புது சவாலாக தெரிந்தாலும் சவால்கள் இருக்கும் வரைதான் உடலும் மனமும் வாழ்க்கையும் உயிர்ப்பாக இருக்கும் என்ற இயற்கையின் விதியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இருந்தது.

;