headlines

img

நட்டா கூறும் வளர்ச்சி எது?

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, வளர்ச்சி சார்ந்த கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றும் ஆனால் இந்த கொள்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன என்றும் பாஜக வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திங்களன்று தில்லியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி யிருக்கிறார்.

மோடி அரசு 2014 -இல் பதவியேற்றதிலிருந்து யாருடைய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தி ருக்கிறது; தொடர்ந்து அளித்து வருகிறது என்பதை நாட்டு நடப்புகளும் புள்ளி விபரங்களும் நன்றா கவே புலப்படுத்துகின்றன. 2014 தேர்தலின்போது மோடியின் பிரச்சாரங்களுக்கு உதவிய கார்ப்ப ரேட் கனவான் கவுதம் அதானி வகையறாக்களின் வளர்ச்சிக்கே ஒன்றிய அரசு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்பது நாடறிந்த விஷயம்.

2014-இல் உலகின் நூறு பணக்காரர்களின் பட்டியலிலேயே இடம் பெறாத கவுதம் அதானி 2021-இல் 15ஆவது இடத்தில் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் பாஜக அரசின் கொள்கை தான் என்பதை யாரும், மறுக்க முடியாது. 2014-இல் 1860 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இருந்த முகேஷ் அம்பானி தற்போது 2021 அக்டோபர் முதல் வாரத்தில் 9,27 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் 12ஆவது இடத்தில் இருக்கிறார். இதுதான் பாஜக அரசின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கொள்கையின் விளைவு. 

முகேஷ் அம்பானி உலகின் 100 பணக்கா ரர்களின் பட்டியலில் 2014-இல் 40 ஆவது இடத்தில் இருந்தார். ஆனால் மோடியின் நண்பரான கவுதம் அதானி - 2014-இல் அந்த 100பேர் பட்டியலி லேயே இடம் பெறாத அதானி -2021 இல் 7,48 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் 15ஆவது இடத்தில் இருக்கிறார் என்றால் அந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு முழுக்காரணமும் பாஜகவின் கூட்டுக் களவாணி முதலாளித்துவக் கொள்கைதானே!

இதுதானே நட்டா கூறும் ஒன்றிய பாஜக அரசின் வளர்ச்சிக் கொள்கை. இந்த வளர்ச்சிக் கொள்கையால் நாட்டின் வேலையின்மை விகிதம் 2016-17 -இல் 15.66 விழுக்காடாக இருந்தது. 20-21-இல் 28.66 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 32.03 விழுக்காடு என்று சாதனை படைத்திருக்கிறது. நாட்டின் 10 விழுக்காடு பணக்காரர்கள் 50 விழுக்காடு சொத்துக்களுக்கு உரிமையாளர்களாகி இருக்கிறார்கள் என்று தேசிய மாதிரி ஆய்வு தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் கிராமப்புறங்கள், நகர்ப் புறங்கள் எல்லாம் சேர்ந்து 57 விழுக்காட்டு குடும்பங்கள் கடனில் சிக்கித் தவிக்கின்றன என்பதையும் அதே தேசிய மாதிரி ஆய்வுதான் கூறியுள்ளது. அதாவது பணக்காரர்கள் மெகா பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள்; ஏழைகள் ஓட்டாண்டிகளாகியிருக்கிறார்கள். இது தானே நட்டா கூறும் வளர்ச்சி. 

இத்தகைய வளர்ச்சிக் கொள்கைகளுக்கு தடை போடாமல் இருந்தால் அது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யும் துரோகமல்லவா? அனைவரையும் உள்ளடக்கிய  வளர்ச்சி என்று வாய்ச்சேவை செய்தால் போதுமா? உங்களது தலைமைப் பீடமான ஆர்எஸ்எஸ்-சின் பாணியே அதுதானே. இதுவே நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு எதிரி!

;