headlines

img

பாஜக மாநிலத் தலைவரின் இரட்டை மிரட்டல்....

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அண்ணாமலை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசி வருவது நல்லதல்ல. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர் பாஜக மாநிலத்தலைவராக மேலிடத்தால் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு உலா சென்ற இவர், தாராபுரத்தில் பேசும்போது “நம்மைப்பற்றி ஊடகங்கள் சில தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். தற்போது இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக இருப்பது எல்.முருகன். அதனால் இனி யாராலும் நம்மைப்பற்றி தப்பான செய்தியை போட முடியாது. இந்த ஊடகங்கள் எல்லாம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்” என்றும்மிரட்டியுள்ளார். 

இது ஒரு தனி மனிதரின் மிரட்டல் அல்ல.ஒன்றிய பாஜக அரசு கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராக கடைப்பிடித்து வரும் அணுகுமுறையையே இவர்பிரதிபலித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளராக போட்டியிட்ட செந்தில் பாலாஜியை பகிரங்கமாக மிரட்டினார். தனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்றார். அந்த அவருடைய இன்னொரு அராஜக முகம்தான் ஊடகத்துறை குறித்த அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளது. ஊடகத்துறையை சேர்ந்த சிலர் அண்ணாமலை மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். ஊடகங்கள் குறித்து தாம் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாகவும், ஐடி சட்டத்தில் திருத்தம் வரவுள்ளதாகவும், அப்படிவந்தபிறகு சமூக ஊடகங்களில் யாரும் கண்டபடிஎழுத முடியாது என்பதையே தாம் அவ்வாறு குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது விளக்கமல்ல, ஊடகத்துறையை மட்டுமின்றி சமூக ஊடகத்துறையையும் ஒருசேர மிரட்டும் செயல் ஆகும். பெரும்பாலான கார்ப்பரேட் ஊடகங்கள் ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் கூஜாக்களாக மாற்றப்பட்டுவிட்டன. கொரோனா நோய்த் தொற்றில் மோடி அரசு தோல்வியடைந்து விட்டதை சர்வதேச ஊடகங்கள் சாடின.ஆனால் பெரும்பாலான இந்திய ஊடகங்கள் பிரதமர் மோடி தன்னைத்தானே பாராட்டிக் கொண்டதைமட்டும் வெளியிட்டு விசுவாசம் காட்டின. சமூக ஊடகங்களில் ஒன்றிய அரசு மற்றும் பாஜகவின் அத்துமீறல்கள், அராஜகங்கள் கடும்விமர்சனத்திற்கு ஆளாவதால் ஐடி சட்டத்தில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஒளிப்பதிவு திருத்தச் சட்டமும் கொண்டு வரப்படவுள்ளது. இவற்றின் நோக்கம் என்ன, என்பதையே அண்ணாமலையின் மிரட்டல் காட்டுகிறது.ஐடி சட்ட திருத்தம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புசட்டம் குறித்து உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது. ஊடக சுதந்திரம் பாஜக அண்ணாமலைகளின் வரம்பிற்குஉட்பட்டது அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

;