headlines

img

மாநில உரிமைகளுக்கும் நினைவிடமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் பலகோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அதேபோல அவர் வாழ்ந்த  இல்லமான போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள வேதா நிலையமும், அவரது நினைவு இல்லமாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்த விழாக்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து பங்கேற்றுள்ளனர். இருவருமே ஜெயலலிதாவின் புகழ் பாடியுள்ளனர். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலுக்காகவே இவ்வாறு நினைவிடம் மற்றும் நினைவில்லம் திறக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் நடந்த கோஷ்டிப்பூசல்களை, அதிகாரப் போட்டிகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்து ‘தர்மயுத்தம்’ நடத்தினார். எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ.பி.எஸ்கோஷ்டியினர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். பின்னர் பாஜகவின் தலையீட்டினால் இருகோஷ்டியினரும் ஒன்றாயினர். பதவியும் அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைஇழுத்தடிக்கப்படுகிறது. ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறதேயன்றி விசாரணை முடிந்தபாடில்லை. 

எடப்பாடி பழனிசாமி வகையறாவை மிரட்டுவதற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. இரு கோஷ்டியும் ஒன்றிணைந்த நிலையில் ஆணையம் பெயரளவுக்கே செயல்படுகிறது. ‘தர்மயுத்தம்’ கைவிடப்பட்டுவிட்டது.இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழிசசிகலா தண்டனை காலம் முடிந்து விடுதலையாகியிருப்பது அதிமுகவுக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது. பாஜகவை பொறுத்தவரை மேலும் மேலும்குட்டையை குழப்புவதிலேயே குறியாக உள்ளது.திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து கூறி வந்த நிலையில் தங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அதிமுகவை விழுங்க அவர்கள் முயல்கின்றனர். இதற்கு அதிமுகவில் ஒரு பகுதியினர் இரையாகி வருகின்றனர்.

மறுபுறத்தில் மாநில உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிற நிலையில் மாநில ஆட்சியில் உள்ளவர்கள் அதற்கு துணை போகின்றனர். நீட் தேர்வு, உதய் மின்திட்டம், ஜிஎஸ்டி வரி என ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்த்த அனைத்தையும் இபிஎஸ், ஓபிஎஸ் வகையறா தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறது. பாஜகவின் தயவில் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதால் அனைத்திற்கும் பணிந்துபோவதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் ஜெயலலிதாவின் விசுவாசிகளாக தங்களை கூறிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் அவர் எதிர்த்த திட்டங்களையும் ஆதரிப்பதன் மூலம் ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

;