headlines

img

பயனில சொல்லாமை! -கோவி.பால.முருகு

பலரும் வெறுக்கும் பயனிலாச் சொல்லைப்
  பாரில் சொல்வோன் பழிக்கப் படுவான்!
பலரின் முன்னே பயனில சொல்லல்
  பண்புடை நட்பிடம் அறங்கெட நடத்தல்!

அறமிலான் என்பதைப் பயனிலாச் சொல்லே
  அழகாய்க் காட்டிக் கொடுத்திடும் நன்றாய்!
அறிவொடு பொருந்தா பயனிலாச் சொல்லால்
அறத்தொடு பொருந்தா நன்மை நீங்கும்!
  
பண்புடைப் பெரியோர் பயனில சொன்னால்
  பயன்தரு மதிப்பொடு புகழும் நீங்கும்!
பண்பில் சொல்லைப் பலமுறை கூறுவோன்
  பதரென மக்களுல் பழிக்கப் படுவான்!

அறமில் சொற்களைச் சொல்வதை விடவும்
  ஆக்கமில் சொல்லைச் சான்றோர் கூறார்!
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
   ஆக்கமில் பெரும்பயன் தராத சொல்லை!

மயக்கம் தெளிந்த மாசற்ற அறிவினார்
  மறந்தும் கூடப் பயனில சொல்லார்!
பயன்தரும் சொல்லைச் சொல்லுக என்றும்! 
  பயன்தராச் சொல்லைப் பழிப்பதே நன்றாம்!

சொல்லில் உள்ள சிறப்பை அறிந்து 
  சொல்லிடு தேர்ந்து சோர்விலை உனக்கு!
வல்லமைச் சொல்லே வாய்க்கப் பெற்றால்
   வாழ்க்கைச் சிறப்பை வழங்கிடும் உனக்கு!

;