headlines

img

தோழர் சங்கரய்யா நூற்றுக்கு நூறு

தீக்கதிர் தன்னுடைய முன்னாள் ஆசிரியரும், மூத்த, முதன்மை வாசகரும், வழிகாட்டியுமான தோழர் என்.சங்கரய்யா அவர்களின் நூறாவது பிறந்தநாளில் வாழ்த்துக்களையும், வணக்கத்தை யும் தெரிவித்துக் கொள்கிறது.

ஒருவரது ஆயுள் காலம் என்பது ஆண்டுக்க ணக்கே ஆயினும், மகத்தான மனிதர்களின் ஆயுள் என்பது அவர்களது தொண்டறத்தைக் கொண்டே அளவிடப்படுகிறது. அந்த வகையில் பார்க்கிற போது தோழர் சங்கரய்யாவின் வயது என்பது ஆயி ரத்தைத் தாண்டியே அளக்கப்பட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டைத் தொடர்ந்து தோழர் சங்கரய்யா வின் நூற்றாண்டும் வந்திருப்பது இயல்பான ஒன்றே  ஆயினும், தன்னுடைய நூறாண்டின் வாழ்வின் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் முன் முகங்களில் ஒன்றாக பயணித்தவர் என்ற வகையில் இந்த நூற்றாண்டு கள் மிகவும் பொருத்தப்பாடுடையதாகஅமைந்துள்ளது.

தன்னுடைய 19 ஆவது வயதில் கல்விச் சாலை யிலிருந்து சிறைச்சாலையில் அடியெடுத்து வைத்த தலைவர் அவர். தண்டிக்க வேண்டும், அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே அவரொத்த கம்யூனிஸ் ட்டுகள்  சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் சிறைச் சட்டங்களையும் சீர்திருத்தி, அனைத்து அரசியல் கைதிகளையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும் என்று போராடி சிறையிலும் சமத்து வத்தை கொண்டு வந்தவர்கள் சங்கரய்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட்டுகள்.

எட்டாண்டு கால சிறை வாழ்வின் போதும், மூன்றாண்டு கால தலைமறைவு இயக்கப் பணிக் காலத்திலும் அவரது உயிர் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருந்தன. ஆனால் அவர் எப்போதும் இயக்கத்தையும், லட்சியத்தை யுமே தன்னுடைய உயிர் மூச்சாக கொண்டிருந்தார்.

மொழி வழி மாநிலங்களுக்காக முதல் முழக்க மிட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். தமிழ் நிலத்தில் கால் பதித்து, இந்திய அரசியல் வானத்தை செவ் வானமாக மாற்ற உழைத்த அவர் உலக கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் பிரிக்க முடியாத அங்கமா கவே உணர்ந்தார். 

சங்கரய்யா போன்றவர்கள் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற பெரு விருப்பத்தோடு பொது வாழ்வுக்கு வந்தவர்கள். விடுதலை இந்தியா சோச லிச இந்தியாவாகவும் மலர்ந்தால்தான் அடைந்த சுதந்திரம் ஆனந்த சுதந்திரமாகவும் இருக்கும் என்ப தில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தவர் சங்கரய்யா. மக்கள் ஜனநாயக புரட்சிக்கான பாதை யில் அவர் ஒருபோதும் தடுமாறியதும் இல்லை. தடம் மாறியதும் இல்லை.

இடியென முழங்கிடும் பேச்சுத் திறனை இயக் கத்திற்காகவே பயன்படுத்தினார். குரலற்றவர்க ளின் சிம்மக் குரலாக அவர் முழங்கினார். சட்ட மன்றத்தையும், சமர்க்களமாக மாற்றியவர் அவர். சோர்வு எனும் சிலந்திவலை அவரது சொற்களில் ஒருபோதும் பின்னியதே இல்லை. நம்பிக்கையை நடவு செய்ய நாளும்  உற்சாகப் பயிர்களை உற் பத்தி செய்கிற நாற்றாங்காலாகவே அவர் திகழ்கி றார். பொது வாழ்க்கையை எவ்வாறு தூய்மையா கவும், வாய்மையாகவும் அமைத்துக் கொள்ள வேண் டும் என்பதே வார்த்தைகளால் அல்ல, வாழ்க்கை யால் வரைந்து காட்டிய தலைவருக்கு வணக்க மும், வாழ்த்தும்.

;