headlines

பொருந்தாக் கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்....

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிக் கொடுப்பார் - என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தின் போது கூறுகிறார். ஜல்லிக்கட்டு நாயகன் நானல்ல;உண்மையான கதாநாயகன் பிரதமர் மோடி தான் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புல்லரித்துப் போய் புகழ்ந்துரைக்கிறார்.

மதுரையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மதுரை வீரன் திரைப்படம் பற்றிக் குறிப்பிடுகிறார். திருநெல்வேலியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, எம்ஜிஆர் ஆட்சி தொடர வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். பாஜக தலைவர்ஜே.பி.நட்டாவோ தமிழ் மொழி, பண்பாடு பழைமையானது; உலகப்புகழ் பெற்றது என்று பேசுகிறார். 

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். அந்த  ஆட்சியில் பாஜக பங்கேற்கும் என்கிறார் மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் வி.கே.சிங். அப்படி என்றால் அவர்களது திட்டம் என்னவென்று தெரிகிறதா? தமிழகத்தில் தாமரை மலரும் என்று அவர்கள் கூறுவதன் உண்மையான அர்த்தம் தெரிகிறதா? பல மாநிலங்களில் ஒன்றிரண்டு இடங்களை மட்டுமே பெற்றிருந்தால்கூட மற்றவர்களை வளைத்துப் பிடித்து பாஜகஆட்சியாக மாற்றுவதைத்தான் செய்திருக்கிறார்கள். 

ஆனால் இங்கோ அதை அதிமுக மூலமே செய்து கொண்டிருப்பதற்குப் பதில் நாமே செய்து விடலாமே என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துவிட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பே கொடுக்காத வகையில் தமிழக வாக்காளர்கள் அவர்களை வெற்றியிலிருந்து தூரத்திலேயே விலக்கி வைத்து விடுவார்கள்.இதையெல்லாம் நன்கு அறிந்து வைத்திருப்பதால் தான் கடைசியாக அமித்ஷா எம்ஜிஆர் ஆட்சி தொடர வேண்டும் என்று பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறுபான்மை மக்களுக்கு அதிமுக பாதுகாப்பாக விளங்கும் என்று மீண்டும் மீண்டும் கூவிக் கொண்டிருக்கிறார். சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை பாஜக கொண்டு வந்த போதெல்லாம் இருகைகளையும் தூக்கி ஆதரித்த தவறுக்கு அதிமுக இப்போது தவியாய்த் தவித்துப் போய் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது. 

எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் ஆர்எஸ்எஸ்காரர்கள் - இந்து முன்னணியினர் - மீனாட்சிபுரத்தில் கலவரத்தை ஏற்படுத்தி வன்முறை வெறியாட்டம் நடத்தியபோது, அவர்களுக்கு எதிராக களமிறங்கியவர் எம்.ஜி.ஆர். பாஜகவுடன் கூட்டுச்சேரும் தவறை இனி ஒருமுறை செய்யமாட்டேன் என்று கூறியவர் ஜெயலலிதா. ஆனால் அத்தகைய பாஜகவுடன் கூடிக்குலாவிக் கொண்டு அமைதியான தமிழகத்தையும் சிறுபான்மை மக்களுக்கு அரணான தமிழகத்தையும் எப்படி பராமரிப்பார்கள் அதிமுகவினர். எனவே பாஜகவை மட்டுமல்ல அதிமுகவையும் தமிழக மக்கள் புறக்கணிப்பது உறுதி.

;