headlines

img

சரமாரி, பொய்மாரி....

சரமாரி, பொய்மாரி...மேற்குவங்க மாநிலத்தில் நான்கு கட்டத் தேர்தல் முடிந்து விட்டது. இன்னும் நான்கு கட்டத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் படுதீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மத்தியில் ஆளும் மாநிலத்தைஆளத் துடிக்கும் பாஜகவும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகின்றனர்.ஆயினும் பொய்யான தகவல்களையும் வாக்குறுதிகளையும் சரமாரி பொழிகின்றனர் பாஜகவினர். இதில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முன்களத்தில் உள்ளனர்; கொரோனா விதிமுறைகள் பற்றி கவலைப்படுவதில்லை.அதை தேர்தல் ஆணையமும் கண்டுகொள்வதில்லை.

மக்களைப் பிளவுபடுத்துவதாக மம்தாபானர்ஜி மீது மோடியும் மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறாது என்று மம்தாவும்மாறிமாறி குறை கூறுகின்றனர். ஜெய் ஸ்ரீராம் என்று பாஜகவினரும் ஜெய் காளி என்று திரிணாமுல்காரர்களும் கூவிக் கொண்டே ஒருவரை ஒருவர்குற்றம் சாட்டுவது நகைப்புக்குரியதாகவே உள்ளது.பாஜவினர் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாகக்கொண்டு வருவோம் என்பதுதான் தேர்தல் பிரச்சாரமாக அண்மையில் தேர்தல் நடந்த மாநிலங்களில் பாஜகவால் நடத்தப்பட்டது. மேற்குவங்கத்திலும் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்படி தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) அமல்படுத்தப்பட்டாலும் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அமித்ஷா தலையில் அடித்துச் சத்தியம்செய்யாத குறையாகக் கூறுகிறார்.

ஆனால் அதை நம்புவதற்குத்தான் மக்கள்தயாராக இல்லை என்பதால் மம்தா பானர்ஜி பொய்களை பரப்பி வருகிறார் என்று அமித்ஷா அவர் மீது பாய்கிறார். உண்மையில் அசாமில் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மக்களைப்பார்த்த மேற்குவங்க மக்களுக்கு இதுவெல்லாம் ஒன்றும் தெரியாது என்பதுபோல் அமித்ஷா ஓங்கியடிக்கிறார்.அதுவும் குறிப்பாக கூர்க்கா இன மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர்களின் பாரம்பரிய தொப்பியை அணிந்து அவர்களை ‘குல்லா’ போட முயற்சித்திருக்கிறார். அதுமட்டுமின்றி கூர்க்கா மற்றும் நேபாளி மக்களின் 11 பிரிவினரை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதாகவும் அமித்ஷா கூறியிருக்கிறார். இவர்களது முந்தைய வாக்குறுதிகள் எல்லாம் எப்படி காற்றில்
பறக்கவிடப்பட்டன என்பதை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள் பாஜகவினர்.

தேர்தல் வந்தாலே பட்டியல் இன மக்கள் மீதும் பழங்குடியின மக்கள் மீதும் பாஜவினருக்கு பாசம் பொங்கி வழிவது வாடிக்கையானதுதான். ஆனால் தேர்தல் முடிந்ததும் முந்தைய வாக்குறுதிகளை தேர்தல் ஜூம்லா என்று கூறுவார்கள் என்பதை நாட்டுமக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் கூட கெத்தாக, இப்போதேவெற்றி பெற்று விட்டதாகவே பிரதமர் மோடியே பிரச்சாரக் கூட்டங்களில் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பத்தாண்டுகளாக மேற்குவங்க மாநிலத்தை  சீரழித்த திரிணாமுல் கட்சியையும் ஏழாண்டுகளாகஇந்தியாவையே சீரழித்து  சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கும் பாஜகவையும் மேற்குவங்க வாக்காளர்கள் முற்றாகப் புறக்கணிப்பார்கள் என்பது உறுதி. 
 

;