headlines

img

யாருக்காக இணக்கமான உறவு?

மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான உறவு இருந்தால் தான் மாநிலம் வளர்ச்சி பெறும்என்றும் மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே இணக்கமான உறவுதேவை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது கூறியிருக்கிறார்.

ஆனால் அதை நியாயப்படுத்திப் பேசுவதற்கு அவரால் இரண்டு திட்டங்களை மட்டுமே தேடிக்கண்டுபிடிக்க முடிந்திருப்பது பரிதாபம். பல்வேறு கோரிக்கைக் கடிதங்கள், சட்டமன்ற தீர்மானங்கள் போன்ற மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட திட்டங்கள், கோரிக்கைகளின் கதியை ஏன் முதல்வரால் சொல்ல முடியவில்லை? 2016 சட்டமன்றத் தேர்தலின் போது இவரது தலைவர் ஜெயலலிதா, மோடியா? இந்த லேடியா? என்றுகேட்டு அவரை எதிர்த்துத் தானே, வெற்றி பெற்றுஆட்சியமைத்தார். அவர் மத்திய அரசின் உதய்மின் திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். மருத்துவக் கல்விக்கான நீட்தேர்வுக்கு விலக்களிக்க கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது மறைவுக்குப் பின் முதல்வர் பொறுப்புக்கு வந்த எடப்பாடிபழனிசாமி, உதய் மின்திட்டத்தை சிரமேற்கொண்டுநடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என தமிழகசட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததை குடியரசுத் தலைவருக்குக் கூட அனுப்பிடாமல் கிடப்பில் போட்டுவிட்டதே மத்திய அரசு. இதுதான் இணக்கத்தால் பெறப்பட்ட நன்மையா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழுபேரின் விடுதலைக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் மீது சாதகமான நடவடிக்கை எடுக்கப்படவில்லையே. இதுதான் மத்திய அரசுடனான இணக்கத்துக்கு கிடைத்த பரிசா?

இது தவிர ஜிஎஸ்டி வரி இழப்புக்கு வழங்க வேண்டிய ஈட்டுத் தொகை, கஜா, ஒக்கி, புரெவி புயல்கள், சென்னை பெருவெள்ள நிவாரணம், உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதி, கொரோனா கால செலவினங்களுக்காக மாநிலத்தின் நிதிகோரிக்கை இவற்றில் எல்லாம் இணக்கமான மத்திய அரசிடமிருந்து பெற்றது என்ன? கசப்பானஅனுபவத்தால் கற்றது என்ன? இதையெல்லாம் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஆனால் தமிழக மக்களின் நலனுக்காக அல்ல, முதல்வர் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது. கூவத்தூருக்குப் பின் மாநில அரசை, ஆட்சியை, முதல்வர் பதவியை, இவரது சகாக்களின் அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குத்தான் இந்த இணக்கம் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. ஊழல், முறைகேடு தொடர்பாக அதிரடிசோதனைகள் நடத்தி மிரட்டிப் பணிய வைத்து தங்களது நலனுக்காக மத்திய பாஜக அரசு அடிமைபோல நடத்துகிறது. அதிமுக ஆதரவோடு தமிழகத்தில் காலூன்றஇதைவிட வேறு வாய்ப்புக் கிடைக்காது என்பதற்காகத்தான் பாஜகவும் இவர்களை விட மறுக்கிறது. இதுஇவர்களின் சொந்த ஆதாயத்துக்கான - சுயநலத்துக்கான இணக்கமே தவிர, தமிழக மக்கள் நலனுக்கான இணக்கமல்ல. இதற்கு சரியான பதிலடியை ஏப்ரல் 6-ல் தமிழக மக்கள் தருவது நிச்சயம்.   

;