headlines

img

நிறையும் எடையும் ஒன்றா? - பவித்ரா பாலகணேஷ்

தெரிந்து கொள்வோம்

நமது அன்றாட பேச்சு வழக்கிலும் உரையாடலிலும் mass எனப்படும் நிறையையும் weight எனப்படும் எடையையும் ஒரே அர்த்தம் உள்ளவை என நினைத்து மாற்றி பயன்படுத்தி வருகிறோம்.   அப்படியானால் நிறைக்கும் எடைக்கும் என்ன வித்தியாசம்?   நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் (matter) அளவைக் குறிக்கும். அதே வேளையில் எடை  என்பது நிறையின் மீது புவியீர்ப்பு விசையானது செயல்படும் வீதத்தை பொறுத்தது. ஆகவே எடையின் அளவு புவியீர்ப்பு விசையைப் பொறுத்து மாறுபடும். ஆனால் நிறையின் அளவு புவியீர்ப்பு விசையின் தாக்கத்தால் மாறுபடாது. 

எடை = நிறை × ஈர்ப்புவிசை.

எடையையும் நிறையையும் ஒப்பிடுதல் 

இந்த பூமியில் ஒரே இடத்தில் இருந்துகொண்டு நாம் எடையையும் நிறையையும் ஒப்பிட்டால் நிறை மற்றும் எடையின் மதிப்புகள் ஒன்றுதான். ஆனால் நாம் இருக்கும் இடத்தை மாற்றி ஈர்ப்புவிசையின் அளவு மாறுபடும் இடங்களில் இச்சோதனையை செய்து பார்த்தால் நிறையும் எடையும் ஒன்றல்ல என்பது தெரியவரும்.  எடுத்துக்காட்டாக பூமியில் இருப்பதைப் போலவே நிலாவிலும் நமது உடலின் நிறை இருக்கும். ஆனால் நிலாவில் நமது உடலின் எடையின் அளவு பூமியில் உள்ளவாறு இருக்காது. அதற்கு காரணம் ஈர்ப்புவிசை.   ஆக பூமியில் ஒரு கிலோ எடை என்பது நிலாவில் ஒரு கிலோவாக இருக்காது. ஏனெனில் நிலாவில் ஈர்ப்புவிசையின் அளவு பூமியிலிருந்து மாறுபட்டது.  

ஒரு பொருளின் நிறை எங்கேயும் எப்போதும் மாறாது. ஈர்ப்புவிசை கூடும்போதும் குறையும்போதும் அதற்கேற்றார்போல் எடையானது கூடும் அல்லது குறையும்.  நிறையின் மதிப்பு ஒருபோதும் பூஜ்ஜியம் ஆக இருக்காது. ஆனால் ஒரு பொருளின் மீது எவ்வித ஈர்ப்புவிசையும் செயல்படாமல் போனால் அதாவது அவ்விடத்தில் ஈர்ப்புவிசை இல்லாமல் போனால் எடையின் அளவு பூஜ்ஜியம் ஆகும். அந்த பொருளுக்கு எடை இருக்காது அதாவது அதன் எடையின் தாக்கம் இருக்காது. விண்வெளியில் பொருட்கள் மிதப்பதைப்போன்று அப்பொருள் தரையைத்தொடாமல் மிதக்கும்.  நிறையானது எண்மதிப்பு மட்டுமே உடைய scalar அளவு.  எடையானது எண்மதிப்பும் திசையும் கொண்டது. அதாவது எடையானது இயற்பியல் கூற்றுப்படி vector அளவு. 

எடையானது பூமியை நோக்கிய திசை உடையதாக இருக்கும்.  
 

மற்ற கோள்களில் உங்களின் எடை என்ன? 

பூமியை விட மற்ற கோள்கள் வெவ்வேறான ஈர்ப்புவிசையைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக சூரியனில் நமது எடை பூமியில் உள்ளதைவிட 27.90 மடங்கு அதிகமாக இருக்கும். நிலாவில் மிகக்குறைந்த அளவாக 0.165 ஆல் நமது உடல் எடையை பெருக்கி வரும் அளவே இருக்கும். மேலும் பூமியிலிருந்து சிறிது வேறுபட்டு சனி கோளில் 1.139 மடங்காக நமது உடல் எடை இருக்கும். இப்போது சொல்லுங்கள் நிலாவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் எடை என்ன?
 


 

;