headlines

img

சேமித்ததற்கா? சேவகம் செய்ததற்கா?

நீர்மேலாண்மைக்காக தமிழ்நாடு தேசிய விருது பெற்றுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு முன்பிருந்தே தொடர்ந்து பெருமை பேசிவருகிறார். அதற்குக் காரணம் இவரது தலைமையிலான தமிழக அரசுகுடிமராமத்துப் பணியை சிறப்பாகச் செயல்படுத்தியதுதான் என்றும் கூறிவருகிறார்.

குடிமராமத்துப் பணி என்பது தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நடந்து வருகிறது. குறிப்பாகதிமுக ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்டது. இடையிடையே அது கிடப்பில் போடப்பட்டிருக்கும் அதிமுக ஆட்சிக்காலத்தில். அதுபோல் அதிமுகஆட்சியில் மழைநீர் சேகரிப்புத்திட்டம் மிகக்கடுமையாக செயல்படுத்தப்பட்டு பின்பு மக்களின்விருப்பத்துக்கு விடப்பட்டுவிட்டது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏதோ தனதுஅரசுதான் குடிமராமத்துப் பணியை துவக்கியது போல பேசிவருகிறார். அது ஒருபுறம் இருக்க,அந்தத்திட்டம் எப்படி தமிழகத்தில் நடத்தப்பட்டது என்பது பற்றி தமிழக விவசாயிகள் நன்கறிவார்கள். ஏரி, குளங்கள், கண்மாய்களை தூர்வாருதல், கால்வாய்களை தூர்வாருதல் ஆகியவை எல்லாம் முன்பு கோடை காலத்தில் விவசாயிகள், கிராம மக்கள் பங்கேற்புடன் நடைபெறும்.ஆனால் இப்போதோ, ஆளும் கட்சிக்காரர்கள் தலையீட்டுடன் எந்திரம் மூலம் நடை
பெற்றது. அவற்றில் எவ்வளவு முறைகேடுகள் நடைபெற்றன என்பதை தமிழ்நாடே அறியும். தூர்வாருதல் என்ற பெயரில் ஆளும் கட்சியினர், குடிமராமத்துப் பணிக்கு ஒதுக்கிய பணத்தை வாரியதை ஏரி,குளங்கள், கண்மாய்கள் உள்ள ஊர் மக்கள் சொல்வார்கள்.

தன்னை விவசாயி என்று கூறிக்கொண்டிருக்கும் முதல்வர் வயலின் வரப்பை உயர்த்தினால்பயிருக்கு நல்லது என்பதை தெரிந்திருக்கக்கூடும். ஏனெனில் ‘வரப்புயர’ என்று பழங்காலத்தில் தமிழ்மூதாட்டி ஔவையார் மன்னனை வாழ்த்தினார். வரப்பு உயர்ந்தால் நிறைவாக நாட்டின் பொருளாதாரம் உயரும், செழிக்கும் என்பது அவரது வாழ்த்தின் பொருள். இதனை இவரது எஜமானர்களான பாஜகவின் தலைவர்கள் சொல்வதும் நடந்ததுதானே.

ஆனால் தமிழகத்தில் நடைபெற்ற குடிமராமத்துப் பணிகளில் நீர்நிலைகளின் கரைகள் மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றைஆழப்படுத்தவில்லை. அப்படி ஆழப்படுத்தியிருந்தால் தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்மட்டம் இன்னும் கூட அதிகரித்திருக்கும். இப்போதெல்லாம் விருதுகள் தகுதிக்கேற்ப வழங்கப்படுவதாக இல்லாமல் வேண்டியவர்கள் மூலம் வாங்கப்படுவதாகவே பெரும்பாலும்இருப்பது நாடறிந்ததுதானே. நீர் மேலாண்மைக்கான இந்த தேசிய விருதும் மத்திய ஆட்சியாளர்களுடன் இணக்கமாக இருப்பதால் கிடைத்ததாகவும் கொள்ளலாம். தாங்கள் மனதில் நினைப்பதை, அவர்கள் செயலில் செய்கிறார்கள் என்றமகிழ்ச்சியில் மத்திய ஆட்சியாளர்கள் பாராட்டுவதை எல்லாம் கூறி வாக்கு பெற முயற்சிப்பது வீண்முயற்சி என்பது மே மாதத்தில் தான் முதல்வருக்குதெரியும். ஏனெனில் இது மழை நீரை சேமித்ததற்காக கிடைத்த விருதா? இல்லை. மத்திய ஆட்சியாளர்களுக்கு சேவகம் செய்ததற்காக கிடைத்ததா என்று.

;