headlines

img

கடன் வாங்கி காலத்தை  கழித்த அதிமுக அரசு....

தமிழக அரசின் இடைக்கால வரவு - செலவுஅறிக்கையில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை ரூ.65,994 கோடியே 5 லட்சமாக உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் வருவாய் குறைந்துள்ளதால் அரசு கடன் பெறுவது தவிர்க்க இயலாதது. இதனால் மேலும் பற்றாக்குறை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை போன்ற வரி பாக்கிகள் வருவதில் சுணக்கம் உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய வரி பாக்கி32ஆயிரத்து 849.34 கோடி ரூபாயாக இருக்கும் என்றுகணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது ரூ.23,039.46 கோடியாக குறைந்துள்ளது. இது கடும்தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நிதியை, நிவாரணத்தை போராடி அல்லது குறைந்தபட்சம் வாதாடிப் பெறுவதற்கான எந்த முயற்சியும் தமிழக அதிமுக தரப்பில் இல்லை. முதல்வர் அடிக்கடி பிரதமருக்கு எழுதியகடிதங்களால் எந்த பயனும் ஏற்பட்டதாக தெரியவில்லை. 

இந்த நிதிநிலை அறிக்கையிலும் கூட மத்தியஅரசு நிலுவைகளை தரும் என்று நம்பிக்கை கொள்வதை தவிர மாநில அரசினால் எதுவும் செய்ய முடியவில்லை. அரசியல் ரீதியாக மோடி அரசை எதிர்க்கும் துணிச்சல் அதிமுக அரசுக்கு இல்லாததன் விளைவை பொருளாதாரத் துறையிலும் தமிழகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.தமிழகத்தின் மொத்த கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 62 ஆயிரம் ரூபாய் கடனாளியாகத்தான் பிறக்கின்றன. மத்திய அரசின் கடனையும் சேர்த்தால் இது இன்னும் அதிகமாக இருக்கும். தமிழகம் மீள முடியாத ஒரு கடன் வலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே கடன் வாங்கும் நிலையில் மாநில அரசு உள்ளது. ஐந்து மடங்கு கடன்வாங்கி ஆட்சி நடத்தும் நிலை உள்ளது. இந்த கடன் என்பது தொகையோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. பல்வேறு உலக பிராந்திய நிதி நிறுவனங்களிடம் பெற்றுள்ள கடனுக்கான நிபந்தனையை பின்பற்றும் போது நிலைமை மேலும் மோசமாகும். இந்த நிலையில் நடப்பாண்டில் ரூ.84,686 கோடி கடன் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ரூ.6,683 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் துவக்க நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மெட்ரோ ரயில் திட்டம் குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் எதுவும் இல்லை. தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்க்கு சில புதிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால்தமிழகத்திலேயே தமிழை இல்லாமல் செய்யும் வன்மத்தோடு செய்யப்படும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பை எதிர்க்காமல் எத்தனை விருதுகள் அறிவித்தாலும் பயனில்லை. தமிழக அரசின் இடைக்கால நிதி நிலைஅறிக்கை ஒட்டுமொத்த ஆட்சியின் தோல்வியையும், இயலாமையையும் வெளிச்சமிட்டு காட்டுவதாகவே அமைந்துள்ளது.

;