headlines

img

பாதகம் செய்வதல்ல அரண்....

தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையினருக்கு அதிமுக அரசுதான் அரணாக விளங்குகிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் இவர்களது செயல்பாடுகள் சிறுபான்மையினருக்கு அரணாக அமைந்தவையா என்ன?

இந்துத்துவா சிந்தனை கொண்ட மத்திய பாஜகஅரசு, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை ஒழித்துக் கட்டும் இழிவான நோக்கத்துடன் கொண்டு வந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வாக்களித்த போது, அதிமுகவின் 10 உறுப்பினர்களும் பாமகவின் ஒரு உறுப்பினரும் சேர்ந்துவாக்களித்ததால் தானே அது குடியுரிமை திருத்தச் சட்டமானது. இத்தகைய துரோகத்தை செய்துவிட்டு கொஞ்சம் கூட உறுத்தலின்றி சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு தான் அரணாக விளங்குகிறது என்று முதல்வர் கூறுவதை என்னவென்பது? 

இதுமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு சிறைகளில், வழக்குகளுக்கு சிறிதும் தொடர்பில்லாத முஸ்லிம் இளைஞர்கள் ஏராளமானோர் விசாரணைக் கைதிகளாகவே நீண்டகாலம் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்திட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பிலும் சிறுபான்மை நலக்குழு சார்பிலும் பல்வேறு முறை வலியுறுத்தப்பட்டும் அவர்களைவிடுவிக்க ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்காமல் இருக்கும் தமிழக அரசு தான் சிறுபான்மை மக்களின் அரண் என்று சொல்வது கொடூரமானதல்லவா? 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா முழுவதும் பல்வேறு சிறைகளில் நீண்ட காலமாகவேவிசாரணைக் கைதிகளாக வாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரை சந்தித்து வலியுறுத்தியது. ஆயினும் அவர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தண்டிக்கப்பட்டவர்களைக் கூட அதிமுக அரசு அவர்களது கட்சிக்காரர்கள் உட்பட பலரையும் அண்ணா பிறந்தநாள் போன்ற நாட்களின் போது விடுதலை செய்திருக்கிறது. இப்படி பல வகையிலும் சிறுபான்மையினருக்கு பாதகமான, துரோகமான பல்வேறு காரியங்களை செய்துவிட்டு அதிமுகஅரசு அவர்களுக்கு அரணாக இருக்கிறது என்பது

‘படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்’என்ற பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது.தமிழகத்தில் சிறுபான்மை மக்களிடையே அதிமுகவுக்கு உள்ள நற்பெயரைச் சீர்குலைக்க திமுக முயற்சித்து வருகிறது என்று முதல்வர் குறைகூறியிருக்கிறார். அடுத்தவர்கள் எதற்கு முயற்சிக்கவேண்டும்? உங்களது கட்சியின் செயல்களே போதுமே, வேறு முயற்சியும் வேண்டுமோ? 

தமிழகத்தின் பாரம்பரிய நல்லிணக்கத் தன்மையை சீர்குலைக்கும் இந்துத்துவ எண்ணம் கொண்ட பாஜகவின் மத்திய அரசுக்கு சேவை செய்வதையே, அவர்கள் காலால் இட்ட உத்தரவை தலையால் செய்து முடிப்பதையே, தங்கள் பணியாகக் கருதிடும் நிலையில் உள்ள அதிமுக ஒருபோதும் சிறுபான்மையினரின் அரணாக இருக்க முடியாது. உங்களது பேச்சை அவர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பாதகம் செய்வதல்ல அரண்! பாதுகாப்பதே அரண்.

;