headlines

img

இவர்கள் செய்வதென்ன? (மேற்கு வங்க தேர்தல் களம்)

பிரதமர் மோடியையும் என்னையும் வசைபாடுவதற்கே அதிக நேரம் செலவிடுகிறார் மம்தா பானர்ஜி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இவர்கள்இருவரும் மம்தா பானர்ஜியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் குறைகூறிப் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். குறிப்பாகச் சொல்வதென்றால் திரிணாமுல் காங்கிரஸ்கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் ஒருவரைஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு தங்கள் புகழ்பாடுவதையும் அடுத்தவர் வசைபாடுவதையுமே வேலையாகக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்குவங்க மக்களின் தேவைகள் பற்றியும்மாநில தொழில்வளர்ச்சி பற்றியும் இளைஞர்களின் எதிர்காலம் பற்றியும் எந்தக் கவலையுமின்றி தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துவதைப் பற்றியே பாரதிய ஜனதா கட்சிதலைவர்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்அமித்ஷா முதலானோர் பேசுகிறார்கள்.குடியுரிமை திருத்தச் சட்டம்பற்றியும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்ஆர்சி) பற்றியும் தான் அமித்ஷா அதிகம் பேசுகிறார். அந்த மாநிலத்தில் யாருக்கும் குடியுரிமை பறிபோகாது என்று அளக்கிறார். அதுமட்டுமின்றி அந்த மாநிலத்தில் குடியிருக்கும் மதுவாஸ், நமஷூத்ராஸ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். எந்த வாக்குறுதியைத் தான் அமித்ஷாவும் அவரது தலைவரான மோடியும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

தேர்தலுக்குத் தேர்தல் புதுப்புது வாக்குறுதிகள் வழங்குவது தானே அவர்களது வேலையே. பீகார் மாநில தேர்தலின்போது பாஜக வெற்றி பெற்றால்கொரோனா தடுப்பூசி இலவசமாக  வழங்கப்படும்என்றார்கள். இப்போது அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் நாடுமுழுவதற்கும் வாக்குறுதி கொடுப்பதற்குப் பதில் பீகாரில் ஜெயிக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு அந்த வாக்குறுதியை கொடுத்தார்கள். அது நிறைவேற்றப்படுவது பற்றி கவலைப்படுவதில்லையே. மாநிலத்துக்கு மாநிலம் புதுப்புது வாக்குறுதிகளை வாரி வழங்குவது அவர்களுக்கு புதிதுமல்லவே.பட்ட வகுப்புகள் வரை பெண்களுக்கு இலவசமாக கல்வி வழங்கப்படும் என்றும் வேலைவாய்ப்பில் 50 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்படும்என்றும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கையும் , மத்திய அரசு கடைப்பிடிக்கும் தொழில் கொள்கையும் வேலைவாய்ப்பையும் கல்வியையும் ஒழித்துக் கட்டுவதைத்தானே செய்துகொண்டிருக்கிறது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளிவீசுவதில் பாஜகவை விஞ்சிட ஆளே கிடையாது என்பது தானே நடைமுறையாக இருந்து வருகிறது.இந்த நிலையில் தங்களது மத்திய அரசு மேற்குவங்கத்துக்கு என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தது என்று பேசுவதற்கு ஒன்றுமில்லாததால் முந்தைய இடது முன்னணி அரசையும் தற்போதைய மம்தா அரசையும் குறைகூறுவதும் வசைபாடுவதுமே பாஜகவின் வேலையாகிவிட்டது. இவர்களை ஒதுக்கி வைப்பதே வங்கத்தின்வளர்ச்சிக்கு உதவியாக அமையும் என்பது மாநில மக்களுக்கு நன்றாகத் தெரியும்.     

;