headlines

img

கொடுநோய் காலத்திலும் கொடுமை செய்யும் இஸ்ரேல்.....

பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் பெரும் பதற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்துவதாக உள்ளது. இது பெரும் போராக மாறக்கூடிய ஆபத்து உள்ளது என்று ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் இரண்டு கோபுரங்களை தகர்த்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்ததிங்களன்று முதல் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் 13 சிறார்கள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.காசா பகுதியில் வீதியெங்கும் கட்டிடங்கள் இடிந்து சிதைந்து கிடப்பதாகவும் ஏராளமான வாகனங்கள் உருக்குலைந்து போயிருப்பதாகவும்  தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேல் பகுதியை நோக்கி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாக தாங்கள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் நியாயப்படுத்தி வருகிறது. மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தி வருவதால் அப்பாவி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் பலியாகியுள்ளனர். 

இத்தகைய தாக்குதல்கள் துவக்கம்தான். இன்னமும் பெரியளவிலான தாக்குதலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்று இஸ்ரேல் கொக்கரிக்கிறது. கிழக்கு ஜெருசலேம் நகரில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்த இஸ்ரேலிய இன வெறியர்கள் திட்டமிட்டுள்ளனர். பெரும் வன்முறைக்கு வித்திடக்கூடும் என்பதால் இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 1967 ஆம் ண்டு கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனர்களிடமிருந்து பறித்ததை கொண்டாடும் வகையில் யூத இனவெறி அமைப்புகள் இத்தகையஅணிவகுப்பை நடத்தி வந்துள்ளனர். ரமலான் மாதத்தில் நடக்கும் இந்த அணிவகுப்பு தங்களைஆத்திரமூட்டுவதாக பாலஸ்தீன தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில்தான் இருதரப்பு மோதல் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தின் கொடூரமான தாக்குதல் நடந்து வருகிறது. 

இந்த பகுதியில் அமெரிக்க வல்லாதிக்கத்தின் ஏவலாளாக செயல்படும் இஸ்ரேல் தொடர்ந்து ஆத்திரமூட்டும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பாலஸ்தீன மக்களின் தாயகத்தை பறித்ததோடு தொடர்ந்து அந்த மக்களை வெளியேற்றி வருகிறது. இஸ்ரேலின் இந்த அடாவடி நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் விவாதம் முன்னுக்கு வரும்போது அமெரிக்கா, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு வக்காலத்து வாங்கி ஊக்குவித்து வருகிறது. இதனால் இஸ்ரேல் தொடர்ந்து அடாவடியாக செயல்பட்டு வருகிறது. 

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கொரோனா பெருந்தொற்றில் உலகமே சிக்கித் தவிக்கும்போது கூட இஸ்ரேல் தன்னுடைய ஆக்கிரமிப்பு தாக்குதலை நடத்துவது கண்டிக்கத்தக்கது. ஐ.நா. உள்ளிட்ட சர்வதேசசமூகம் உடனடியாக தலையிட்டு இந்த அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

;