headlines

img

வெளிச்சத்திற்கு வரும்  ஸ்மார்ட் சிட்டி ஊழல்...

தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஊழலின் ஒட்டுமொத்த வடிவமாக உருவெடுத்துள்ளது. மோடி அரசினால் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது மாநகரங்களை பெருமளவில் வளர்ச்சியடையச் செய்யும் என்றும், குடிநீர், பாதாளச் சாக்கடை, சாலை வசதி என அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் பலமடங்கு உயரும்என்றும் விளம்பரம் செய்யப்பட்டது. தங்களுடைய மகத்தான சாதனையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சில தகவல்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் அலங்கோலத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது. மதுரையில் தெருவிளக்குகள் அமைக்கும் பணி தொடர்பாக ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு 71 நாட்களுக்கு பின் மாநகராட்சி சார்பில்பதில் அளிக்கப்பட்டுள்ளது.மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளில் ஒரு தெருவிளக்கு கூட பொருத்தப்படவில்லை என்பது ஒருபுறம். 20,40,60,90,120,200 என 6 வகையான வாட்ஸ்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 20 வாட்ஸ் பல்புகளுக்கான விலை மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.26 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், ஒருவிளக்கின் விலை மட்டும் ரூ.21,666 வரை வருகிறது. மற்ற விளக்குகளையும் கணக்கில் சேர்த்தால்ஒட்டுமொத்த ஊழலும் வெளிச்சத்திற்கு வரும்.

எந்தவிதமான தணிக்கையுமின்றி, முறையான வரவு-செலவுமின்றி கேள்வி கேட்க மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களும் இல்லாத நிலையில் ஊழலின் கொடி உயரப் பறந்து கொண்டிருக்கிறது. எனவே ஒட்டுமொத்த ஸ்மார்ட் சிட்டி பணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். முறைப்படுத்தப்பட வேண்டுமென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை எந்தளவுக்கு நியாயமானது என்பதையே இப்போது வெளியே தெரிந்துள்ள முறைகேடு உணர்த்துகிறது.

இதுதவிர, 11 மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளைஎந்த இடத்திலும் உரிய காலத்தில் முடிக்கப்படவில்லை. மறுபுறத்தில் குப்பை எடுக்கும் திட்டத்திற்கு என்று கூறி பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அது யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைவிசாரித்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியான தகவல்களே கிடைக்கக்கூடும்.இந்த பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை வேறுபணிகளுக்கு மாற்றி அதன்மூலமும் கமிஷன் வசூல் கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக ஒதுக்கப்படும் தொகை கடைசியில் ஒட்டுமொத்தமாக மக்கள் தலையில் தான் விடியும். இப்பொழுதே குப்பை வரி உள்பட பல்வேறு வரிகளுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குடிநீர் விநியோகத்தையும் தனியாருக்கு தர முயற்சிகள் நடந்துள்ளன. மொத்தத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் மாநகரங்கள் ஸ்மார்ட்டாகவில்லை. அமைச்சர்கள், உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் தான் ஸ்மார்ட்டாகி உள்ளனர் என்பதுதான் உண்மை.

;