headlines

img

நான் பெயிலானதற்கு பொருளாதார வீழ்ச்சிதான் காரணம்!

ஆசிரியர் பரந்தாமனுக்கு கவலையாய் இருந்தது. சென்ற வருடமெல்லாம் நன்றாக படித்து எல்லா பாடங்களிலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கிய செழியன் இந்த வருடம் ஆரம்பத்திலிருந்தே மதிப்பெண்கள் குறைவாக வாங்குவது அவருக்கு கவலையை ஏற்படுத்தியது. நுணுக்கமான பையன். நடுத்தர வர்க்கம். அவனை படிக்கவிடாமல் ஏதோ ஒன்று தடுக்கிறது. அதை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்தார். மாணவர்கள் எழுந்து நின்று வணக்கம் சொல்லி முடித்ததும் செழியனை கூப்பிட்டார். அவன் எழுந்து நின்றான். ‘‘என்ன செழியன் போன வருஷம் இருந்த மாதிரி இல்ல நீ. கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதையா உன்னோட மதிப்பெண் குறைஞ்சு காலாண்டு தேர்வுல பெயிலாயி இருக்கே. என்ன காரணம்?’’ ‘‘சார் நான் மதிப்பெண் குறைவா வாங்கினதுக்கு பொருளாதார வீழ்ச்சிதான் காரணம் சார்.’’ என்றான் அவன். அவன் பதிலைக்கேட்டு ஆசிரியர் பரந்தாமனுக்கு சிரிப்புடன் கலந்த கோபம் வந்தது. ‘‘டேய், நீ மதிப்பெண் குறைவா வாங்கினதுக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் என்னடா சம்பந்தம்?’’ என்று கேட்டார். ‘‘இந்த வருஷம் எனக்கு பள்ளிக்கூட கட்டணம் கட்டவே எங்கப்பா கடன் வாங்க வேண்டியதாயிடுச்சி சார்.’’ ‘‘ஏன் உங்கப்பா உன் படிப்பு செலவுக்கு முன்கூட்டியே திட்டமிடலியா?’’ ‘‘திட்டமிட்டார் சார். ஆனா அவர் வேலைபாக்கற கம்பெனியில திடீர்னு சம்பளத்தை குறைச்சுட்டாங்க. முடிஞ்சா வேலை பாருங்க, இல்லேன்னா கிளம்புங்கன்னு சொல்லிட்டாங்க. அதனால வேற வழியில்லாம கடன் வாங்கினாரு.’’ ‘‘சரி, கடன் வாங்கறது பீஸ் கட்டறது எல்லாம் உங்கப்பா வேலை.

அவர் கஷ்டப்பட்டு கடன்வாங்கி உன்னை படிக்க வைக்கறதைப் பாத்து நீ வெறியோடல்லவா படிக்கணும்?’’ ‘‘ஆமாம் சார். அதுக்காகத்தான் வீட்டுக்கு பக்கத்துலயே கணக்குக்கும், அறிவியலுக்கும் டியூஷன் போய்க்கிட்டிருந்தேன். ஆனா ரெண்டு மூணு மாசமா, புரடக்ஷன் இல்லன்னு ஐந்து நாள் பத்துநாள்னு பேக்டரியை மூடிட்டதனால அப்பாவோட சம்பளம் அதலபாதாளத்துக்கு போயிட்டுது சார். அதனால நானே டியூஷன் போகாம நின்னுட்டேன்.’’ ‘‘டியூஷன் போனாத்தான் நல்லா மதிப்பெண் வாங்கமுடியும்னு யார் சொன்னா உனக்கு? உன்னுடைய சந்தேகங்களை நீ நம்ப பள்ளிக்கூட ஆசிரியர்களிடமே கேட்டு நிவர்த்தி பண்ணிக்கலாமே?’’ ‘‘உண்மைதான் சார். ஆனா அதுக்குள்ள ரெண்டாவது டெர்ம் பீஸ் கட்டறதுக்கு நம்ம ஸ்கூல்ல லெட்டர் குடுத்துட்டாங்க சார்.’’ ‘‘அதனால...?’’ ‘‘அதனால எங்கப்பாவுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல சார். அப்பா கஷ்டப்படறதை பாத்துட்டு எங்கம்மா அவங்க அம்மா அப்பா, இல்ல அவங்க அண்ணன் தம்பி யாருகிட்டயாவது கடன் வாங்கிட்டு வர்றேன்னு ஊருக்கு கிளம்பி போயிட்டாங்க.’’ ‘‘அப்புறம் என்ன, ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டுட்டு ஒழுங்கா படிக்க வேண்டியதுதானே?’’ ‘‘ஓட்டல்ல டீக்கு கூட ஜிஎஸ்டி போடறான் சார். எதுக்கு இந்த வம்புன்னு தினமும் சோறு பொங்கி தண்ணியோ, தயிரோ இருக்கறதை ஊத்தி திண்ணோம் சார், ஒரு வாரமா நானும் எங்கப்பாவும்.’’ ‘‘சரி ஊருக்கு போன உங்கம்மா சட்டுபுட்டுன்னு கடன் வாங்கிக்கிட்டு வராம அங்கேயே ஏன் ஒரு வாரமா டேரா போட்டுட்டாங்க?’’ ‘‘சார். ஊர்ல இதைவிட மோசமாம் சார். எங்க தாத்தாவும் பாட்டியும் கைவினை பொருட்கள் செய்வாங்க.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் அவங்களால தொழில் செய்ய முடியலயாம். அப்படி செஞ்சாலும் வரியெல்லாம் போய், வர்ற காசு வாய்க்கும் வயித்துக்குமே எட்டமாட்டேங்குதாம்.’’ ‘‘செழியன், உன்னோட பள்ளிக்கூட பீஸை அம்மா அப்பா எப்படியாச்சும் கட்டிடுவாங்க. நீ பழையபடி படிப்புல கவனத்தை செலுத்து. அப்பாவுக்கு சம்பளம் குறைஞ்சுடுச்சு, அடிக்கடி பேக்டரிக்கு லீவு விட்டுடறாங்க, கிராமத்துல சிறுதொழில்கள் நசிஞ்சு போய்க்கிட்டிருக்கின்ற கவலை எல்லாம் உனக்கு இப்ப வேணாம். என்ன.’’ ‘‘என் கவலை அது இல்ல சார். நான் படிச்சு மட்டும் என்ன பண்ணப்போறேன்னு தெரியல. இப்பவே தமிழ்நாட்டுல வேலையில்லா பட்டதாரிகள் நாலரை லட்சம் பேர் இருக்கறதா புள்ளிவிவரம் சொல்லுது. எனக்கு முன்னாடி படிச்ச இவங்களுக்கே வேலை கிடைக்கலேன்னா எனக்கு மட்டும் எப்படிசார் கிடைக்கும்?’’ ‘‘அப்படியெல்லாம் விரக்தியாயிடக்கூடாது செழியன். இந்த நிலை இப்படியே இருக்காது. கண்டிப்பா மாறும். வீழ்தலும் எழுதலும், விடிதலும் மறைதலும் மாறி மாறி நடந்துகிட்டேயிருக்கும்கிறது இயற்கையின் நியதி. இப்போ படிச்சு வச்சா என்றைக்கிருந்தாலும் வேலை கிடைக்கும்.’’ ‘‘இப்ப ஒத்துக்கறீங்களா சார் நான் பெயிலானதுக்கு, பொருளாதார வீழ்ச்சிதான் காரணம்னு.’’ ‘‘ஆமாண்டா, நீ சொல்றதையெல்லாம் வெச்சுப் பார்த்தால் ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும் போலருக்கு.’’

‘‘அப்படின்னா எனக்கு ஒரு உதவி பண்ணுங்க சார்.’’ ‘‘சொல்லு.’’ ‘‘பொருளாதார வீழ்ச்சி காரணமாக தொழிற்சாலைகளுக்கு நம்ம நிதியமைச்சர் வரிகளை குறைத்து வரிச்சலுகை கொடுத்தாங்க இல்ல. அதுபோல பெயிலாயிட்ட என்னைப்போன்ற பசங்களுக்கு மதிப்பெண்ணுல சலுகை கொடுத்து போனஸ் மதிப்பெண் போட்டு பாஸ் பண்ணிவிடுங்க சார்.’’ என்றான் செழியன். அதைக் கேட்டு டென்ஷனான ஆசிரியர் பரந்தாமன், ‘‘கண்ணா, நான் கவர்ன்மென்டும் இல்ல, நீ கார்ப்பரேட்டும் இல்ல. வரிச்சலுகை போல மதிப்பெண்ணுல சலுகை கொடுக்க.’’ ‘‘சார் யதார்த்தத்தை புரிஞ்சுகிட்ட பின்னாலும் விவசாயிகளை கைவிட்டுட்ட அரசாங்கம் மாதிரி நடந்துக்காதீங்க சார்.’’ என்றவன் ‘‘இந்த சலுகை செய்யுங்க சார். சர்தார் பட்டேல் மாதிரி எங்க மனசுக்குள்ள உங்களுக்கு சிலை வைக்கிறோம்.’’ என்றான். ‘‘தம்பி. போதும். தயவு செஞ்சு உட்காரு. என் வேலைக்கு உலை வெச்சுடாதே. நாளையிலருந்து நியூஸ்பேப்பரை படிக்கறதையும் நியூஸ் சேனலை பாக்கறதையும் விட்டுட்டு பாடப்புத்தகத்தைப் படி. அப்பதான் உருப்படுவே’’ என்று சொல்லிவிட்டு புது பாடத்தை நடத்த ஆரம்பித்தார். 

;