headlines

img

மோடி அரசின் தடுப்பூசி அரசியல்....

இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது மத்திய அரசின் கடமை, ஒரே ஊசிக்கு ஏன் மூன்று வகையான விலை. தடுப்பூசி உற்பத்தியில் தனியார் ஆதிக்கத்தை தவிர்க்க தவறியதுஏன்? என்று உச்சநீதிமன்றம் மோடி அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. ஆனாலும் கூட இந்த விசயத்தில் மோடி அரசு அசைவதாக இல்லை. மாறாக தடுப்பூசி செலுத்தும் கடமையை மாநில அரசுகளிடம் தள்ளிவிடுவதிலும், தனியார்நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிப்பதிலும்தான் மோடி அரசு குறியாக உள்ளது.

தடுப்பூசி திருவிழா என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வந்த அனைவருக்கும் ஊசி மருந்து கிடைக்கவில்லை. திருவிழா என்பது வெறும் வெற்று ஆரவாரவார்த்தையாக முடிந்துவிட்டது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்காதநிலையில் மே 1ஆம் தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.போதிய அளவு தடுப்பூசி கிடைக்கவில்லை என்று கூறி தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 2.5 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.பதிவு செய்ததிலேயே பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. ஆனால் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பது போல ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துவதில்தான் மோடிஅரசு முனைப்பாக உள்ளது. 

மறுபுறத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இந்தியா ஒரு கோடிடோஸ் தடுப்பூசி மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை 15 கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியமக்கள் தொகையோடு ஒப்பிடும்போது இது மிகவும்குறைவு. முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்த தவணை ஊசி செலுத்தகாத்திருக்கின்றனர். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் இரண்டாவது ஊசி போடப்படாததால் உரியபலன் கிடைக்குமா? என்ற அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். மறுபுறத்தில் முதல் டோஸ்ஊசி போட வருபவர்கள் கையிருப்பு இல்லை என்று திருப்பி அனுப்பப்படுகிறார்கள். 
மோடி அரசை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்துவதில் முழு தோல்வி அடைந்துள்ளது.  ரெம்டெசிவிர், ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர் காக்கும்ஏற்பாடுகளிலும் பெரும் குளறுபடி நடந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமானோர் உயிரிழந்த கொடுமை நாட்டிற்கே தலைகுனிவாகும். தடுப்பூசி அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இலவசமாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாடுகளிலிருந்து தேவையான அளவு இறக்குமதி செய்யவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை இந்த பணியில் முழுமையாக ஈடுபடுத்துவதன் மூலமே கொடும் நோயையும் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்களை தடுத்து நிறுத்த முடியும்.

;