headlines

img

வரவேற்கத்தக்க பரிந்துரை.....

தொழிற் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தமிழக முதல்வரிடம் நீதிபதி முருகேசன் ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரை வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை வழங்க முன்னாள் நீதிபதித.முருகேசன் தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்தது. 

இந்தக்குழு வழங்கியுள்ள அறிக்கையில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம்,சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் நான்கு சதவீதம் அளவிற்கே சேருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொழிற் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும்என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.இந்த பரிந்துரையை ஏற்று தமிழக அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத்தேர்வு கிராமப்புற அரசுப் பள்ளிமாணவர்களுக்கு பெரும் தடையாக இருக்கிறது என்று நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுதன்னுடைய அறிக்கையில் கூறியிருந்தது. மருத்துவப் படிப்பில் மட்டுமல்ல, இதர தொழிற்படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்ததில்லை என்பதையே நீதிபதிமுருகேசன் ஆணையம் உறுதி செய்துள்ளது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் நுழைவுத்தேர்வால் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் முந்தைய அதிமுக அரசு, அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியது. இதை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்ட போதும் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

இந்நிலையில், இதர தொழிற்படிப்புகளிலும் குறைந்தபட்சம் 10 சதவீதம் அளவிற்காவது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது இந்தளவு குறைவானஒன்றே. எனினும் கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நிவாரணமாக இது அமையும். தனியார் பள்ளிகளில் அநியாய கட்டணக் கொள்ளையை குறைக்கவும் இந்த முடிவு உதவும். கொரோனா கொடுந்தொற்றை தொடர்ந்து தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணத்தை சமாளிக்க முடியாமல் ஏராளமானோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது, போதிய ஆசிரியர்களை நியமிப்பது, கட்டமைப்பை வசதியை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளாலும், மருத்துவம் மற்றும் இதர படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதன் மூலமும் மிகப் பெரியமாற்றத்தை தமிழக கல்விச்சூழலில் ஏற்படுத்த முடியும்.

;