headlines

img

விருதுக்குப் பெருமை....

நூற்றாண்டு கண்ட தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த விருதினை பொருத்தமானவருக்கு அளித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகுக.

இந்த விருதினை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ள தோழர் என்.சங்கரய்யா, விருது தொகையாக அரசினால் வழங்கப்படும் ரூ.10 லட்சத்தை தமிழக முதல்வரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குவதாக அறிவித்துள்ளார். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களின் நலனுக்காகவே அர்ப்பணித்த அப்பழுக்கற்ற தோழர் சங்கரய்யா தனக்கு அரசு அளிக்கும் நிதியையும் மக்களின் துயர்துடைக்க அளித்திருப்பதன் மூலம் தகைசான்ற ஒருவரையே இந்த விருது சென்று சேர்ந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. 

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று போராடிய தலைமுறையில் தோழர் சங்கரய்யா உள்ளிட்ட வெகு சிலரே தற்போது நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் விருது மற்றும் ஓய்வூதியத்தை கட்சி முடிவின்படி மறுதலித்தவர் அவர். அதுகுறித்து கேட்ட போது விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றதேவிருதுதான். இதற்கென தனியாக விருது தேவையில்லை என்றார். 

தற்போது அவரது நீண்ட பொது வாழ்வு, போராட்டப் பெரும் பயணம், உழைக்கும் மக்களுக்காகவே தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அறவாழ்வு, தமிழ், தமிழ்நாடு, தமிழர்நலனுக்காக சமரசமின்றி இன்று வரை உழைத்துவரும் மாண்பு ஆகியவற்றுக்காக வழங்கப்படும் தகைசால் தமிழர் விருது சுதந்திரத் திருநாள் அன்றுவழங்கப்படுவது மிகவும் பொருத்தமானதாகும்.  தோழர் சங்கரய்யா தன்னுடைய நூறாவது பிறந்த நாளின்போது விடுத்த செய்தியில், கோவிட்19 கொடுந்துயர் காலத்தில் முன்களப் பணியாற்றிஉயிர் துறந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தியதோடு, களத்தில் நின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டிருந்தார். 

நூறு வயதான அவரது மூளை எப்போதும் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது.  தன்னுடைய மாணவப் பருவத்திலேயே இந்தி மொழி திணிப்புக்கு எதிராக அன்றைய முதல்வர் ராஜாஜிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர். தன்னுடைய வாழ்நாளில் விடுதலைக்கு முன்பும், பின்பும் எட்டாண்டுகள் சிறையிலிருந்தவர். மூன்றாண்டுகள் தலைமறைவாக இருந்து மக்களைத் திரட்டியவர். மூன்று முறை சட்டப் பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டு மக்கள் குரலாக பேரவையில் முழங்கியவர். அனைத்துத் துறைகளிலும் அன்னைத் தமிழ் அரியணை ஏற வேண்டும்என மேடைதோறும் முழங்கியவர். நூற்றாண்டு கண்ட செம்மல் தோழர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டிருப்பதுமகிழ்ச்சியளிப்பது என்பதோடு, பொது வாழ்வுக்கு வரும் இளைய தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதும் ஆகும்.

;