headlines

img

கூட்டுக் களவாணிகள்

பொதுத்துறை வங்கிகளில், விரல் விட்டு  எண்ணிவிடக்கூடிய வெகு சில பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும், மெகா கோடீஸ்வரர்களும் கடன் வாங்கி விட்டு திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து வருகிற பல லட்சம் கோடி ரூபாய் கடன் களை, “செயல்படாத சொத்து” என்று செல்லப் பெயரிட்டு, ஒரு கட்டத்தில் அதை வராக்கடன் என்று வகை செய்து, அதை அப்படியே தள்ளுபடி செய்து, இந்த தேசத்தின் எளிய மக்களது வாழ்நாள்  சேமிப்பையெல்லாம் சூறையாடிக் கொண்டிருக்கி றது நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு.

இவர்களது இத்தகைய கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட நடவடிக்கை களில் ஒன்றாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதியதோர் திட்டத்தை அறிவித்துள் ளார். தேசிய சொத்து மறுசீரமைப்பு கம்பெனி லிமிடெட் (என்ஏஆர்சிஎல்) என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அந்த நிறுவ னத்திற்கு ரூ.30,600 கோடி ஒதுக்கீடு செய்து, அதைக் கொண்டு, பொதுத்துறை வங்கிகளில் பெரு முதலாளிகள் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்கா மல் ஏமாற்றியுள்ள ரூ.2லட்சம் கோடி அளவிற் கான வராக்கடன்களால் வங்கிகளின்  கணக்கு களில் ஏற்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்வது என்று அறிவித்துள்ளார்.

வராக்கடன்களால் வங்கிகளின் கணக்குக ளில் மிகப்பெரிய ‘அழுத்தம்’ ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரிசெய்வதற்காக இத்தகைய ஏற்பாடு களை செய்திருப்பதாகவும் மோடி அரசு தனக்குத் தானே சபாஷ் போட்டுக் கொண்டிருக்கிறது.  அதற் காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வராக்கடன் சமாளிப்பு வங்கிக்கு ‘கெட்ட வங்கி’ (bad bank) என்று சில ஊடகங்கள் பெயரே வைத்துவிட்டன. கெட்ட வங்கிதான், நல்ல வங்கிகளை கெடுத்த கூட்டுக்களவாணிகளின் நல்ல வங்கி. 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத் துடன் ஒப்பிடும்போது மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் மட்டும் இந்திய பொதுத்துறை வங்கிகள் பெரும் கார்ப்பரேட் முத லாளிகளுக்கு கொடுத்து, திரும்ப வராத கடன் தொகையாக நிலுவையில் இருக்கும் தொகை 365 சதவீதம் அதிகரித்துள்ளது. 2008-09 ஆம் நிதி யாண்டு முதல் 2013-14 ஆம் நிதியாண்டு வரையி லான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது ஆட்சிக்காலத்தில் வராக்கடனாக இருந்தது சுமார் ரூ.5 லட்சம் கோடி ஆகும். அது 2014-15 முதல் 2019-20 வரையிலான 6 ஆண்டுகால மோடி ஆட்சியில் மட்டும் மூன்றரை மடங்குக்கு மேல் ரூ.18.28 லட்சம் கோடியாக மிகப் பெரும் அளவிற்கு அதிகரித்துள் ளது. கடந்த ஆறாண்டு காலத்தில் மட்டும் ரூ.6 லட்சத்து 83 ஆயிரத்து  388 கோடி, பொதுத்துறை வங்கிகளால் பெரு முதலாளிகள் மற்றும் கோடீஸ்வ ரர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள விபரங்கள் தான் இவை. சமீபத்திய ஆண்டுகளில்தான் வராக் கடன்களை மிகப் பெரும் அளவிற்கு தள்ளுபடி செய்யும் போக்கு தீவிரமடைந்துள்ளது. மோடி ஆட்சியில் அதிகபட்சமாக 2018-19ல் ரூ.1லட்சத்து 83 ஆயிரத்து 168 கோடி வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இத்தகைய நிலையில்,  வங்கிக ளின் இருப்பு நிலை கணக்குப் பட்டியலில் இருந்து பெரு முதலாளிகளின் கடன்களை முற்றாக தள்ளுபடி செய்வதே நிதியமைச்சர் நிர்மலாவின் அறிவிப்பின் நோக்கம்.

;