headlines

img

பச்சோந்தியின் “ அம்பட்டன் கலயம்”- - ஏகாதசி

“அ   ம்பட்டன் கலயம்” நூலுக்கு  2018 ன் சிறந்த கவிதை நூலுக்கான விருதினைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கி கவுரவித்திருக்கிறது. இதன் ஆசிரியர் பச்சோந்தி. இது புனைப்பெயர். இயற்பெயர் ரா.ச. கணேசன். இவர் ஆனந்த விகடனில் பணிபுரிகிறார். 2015ல் “வேர்முளைத்த உலக்கை”யும் 2016ல் “கூடுகளில் தொங்கும் அங்காடி”  ஆகியவை இதற்கு முன் வெளிவந்த இவரது கவிதை தொகுப்புகள் ஆகும். இந்நூலை “வம்சி” பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்த நூல் எவற்றையெல்லாம் பாடு பொருட்களாக உள் வைத்திருக்கிறது என்பதற்கான சான்று இந்த நூலின் தலைப்பு. “அம்பட்டன் கலயம்” என்ற சொல்லுக்குள் இல்லாத அரசியல் இல்லை, அவமானம் இல்லை, கண்ணீர் இல்லை என்று சொல்லலாம். மண்டையோடுகளுடன் போராடிய விவசாயிகளுக்கு இந்நூலை இவர் சமர்ப்பணம் செய்துள்ளார். அம்பட்டன் கலயத்தைத் தொடும் பொழுது சுடவே செய்கிறது காரணம் இது அடித்தட்டு மக்களின் வெக்கை மிகுந்த வாழ்வை விசாரணை செய்திருக்கிறது அல்லது ஈரப்பசை துளியும் இல்லாத இளைத்துப் போன உயிர்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை படம் பிடித்திருக்கிறது. நிலம் இழந்த விவசாயிகளின், செத்து மடிந்து கொண்டிருக்கும் தாவரங்களின், எட்டு வழி சாலையால் அழிந்துபோன வாழ்க்கைகளின் ரத்த சாட்சியம்தான் இந்த தொகுப்பு.   “யாராக இருப்பார்கள் நடை பாதை விளக்கொளியில் வேர்க்கடலை விற்பவர்  பிரண்டை கட்டு விற்பவர், குப்பைத் தொட்டியை அள்ளித் தின்பவர் கீழ்ப் படிக்கட்டில் பாலித்தீன் விரிப்புகளில் வாழைப் பழங்களை விற்பவர் யாராக இருப்பார்கள். தெருவுக்குப் பெயர் இல்லை கதவுக்கு எண் இல்லை அவர்கள் தான் என்று சொல்ல அடையாள அட்டை இல்லை எட்டுத் திசைகளிலும் சிரிப்பொலியில் திறந்து திறந்து மூடுகிறது அவர்களது வெளி” எனச் சொல்கிறார். இது நாம் அன்றாடம் தெருக்களில் சந்தைகளில் சந்தித்து இவர்களின் வலி அறியாமல் பேரம்பேசி திட்டிக் கடக்கின்றோமே என்கிற நம்மின் மனசாட்சியை உலுக்கி எடுக்கிறது.  “கொஞ்சம் கூட நகராமல் ஏன் அந்த நாய் அலையும் ஈரத்தின் மீதே படுத்திருக்கிறது கடலின் நுரைகளில் எதைப் பறிகொடுத்தது 

எதை எதிர்பார்க்கிறது ஏதோ ஒன்று இருந்துவிட்டுப் போகட்டுமே நிவாரண முகாம்களுக்கு சற்று சென்று எச்சில் இலையாவது நக்கி விட்டு வரலாம் தானே 
பாவம் அந்த கடல் 
எத்தனை முறை தான் 
அடி வயிற்றில் அடித்துக்                 கொள்ளும்” 
-“இருந்துவிட்டுப் போகட்டும்” என்கிற தலைப்பில் உள்ள இந்தக் கவிதை உள்ளுக்குள் வெப்பமேறிக் கிடைக்கிற சொல்ல முடியாமல் தவிக்கிற  நுண்ணரசியலை ஊசி குத்தலாய் வெளிப்படுகிறது. 
நாம் பார்க்கும் ஒன்றை அடர்த்தி குறையாமல் இறக்கி வைத்தாலே அல்லது எழுதி வைத்தாலே அதில் அழகியல் வந்து அமர்ந்து கொள்ளும் என்பதற்கு உதாரணமாக இந்நூல் செயல்பட்டிருக்கிறது. 

“நர நரத் தண்டுகளோடு கோபுரம் கோபுரமாய் பூத்துள்ளன மொச்சைப்  பூக்கள்” 
என்று சொல்கிற போதும் 'கோயம்பேடு' பற்றிய கவிதையில் 
“தலைகீழான காளான்களை போல் தொங்கும் விளக்குகள்” 
என்று சொல்கிற போதும் நமக்கு தேவையான பிம்பங்கள் நிறம் மாறாமல் வாசம் மாறாமல் மனதில் தங்கி விடுகின்றன. 

மாட்டுக் கறி சுக்கா செய்முறை கவிதையைப் படித்துவிட்டு மாட்டுக்கறி சாப்பிட்டு விட்டு வராமல் மீண்டும் அந்தத் தொகுப்பை தொடர முடியாத அளவிற்கு மாட்டுக்கறியின் சுவை நம்மை தொற்றிக் கொள்கிறது. மாட்டுக்கறி உண்பவர்களை தீட்டு என்பவன் கூட இந்த கவிதையை வாசித்தால் இரண்டு துண்டங்களையா வது திருடி தின்பான் என்பது என் எண்ணம். 

“கையோடு வீடு” 
என்கிற தலைப்பில்....
வீட்டை தூக்கிக்கொண்டு                 அலைகிறேன் 
புதிதாய் வாங்கிய இடத்தில்                 கட்டிய கனவு வீடு 
இப்போது அங்கே முடிவற்ற தார்ச்சாலை செல்கிறது அரளி காற்று வீசியபடி  அதைச் சொந்த ஊருக்குத் தூக்கிச் செல்கிறேன்  அங்கே ஓர் அணு உலை புகைத்தபடி இருந்தது  மாமன் ஊருக்கு தூக்கிச் சென்றேன் அங்கே மீத்தேன் வாயு வெடித்தபடி இருந்தது  அத்தை ஊருக்கு தூக்கிச் சென்றேன் அங்கே நிலக்கரி வெட்டியபடி இருந்தது இனி எங்கே தான் தூக்கிச் செல்வது இவ்வீட்டை  பேசாமல் கையிலேயே வைத்திருக்கலாமென்று நினைக்கி றேன் என் காட்டுக் குருவிகளோடு 

என் காட்டுக் காற்றோடு 
என் காட்டுப்பூச்சிகளோடு 
என் காட்டு வானத்தோடு" 

இந்தக் கவிதை எத்தனை விசனங்களைக் கொண்டது என்பதை அனுபவமற்ற மனிதர் அறியார்.  ஒருவேளை வீட்டை வாழ்நாளெல்லாம் தன் முதுகில் சுமந்து திரியும் நத்தை அறியக் கூடும்.  இப்படியாக இந்தக் கவிதைத் தொகுப்பு சமூகத்தின் மிகுந்த அக்கறையுடன் களமாடி வென்றிருக்கி றது. மனித இனத்திற்காக மட்டு மன்றி சகல உயிரினங்களின் உரிமை கள் பறிக்கப்படுவதற்காகவும் போராடு கிறது நூல். நிலம், நீர், காற்று, தாவரங்கள், விலங்குகள், பறவைகள், அம்மா,அப்பா, அக்கா, தம்பி, மாமரம், சந்தியாகு மாமா என பக்கங்கள் நெடுகிலும் அதனதன்  இத்துப் போன வாழ்வைப் பதியம் போட்டு மறுவாழ்வுக்கு வழிசெய்யும் “அம்பட்டன் கலயம்” மரியாதைக்குரியது. இந்த நூலை நமக்களித்த “வம்சி”யின் பணி சிறந்தது. நூலாசிரியர் கவிஞர் பச்சோந்தி போற்றத்தக்கவர்.

 

;