headlines

img

மோடி அரசின்  மூன்று முகம்....  

கொரோனா தொற்றால் மக்கள் அன்றாடம் மடியும் காட்சி நெஞ்சை பதற வைக்கிறது. குறிப்பாக வடமாநிலங்களில் கொரோனாவால் இறந்தவர்களை எரிக்க சுடுகாடு கூட இன்றி மக்கள் தட்டழிகின்றனர். 

மோடி அரசு கொஞ்சமும் மனிதாபிமானமின்றி  உயிர்காக்கும் கொரோனா தடுப்பூசி  விவகாரத்தில், கார்ப்பரேட்களின் இடைத்தரகராகவே மாறியிருப்பது கொடுமையிலும் கொடுமை. நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை உத்தரவாதப்படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. சுதந்திரமடைந்த நாளில் இருந்து வந்த இந்த நடைமுறையை மோடி அரசு கைகழுவி இருக்கிறது. அது மாநிலத்தின் பொறுப்பு எனதட்டிக்கழிக்கிறது. மேலும் தனியார் நிறுவனங்களேகொரோனா தடுப்பூசியின் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும்  அறிவித்திருக்கிறது.  இந்த அறிவிப்பு கொரோனாவை விட பெரும்நோயாக மக்களை அதிர்ச்சியுறச் செய்திருக்கிறது. பாஜகவிற்கு தேர்தல் நிதி அளிக்கும் சீரம் நிறுவனம்  ஒரே மருந்திற்கு மூன்று விலை நிர்ணயம் செய்திருக்கிறது.  மத்திய அரசிற்கு ஒரு விலை.மாநில அரசிற்கு ஒருவிலை. தனியார் மருத்துவமனைகளுக்கு ஒருவிலை.  இதுவரை இந்தியாவில் இல்லாத நடைமுறை. மாநிலங்கள் இந்திய ஒன்றியத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது? ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கொள்கை என குதியாட்டம் போடும் மோடி அரசு. தனியார் நிறுவனத்தின் லாபம் மட்டும் எப்படி ஒரே நாட்டில் மூன்று விதமாக இருக்கமுடியும். ரூ.150க்கு விற்றாலே லாபம் இருக்கும்
நிலையில் நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு ரூ.300க்கு ஏற்றுமதி செய்கிறது. 

ஆனால் இந்திய மாநிலங்களுக்கு ரூ. 400க்கும், தனியாருக்கு ரூ.600க்கு விற்க அனுமதிப்பதன் பின்னணி என்ன?  மோடிக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு  தனி சட்டம் உருவாக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது. அதுவும் உயிர்காக்கும் மருந்தில் கூட லாபத்திற்கான உச்சவரம்பு இல்லை என்பது பச்சை துரோகம். இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் பயோடெக்கை தவிர்த்து மற்ற அரசு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மோடி அரசு ஏன் அனுமதி வழங்கவில்லை? சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட், குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், செங்கல்பட்டு தடுப்பூசி பூங்கா ஆகியவை மத்திய அரசின் நிதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. அதனை புறக்கணிப்பதன் மர்மம் என்ன? சீரம் இன்ஸ்டிடியூட்டிற்கு மட்டும் ரூ.3 ஆயிரம் கொடுத்திருப்பதன் பின்னணியில் இருக்கும் ஊழல் ஒப்பந்தம் என்ன? 

இதுவரை இந்தியாவில் ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தவே தடுப்பூசி இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் தடுப்பூசி பற்றாக்குறை நீடிக்கிறது. கையிருப்பே இல்லாத நிலையில் எப்படி  18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மோடி அரசு அறிவிக்கிறது.  இது அப்பட்டமான மோசடி அல்லவா? 

;