headlines

img

ஜெயலலிதா மரணமும் சாகாத கேள்விகளும்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றுதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது கண்டு ஆத்திரமடைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமே கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும்தான் என்று பிதற்றியுள்ளார்.

மேலும் ஜெயலலிதாவை நீதிமன்றம் நிரபராதி என்று கூறிய நிலையில், மேல்முறையீட்டு வழக்குபோட்டு மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி உரியசிகிச்சை பெற முடியாமல் அவர் இறந்து போனார்என்றும் ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை சும்மா விடாது என்றும் கூறியுள்ளார். தமிழக மக்கள் அனைத்தையும் மறந்திருப்பார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்புவதுதான் வேடிக்கை.

பெங்களூரு விசாரணை நீதிமன்றம் ஜெயலலிதா மற்றும் சசிகலாவை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. பெங்களூரு உயர்நீதிமன்றம் அவர்களை நிரபராதி என்று கூறியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜெயலலிதா இறக்கும்வரை அந்தவழக்கில் தீர்ப்பு வரவில்லை. இந்த வழக்கினால் தான் ஜெயலலிதா உரிய சிகிச்சை பெற முடியவில்லை என்று கூறுவதில் ஒரு துளி அளவுக்கேனும் உண்மையுண்டா?

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கண்ணீர் கசிய தர்மயுத்தம் நடத்தியவர் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தான்.இந்த ஒரு பிரச்சனையை மட்டும் முன்வைத்துதான்ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி தனியாக பிரிந்தது. பின்னர் பாஜகவின் நிர்ப்பந்தத்தால் எடப்பாடிபழனிசாமி கோஷ்டியும் ஓ. பன்னீர்செல்வம் கோஷ்டியும் சேர்ந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம்குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.எனவே மீண்டும் இணைகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் வகையறா கூறியது.இதன்படி ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைவதற்கு காரணமாக அமைந்த ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஒருமுறை கூட ஆஜராகவில்லை. விலக்கு கேட்டபடியே இருந்ததால் ஆணையத்தின் தலைவரே கோபமடைந்தார். விசாரணையை முடக்குவதாக வெளிப்படையாக கூறினார். மறுபுறத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் ஆணையத்தை முடக்க உச்சநீதிமன்றம் வரை சென்றது. 

ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை அறிக்கை அளிக்கவில்லை. இதுபற்றி முதல்வரோ, துணை முதல்வரோ கவலைப்படவில்லை. மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காகவே இந்தஆணையம் அமைக்கப்பட்டது. இப்போது எடப்பாடி பழனிசாமி கூறுவதுதான் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் என்றால் அதை ஆணையத்திடம் சென்று அவர் கூறியிருக்கலாமே? ஜெயலலிதாவின் மறைவு மட்டுமல்ல, அதைத் தொடர்ந்துகொடநாடு உள்ளிட்ட இடங்களில் நடந்த மர்மச்சாவுகளும் கேள்விக்குரியதே, இதற்கெல்லாம் இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

;