headlines

img

அதிமுக அரசின் முறைகேட்டால்  நிதி நெருக்கடியில் டான்ஜெட்கோ....

கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் நடந்துள்ள முறைகேடுகள் ஒவ்வொன்றாக தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.  எந்ததுறையையும் விட்டு வைக்காமல் எல்லாத்துறைகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்குச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையே சாட்சியாக உள்ளது. 

அ.தி.மு.க ஆட்சியில் 2013ஆம் ஆண்டு  முதல்2018ஆம் ஆண்டு வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால் ரூ. 14 ஆயிரம்கோடி இழப்பு  ஏற்பட்டுள்ளது. மத்திய மின் உற்பத்தி திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டான்ஜெட்கோவுக்கு  ரூ.2,381.54 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. உரிய காலத்தில் திட்டம் நிறைவேறாததால் பற்றாக்குறையைச் சமாளிக்கத் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட கூடுதல் செலவு மட்டும்ரூ.2,099.48 கோடியாகும்.

 வெளிமாநிலங்கள்  தனியாரை விடக் குறைந்த விலையில் மின்சாரத்தைத் தரத்தயாராகஇருந்தபோதிலும் அவற்றை அதிமுக அரசு வேண்டுமென்றே புறக்கணித்து தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து  அதிக விலைக்குமின்சாரத்தைக் கொள்முதல் செய்ததால்  டான்ஜெட்கோவுக்கு ரூ. 493.74 கோடி கூடுதல் செலவும்  ரூ. 349.67 கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒப்புக்கொண்ட அளவில் மின்சாரத்தை வாங்காததால் டான்ஜெட்கோ கூடுதலாக அளித்ததொகை ரூ.122.8 கோடியாகும். மின் கொள்முதல் ஒப்பந்தங்களை முறையாக புதுப்பிக்காததால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் ரூ.39.48 கோடியாகும். அது மட்டுமல்ல வராத  மின்சாரத்திற்கு பணம் கொடுத்த வகையில் மட்டும் ரூ. 242.9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சூரிய ஒளி மின்திட்டங்களைத் தொடங்காத நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தால் டான்ஜெட்கோவுக்கு ரூ. 605.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட கால ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டுக்குறுகிய கால ஒப்பந்தம் செய்ததால் ரூ.93.4 கோடிநஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2015 முதல் 2018ஆம்ஆண்டுகாலகட்டத்தில் அதிக விலையில் மின்சாரம் வாங்கியதால் டான்ஜெட்கோவுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ. 544.44 கோடி எனத் தணிக்கை அறிக்கையில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.39லிருந்து ரூ.5.42ஆக இருந்தபோது  ஜிஎம்ஆர் என்ற தனியார் மின் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து ரூ.12 கொடுத்து இதனால் ஆதாயமடைந்தவர்கள் யார்? அவர்களுக்குச் சென்ற தொகை எவ்வளவு என்பதைத் தமிழக அரசு விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.  அதிக விலைக்குமின்சாரத்தை விற்ற தனியார் நிறுவனத்தையும்விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். மாநிலத்தின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளதாகத்  தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மின்சாரம் உள்ளிட்ட முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களின் இன்றைய நிலை குறித்தும் மக்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். 

;