headlines

img

நூலும் நூலைச் சார்ந்த கண்ணோட்டமும் - தொகுப்பு: மயிலைபாலு

நூல்வெளியீட்டு விழா என்பது நூலைப் பற்றிப் பேசுவதும்; நூலாசிரியரைப் பாராட்டுவதுமாக அமைவது மரபின்பகுதி. அதே விழா அந்த நூலின் வழி பார்வையாளர்க ளுக்குப் பல விதமான கண்ணோட்ட ங்களைத் திறந்து விடுவது இன்னொரு பகுதி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் முன்னத்தித் தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் அவர்களின் கட்டுரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இப்படித்தான் நடந்தது. ‘இலங்கை முருகனும் மலேசிய முருகனும்’ என்பது நூலின் தலைப்பு என்றாலும் அவர் 1962 தொடங்கி வெவ்வேறு கால கட்டங்க ளில் எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள ‘இந்துத்துவம், மதவெறியல்ல அரசிய லே’ என்ற கட்டுரை நூல்வெளியீட்டு விழாவில் விவாதப்பொருளானது. இன்றைய சமூகச்சூழலுக்கு இதன் மீதான கண்ணோட்டம் ஒய்எம்சிஏ பட்டி மன்றத்தில் அரங்கம் நிறைந்து வழிந்த பார்வையாளர்களுக்கு மிகவும் தேவையானதாகவும் இருந்தது.

“இந்து வேறு; இந்தியா வேறு” இந்த இரண்டும் ஒன்றென்றால் இடி விழப்போவது இந்திய ஒற்றுமைக்கு த்தான்... சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்குத் துணை புரியுமானால், உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்ற கட்டுரையின் வாசகத்தை பிரின்ஸ் கஜேந்திரபாபு உரையில் குறிப்பிட்டு இப்போதுள்ள அரசியல் சமூகச் சூழலின் அபாயத்தை விவரித்தார். இந்த விழாவில் சிறப்புரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற மேநாள் நீதியர சர் து.அரிபரந்தாமன் இந்தக் கருத்தினை அடுத்த தளத்திற்குக் கொண்டு சென்றார். பிரின்ஸ் குறிப்பிட்ட அதே கட்டுரையில் சிகரம் செந்தில் நாதன் அவர்கள் “ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றும் நிரந்தரம் என்று பொருளல்ல; மாறாதது; மாற்ற முடியாதது என்றும் கொள்ள முடியாது. சில சமயங்களில் சட்டத்திருத்தத்தின் மூலம் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர் கொள்ள லாம்” என்றும் எழுதியுள்ளார். இதுதான் முக்கியம். இப்போது அந்தத் தீர்ப்பு 11 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் உள்ளது. ஆட்சியில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த அமர்வு சொல்வது தான் இறுதியாகும் என்றார் நீதியரசர். நீதிபதிகள் தங்களிடம் வரும் வழக்கிற்கு சம்பந்தமில்லாமல் வெளியேபோயும் தீர்ப்புகள் வழங்குவது பற்றி சில உதார ணங்களையும் அவர் எடுத்துரைத்தார். ஏ.ஆர்.கே உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் “நான் சர்வாதிகாரியாக இருந்தால் மகாபார தத்தையும் பகவத்கீதையையும் ஒன்றாம் வகுப்பிலேயே படிக்க உத்தரவு போடுவேன்” என்று ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அவர் இந்தக் கருத்தை நீதிமன்றத்தில் சொல்லாமல் மக்கள் மன்றத்தில் சொன்னதால் அதற்கு எனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தேன்.

சர்வாதிகாரியாக இருந்தால் என்ற அவரது கருத்தே மதச்சார்பற்ற ஜனநாயக சோஷலிசக் குடியரசு என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிரானது என்று கூறினேன். நான் குடியரசுத் தலைவராக இருந்தால், பிரதமராக இருந்தால், கல்வி அமைச்சராக இருந்தால் என்று அவர் கூறியிருந்தால் வேறு விஷயம்; ஆனால் சர்வாதிகாரியாக இருந்ததால் என்று ஒரு நீதிபதி கூறலாமா?  நீதியரசர் அரிபரந்தாமனின் இந்த பேச்சு விமர்சனத்தின் கூர்முனையாக இருந்தது. சீர்திருத்தத் திருமணங்கள் பற்றிய கருத்தினை முன்வைத்த அவர் வடபழனி கோயிலில்  அதனைச் செய்ய முடியாது என்றால் புரிந்து கொள்ளலாம். ஆனால் சத்தியவேல் முருகனார் போன்ற சமயப் பெரிய வர்களைவைத்து தேவாரம் திருவாசகம் ஓதி கோவில்களில்  திருமணம் செய்ய அனுமதிப்பார்களா? என்ற நீதியரசரின் வினா காரசாரமாய் பார்வையாளர் ளின் மனங்களில் இறங்கியது.

மேநாள் நீதியரசர் எஸ்.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற நூல்வெளி யீட்டு விழாவில் தமுஎகச மூத்தத் தலைவர் எஸ்.ஏ.பெருமாள், கவிஞர் இரா.தெ.முத்து, சந்தியா நடராஜன், வழக்கறிஞர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். நிறைவாக ஏற்புரையாற்றிய நூலாசிரியர் சிகரம் ச.செந்தில்நாதன் சமயம் சார்ந்து தாம் எழுதிவரும் நூல்களுக்குகெல்லாம் மூலகாரணம் நீதியரசராய் இருந்த யு.சுப்ரமணியம் அவர்கள்தான் என்றார். அவர் எழுதிய ‘தமிழர் சமயம், தமிழர் வேதம், தமிழகத்துக் கோவில்கள்’ என்ற நூல்தான் தனக்குப் புதிய பார்வையைத் தந்தது. அந்த சுப்ரமணியத்தின் மகன் தான் நிகழ்வுக்குத் தலைமைதாங்கும் மேநாள் நீதியரசர் ராஜசேகரன் என்ற புதிய தகவலோடு தொடர்ந்தார்.

‘சமச்சீர்’ என்று கல்வி முறைக்குப் பெயர் வைக்கக் காரணமாக இருந்தவர் பிரின்ஸ் கஜேந்திரபாபு என்று அவர் கூறினார்.  தாமும், அவரும்  இணைந்து தமிழுக்காக முன்னின்று நடத்திய போராட்டங்களின் தொகுப்பு நூல் விரை வில் வெளிவரும் என்றும் செந்தில்நாதன் அறிவித்தார். இதுதவிர தாம் நடத்திய சில முக்கியமான வழக்குகள், தாம் சந்தித்த நீதிபதிகள் பற்றியும் நூல்கள் எழுத இருப்பதாக அவர் கூறியதோடு விழா நிறைவு பெற்றது.

தொகுப்பு: மயிலைபாலு

 

விபத்தும் விளக்கங்களும்

 

1926 ஆம் ஆண்டு வெளியான நைலான் நங்கை என்ற செந்தில் நாதனின் மொழியாக்கக் கட்டுரை இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. அந்தக் கட்டுரையின் சாராம்சம் இதுதான்: சாலையில் ஒரு விபத்து ஏற்படுகிறது. காரில் சிக்கிய 6 வயது சிறுவன் படுகாயத்தோடு தப்பி விடுகிறான். வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இதனை கவனிக்க ஆர்வமுடன் நீதிமன்றத்தில் பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர். காரின் ஓட்டுநர் விசாரிக்கப்படுகிறார். விபத்துக்கு நான் காரணமல்ல; நைலான் உடையணிந்துவந்த பெண்தான் காரணம். அவரை அந்த உடையில் பார்த்து ரசித்தபடியே வந்ததால் தான் விபத்து ஏற்பட்டது என்கிறார். நைலான் நங்கையை ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தர விடுகிறார். நைலான் நங்கை கூண்டிலேறி நைலான் பயன்படுத்துவதால் செலவு மிச்சமாகிறது; சூரிய ஒளி உடலில் படுகிறது போன்ற பயன்களைக் கூறுகிறார். தங்களுக்கு மவுசு குறைவதால் குடும்பப்பெண்கள் நைலான் அணியக் கூடாது என்று நடிகைகள் எதிர்க்கிறார்கள். நைலான்பயன்பாட்டை கருத்தில் கொண்டு தடைவிதிக்கக் கூடாது என்று மகளிர் அமைப்புகள் கோருகின்றன. துணி உற்பத்தி செய்வோரும் இவ்வாறு கூறுகின்றனர். இறுதியில் நைலான் துணிக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் விபத்தை ஏற்படுத்திய ஒட்டுநருக்கோ நைலான் நங்கைக்கோ தண்டனை இல்லை என்று அங்கதபாணியில் கட்டுரை முடிகிறது. இதனை எழுதியவர் இங்கிலாந்து எழுத்தாளர் அடிசன். 
 

;