headlines

img

பொக்கே கடைகளும், சில போராட்டங்களும் கற்றுத்தந்தவை! - ச்ஜிஜி

‘இங்கே ஒரு நிமிடம் நின்று ரோஜாக்களின் வாசத்தை நுகர ஞாபகம் கொள்ளுங்கள்’.. எங்கள் தெரு முனையில் இருக்கும் பொக்கே மலர்க் கடையின் பக்கவாட்டுப் பலகையில் எழுதப்பட்டிருக்கும் இந்த சொற்றொடரை தெருமுனையைக் கடந்து செல்லும்போதும், வரும்போதும் பார்த்து ஒவ்வொருமுறையும் எனக்குள் நான் சிரித்துக் கொள்வேன். நாயாக, பேயாக அலைகிற இந்த வாழ்க்கையில் சுவாசம் விடுவதற்கே நேரமில்லை. இதில் ரோஜாவின் வாசத்தை எங்கே போய் நுகர்வது?  எந்த டிவி சேனல்களைத் திறந்தாலும் காட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஷாகின்பாக், வடகிழக்கு தில்லி, வண்ணாரப்பேட்டை, என்ஆர்சி, என்பிஆர், சிஏஏ எதுபற்றியும் எனக்கு அக்கறை இல்லை. பிஸியான வேலை, ப்ராஜக்ட் குறித்த சிந்தனை, புரமோஷன், சம்பள உயர்வு போன்ற சுயநல வாழ்க்கைச் சூழலில், இன்னும் பணம், இன்னும் பணம் என்று இயந்திரத்தனமாய் இயங்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு பொக்கே கடைகளும், போராட்டங்களும் வெறும் பைத்தியக்காரத் தனங்களே.

இதோ என் அலுவலகத்தில் இப்போது என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது புராஜக்டுக்கான டெண்டரை வெற்றிகரமாக எடுத்துவிட்டால் நான் சிஇஓ பதவிக்கு அடுத்த இடத்திற்கு சென்றுவிடுவேன். ஆபீஸ் கார், எக்ஸிகியூடிவ் அலவன்ஸ் இத்யாதிகள் எனக்கு கிடைத்துவிடும் என்பதால் வெள்ளிக்கிழமை இரவிலிருந்தே ஓய்வு உறக்கமின்றி அதற்கான தயாரிப்புகளை மேற்கொண்டிருக்கிறேன்.  திங்கட்கிழமை காலை உச்சகட்ட பரபரப்பில் டெண்டருக்கு எவ்வளவு தொகை குறிப்பது என்ற குழப்பத்திலிருந்து விடுபட முடியாமல் என்னுடைய லேப்டாப்பில் அதிகாலை 4.00 மணி முதல் பல்வேறு சாத்தியங்களை டைப் செய்து என்னுடைய உயரதிகாரிக்கு அனுப்பிக் கொண்டு அதற்கு அவரிடமிருந்து வந்த சந்தேகங்களுக்கு சாதுர்யமாக விடையளிக்க முயன்று திரும்பத் திரும்ப தொடர் சந்தேகங்களை எழுப்பிக்கொண்டிருந்த அவரின் மெயில்களுக்கு இடையில், படுக்கையறையிலிருந்து பவித்ரா கூப்பிடும் சத்தம் கேட்டு எழுந்து போனேன். “துரு, எனக்கு வயிறு வலிக்குது. குக்கர்ல கொஞ்சம் சாதம் வச்சுக்கறியா?’’ என்றாள்.

“பவி, நான் ஆபீஸ் டென்ஷன்ல இருக்கேம்மா. அதுக்கெல்லாம் டைம் இருக்குமான்னு தெரியல. முடியாட்டி நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் லஞ்ச் வெளியில பாத்துக்கறேன்.’’ “சரி எனக்கு ஒரே ஒரு உதவி பண்றீயா? நீ ஆபீஸ் போகும்போது அபியை ஸ்கூல்ல விட்டுட்டு போயிடறியா?’’ என்றாள். “பவி. ப்ளீஸ். இன்னிக்கு நாங்க டெண்டரை எடுத்தே ஆகணும். அந்த டென்ஷன்ல இருந்து நான் வெளியே வர்ற வரைக்கும் என்னால ஒரு வேலையும் செய்ய முடியாது. உனக்கு முடியலைன்னா அபியை இன்னிக்கு ஸ்கூலுக்கு அனுப்பாதே. டோன்ட் மிஸ்டேக் மீ.’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிஇஓ போனில் வர,  ஹாலுக்கு ஓடிவந்தேன்.

அவர் பேச, நான் பதில் கூற, நாங்களிருவரும் டெண்டர் தொகை குறித்து ஒரு முடிவுக்கு வர காலை 8.00 மணியாகிவிட்டது. அதன்பிறகு அவசர அவசரமாக குளித்து உடையை மாட்டிக்கொண்டு அலுவலகம் செல்ல தயாரான போது கையில் டிபன் பாக்ஸோடு கிச்சனிலிருந்து வெளிவந்தாள் பவித்ரா. அவள் பின்னாடி அபிநயா ஸ்கூல் டிரஸ்ஸில் ரெடியாகி அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். “பவி... உனக்கு சொன்னா புரியாதா. நான்தான் சொன்னேனே எனக்கு இன்னிக்கு டெண்டர் போடணும்னு.’’
“அபிக்கு எக்ஸாம் நேரம்ங்க. இப்ப லீவுபோட்டா மிஸ் திட்டுவாங்க. வெளியில சாப்பிட்டா உங்க உடம்புக்குத்தான் ஒத்துக்க மாட்டேங்குதே, அதனாலதான் தயிர்சாதம் கட்டியிருக்கேன். வருஷம் முழுக்க ஆபீஸ், ப்ராஜக்ட், டெண்டர்னு ஓடறீங்க. வீட்டுல பொண்டாட்டி குழந்தை இருக்கறதுகூட ஞாபகமில்லை. ஏதோ லாட்ஜ்ல ரூம் போட்டிருக்க மாதிரி நைட்ல வீட்டுக்கு வர்றீங்க காலையில போயிடறீங்க. வீட்டுல உங்களுக்காக ரெண்டுபேர் இருக்கறதாச்சும் ஞாபகம் இருக்கா? எனக்கு வயிறு வலிக்குது, ஓவரா பிளீடிங் ஆவுதுன்னுதானே இன்னிக்கு ஒருநாள் அவளை ஸ்கூல்ல கொண்டுபோய்விட உங்ககிட்டே கேக்கறேன்.’’
 

“பவீ... காலையிலயே கச்சேரி வேணாம். அவளை அனுப்பித் தொலை.’’ என்று அபியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கையில் எடுத்த கார் சாவியை வைத்துவிட்டு பைக் சாவியை எடுத்துகொண்டேன். அபி படிக்கும் பள்ளி ஒரு குறுகலான சந்தில் இருந்ததால் காரில் செல்லும் முடிவை கைவிட்டுவிட்டேன்.   காலையில் தவறவிட்டுவிட்ட 10 அல்லது 15 நிமிடங்களை அட்ஜஸ்ட் செய்ய  இரண்டு சக்கர வாகனத்தை சின்னச் சின்ன இடைவெளிகளில் நுழைத்தும் பிளாட்பாரத்தின் மேல் ஓட்டியும் டெண்டர் போடும் அலவலகம் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். சென்னை நந்தனம் சிக்னலில் மஞ்சள் விளக்கு எரிய ஆரம்பிக்க அது சிவப்பாக மாறுவதற்குள் சிக்னலை கடந்துவிட வேண்டும் என்று வண்டியின் வேகத்தைக் கூட்ட, எனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஆறேழு இரண்டு சக்கர ஓட்டிகளும் சிவப்பு சிக்னல் விழுவதற்குள் சாலையைக் கடந்துவிடும் நோக்கில் சீறிக் கொண்டிருந்தவர்கள், சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார்கள். 

எல்லோரும் சிக்னல் விழுவதற்கு முன்பே ஒருசேர பிரேக்போட்டு வண்டிகளை நிறுத்திவிட்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிக்னலை எட்டிப் பார்த்தேன் அங்கு நான் பார்த்தகாட்சி மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. கண்பார்வைற்ற ஒரு இளம் தம்பதி கரம் கோர்த்து சிக்னலின் குறுக்கே நடந்து கொண்டிருந்தார்கள். அந்த மனிதரின் இன்னொரு கையில் கொம்பு இருந்து. அதன் முன்பக்கத்தை பிடித்துக்கொண்டு ஒரு சிறுவன் நடந்து கொண்டிருந்தான் காதுகளைகொண்டு அவன் சுற்றுப்புறத்தை கவனித்ததை பார்த்தபோது அவனுக்கும் பார்வையில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. அவனது கையில் ஒரு கயிறு... கயிற்றின் மறுமுனை ஒரு குட்டி நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்தது. அந்த நாய் அவர்களுக்கு வழிகாட்டுவது போல சிக்னலைக் கடந்து கொண்டிருந்தது. பையன், நாய் வேகமாகப் போவதை இழுத்துப் பிடித்து மெதுவாக நடந்தான். அதற்குக் காரணம், பின்னால் நடந்துவந்த அவனது அம்மாவின் கையில் தங்கையும் வயிற்றில் சிசுவும் இருந்ததால் அவளால் வேகமாக நடக்கமுடியாது என்பதை அவன் உணர்ந்திருந்தது போல் அவன் நடை தெரிந்தது. 

சிக்னல் மாறும் அந்தக் கணநொடியில் எனக்குத் தோன்றியது “பார்வையற்று இருப்பது எவ்வளவு பயங்கரமானது’’ என்று. அவர்கள் பாதி தூரத்தை கடப்பதற்குள் பச்சைவிளக்கு எரிய ஆரம்பித்துவிட்டது. ஆனால் பாருங்கள் யாரும் வண்டிகளை ஓட்ட எத்தனிக்கவில்லை. யாரும் ஹாரன் அடிக்கவில்லை. எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ஞானம் வந்துவிட்டது போல அனைவரும் அந்தக்காட்சியை கண்டு அவர்கள் சாலையை கடந்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தனர். நானும்தான். அந்த நேரத்தில் பார்வையில்லாமல் இந்த உலக வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். ‘குப்’ பென்று வியர்த்தது எனக்கு.   நான் என்னைச் சுற்றிலும் இருந்த வாகன ஓட்டிகளைப் பார்த்தேன். அவர்கள் எல்லோரும் அந்த பார்வையற்ற மூன்று மனிதர்களுக்காக தங்களின் எல்லா அவசரங்களையும் விட்டுவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள் என்று தோன்றியது. சிக்னலைப்பற்றி பார்வையற்றவர்கள் கவலைப்படவில்லை. அவர்களைப் பற்றி கவலைப்பட்டது எல்லாம் சிக்னலில் நின்றிருந்த வாகன ஓட்டிகள்தான். வாகன ஓட்டிகள் அனைவரும் சிக்னலைக் கடக்கும் பார்வையற்றவர்கள் பத்திரமாக சாலையை கடக்க வேண்டும் என்று காத்திருந்தனர். அவர்கள் சாலையை கடந்து முடிக்கும் வரை பச்சை சிக்னல் எரிந்த போதிலும் யாரும் ஹாரன் அடிக்கவில்லை, அவசரப்படவும் இல்லை.

இந்த நிகழ்வைக் கண்டபின் யாரோ என்னை உச்சந்தலையில் செருப்பால் அடித்தமாதிரி இருந்தது. இந்த பரபரப்பான வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடப்பவற்றை உண்மையாக கவனிக்க ஒரு நிமிடம்கூட ஒதுக்க நான் இதுவரை பிரயத்தனப்படவில்லை என்பது என்னை வெட்கப்பட வைத்தது. ஒரு குடும்பத்தில் ஒருசேர பார்வையற்றிருக்கும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் எழ வண்டியை இடதுபுறம் திரும்பி சாலையோரம் நிறுத்திவிட்டு அவர்களிடம் சென்று கேட்டேன், “அய்யா எங்கே போய்கிட்டிருக்கீங்க?’’

“பனகல் பார்க்குக்கு’’ என்றார் அந்த பார்வையற்றவர்.
“நீங்க தப்பா நெனக்கலேன்னா நான் உங்களுக்கு உதவலாமா? ஒரு ஆட்டோ ஏற்பாடு பண்றேன், போறீங்களா?’’
“வேணாம் சார். இப்படியே நேரா நடந்துபோனா கொஞ்சதூரம்தான்.’’ என்றார்
“அப்படின்ன இந்த இந்த 200 ரூபாயை வச்சுக்கங்க. போற வழியில எதுனா டிபன் சாப்பிட்டுட்டு போங்க.’’ என்றேன்.
“சார் அதெல்லாம் வேணாம். அங்கேயே சாப்பாடு தருவாங்க. இல்லாட்டியும் பரவாயில்லை.’’
“பனகல் பார்க்குல என்ன விஷேஷம்?’’
“குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரா அமைதிப் போராட்டம் நடக்குது சார்.’’
“எந்த கட்சி பண்றாங்க?’’
 

“எந்த கட்சியும் இல்ல. எல்லா மதங்களையும் சேர்ந்த மக்கள் பண்றாங்க.’’ என்றார். என் உச்சந்தலையில் யாரோ இன்னொரு செருப்பால் அடித்த மாதிரியிருந்தது. அதற்கு மேல் பேசத் தோன்றாதவனாய் நான் என்னுடைய பைக்கில் ஏறிச் சென்றுவிட்டேன். டெண்டர் கவரை கொடுத்துவிட்டு அது திறப்புக்காக நானும் என்னுடைய அதிகாரியும் காத்திருந்தோம். எனக்கு பார்வையற்ற அந்த நபர்கள் நினைவாகவே இருந்ததால் கூட வந்த அதிகாரியிடம் பார்த்துக்கச் சொல்லிவிட்டு என்னுடைய பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தேன். பனகல் பார்க் ஏரியாவில் ஒரே கூட்டமாக இருந்தது. குறைந்த பட்சம் ஆயிரம் பேருக்கு மேலாவது இருப்பார்கள். அங்கே கட்சிக்கொடி இல்லை, சாதிக்கொடி இல்லை. இந்தியக் கொடி மட்டும் குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் கைகளில் உயர்ந்திருந்தது. இவர்கள் எல்லோரும் தங்கள் சுயநலங்களுக்காகவா உட்கார்ந்திருப்பார்கள்? என்ற எண்ணம் தோன்றியது. கூட்டத்தில் ஒருவனாக நான் உட்கார்ந்து கொண்டேன். அங்கே போடப்பட்டிருந்த சிறு மேடையில் ஒரு சிறுமி அமித்ஷாவிடம் ஆறு கேள்விகளுக்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தாள். அடுத்ததாக ஒரு கல்லூரி மாணவி குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியரையும், இலங்கைத் தமிழரையும் விட்டுவிட்டது ஏன் என்று மோடிஜிக்கு கேள்வி எழுப்பினாள். கூட்டத்தின் முதல் வரிசையிலேயே நான் சிக்னலில் பார்த்த பார்வையற்றவர்களும் மற்றும் சிலரும் உட்கார்ந்திருந்தனர். என்னுள் குற்ற உணர்வுகள் மேலோங்கின. மூன்று மணிநேர நகர்வுக்குப் பின்னர் நான் எழுந்து கொண்டேன். எங்கள் தெரு முனையில் இருந்த பொக்கே பூக்கடையில் வாசமுள்ள பன்னீர் ரோஜா மலரை கொம்புடன் வாங்கிக்கொண்டு அதன் வாசத்தை முகர்ந்து பார்த்தேன். அதையும், அபிக்காக வாங்கிய சாக்லேட், ஐஸ்கிரீமையும் எடுத்துக்கொண்டு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினேன். கதவைத்திறந்த பவித்ரா கண்கள் அகல விரிய என்னைப் பார்த்தாள். “அபி, ஒரு அதிசயம் நடந்திருக்கு. இங்கே வந்து பாரேன்.’’ என்று குழந்தையை கூப்பிட்டாள். நான் என் கைகளில் இருந்த ரோஜாவை பவித்ராவிடம் நீட்டினேன். “ஹலோ என்னாச்சு உங்களுக்கு? புதுசா புரப்போஸ் பண்றீங்களா?’’ என்று சொல்லி புன்சிரிப்புடன் ரோஜாவை வாங்கிக் கொண்டாள். “ஐ லவ் யூ’’ என்றேன். அபி, “அப்பா எனக்கு?’’ என்று கை நீட்டினாள் அவளிடம் சாக்லேட்டை கொடுத்தேன்.

“என்னங்க டெண்டர் கிடைச்சிடுச்சா?’’ “ப்ச். டெண்டர் கிடைக்கலே. நீங்க கிடைச்சுட்டீங்க.’’ என்றேன். என் மனைவிக்கும் மகளுக்கும் நான் என்ன சொல்கிறேன் என்று ஒன்றும் புரியவில்லை. உங்களுக்கும் புரியாவிட்டால் நான் இதைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். “பரபரப்பான வாழ்க்கையின் வழியே பயணிக்கும்போது நிதானியுங்கள். உண்மையாக ஒரு சில நிமிடங்களைச் செலவிட்டு உங்களைச்சுற்றி அந்தக் கணத்தில் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். இந்த உலகில் அற்புதமான ஒன்றை நீங்கள் தவறவிட்டுக் கொண்டிருக்கலாம்.’’

;