headlines

img

கடன் தள்ளுபடி- பலன் யாருக்கு?

அதிமுக அரசின் பதவிக்காலம் முடியும் நிலையில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் இந்தக் கடன் தள்ளுபடியால் உண்மையில் பலன் பெறுபவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மிகப் பெரிய அளவுக்கு ஆளுங்கட்சியினர் மோசடி செய்துள்ளதாகவும் புகார் எழுந்தது. 

சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16 இலட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளின் கடன் தொகை ரூ.12ஆயிரத்து 110 கோடி ரத்துசெய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி ஜனவரி 31 வரையிலான குறுகிய கால பயிர்க்கடன், நகையீட்டின் பேரில்வழங்கப்பட்ட பயிர்க்கடனுக்கான அசல் மற்றும்வட்டி, அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. போலி மற்றும் புனையப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பெறப்பட்ட கடன் மற்றும்பினாமி பெயரில் வழங்கப்பட்ட கடன் என நிரூபிக்கப்பட்டால் தள்ளுபடி பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஆனால் இதனால் உண்மையில் பலன் பெற்றவர்கள் சொற்பமான விவசாயிகளே ஆவர். ஆளுங்கட்சியினர் போலியான மற்றும் புனையப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் பினாமிபெயரிலும் கடன் வாங்கி தள்ளுபடி சலுகையை அனுபவிக்கின்றனர். கூட்டுறவு தேர்தல் தமிழ்நாட்டில் முறையாக நடத்தப்படவில்லை. ஆளுங்கட்சியினர் பெரும்பாலான பதவிகளை முறைகேடான முறையில் கைப்பற்றினர். இதனால் கூட்டுறவு அமைப்பே பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இப்போது நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை பயன்படுத்திக் கொண்டு ஆளுங்கட்சியினர் புகுந்து விளையாடியுள்ளனர். 

கூட்டுறவு அமைப்புகளில் முறையான வரவு - செலவை பேணாமல் கொள்ளையடிப்பது ஒன்றையே குறியாகக் கொண்டுள்ளனர். பல கூட்டுறவு சங்கங்களில் முன் தேதியிட்டு நகைக்கடன் பெற்றதாக கூறி பல லட்சம் ரூபாயைசுருட்டியுள்ளனர். பிப்ரவரி மாதத்தில் பெறப்பட்ட கடனைக் கூட ஜனவரி மாதமே பெறப்பட்டதாக போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளனர். அரசு இவ்வாறு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடப் போவதை முன்கூட்டியே அறிந்து இந்த மோசடியை திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளனர். விளைநிலம் இல்லாத நிலத்திற்கான சிட்டாஅடங்கலை பயன்படுத்தியும், ஒரே சிட்டா அடங்கலை பயன்படுத்தி கூட்டுறவு அமைப்புகளிலும் கடன் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மறுபுறத்தில் கடன் தள்ளுபடிக்காக பட்ஜெட்டில் 5 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய தொகை ஒதுக்கப்படவில்லையென்றால் கூட்டுறவு அமைப்பே நலிந்துவிடும். மறுபுறத்தில் கடன் தள்ளுபடி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க உரிய தணிக்கை முறை அவசியமாகும். தவறான முறையில் ஒரு ரூபாய் கூட கடன் தள்ளுபடி செய்யப்படுவதை அனுமதிக்கக் கூடாது.

;