headlines

img

உயிருக்கு விலையா?  (தனியார் மருத்துவமனைகளின் அட்டூழியம்)

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழ்நாடு அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசால் ஏற்கெனவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் கொரோனாசிகிச்சைக்காக 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. ஆனால் தனியார் மருத்துவமனைகள் இந்த உத்தரவை பின்பற்றுவதில்லை என்றும் முதல்வர் மற்றும் பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டங்களை பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் ஏற்பதில்லை என்றும் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தனியார் மருத்துவமனைகள் கொரோனாநோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதைஅரசு தடுக்க வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். தமிழகத்தில் வலுவான மருத்துவ கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் சிறப்பான சேவையாற்றிவருகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 

செங்கல்பட்டு மருத்துவமனை உள்ளிட்ட சில இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்தது போன்ற சில சம்பவங்கள் துரதிருஷ்டவசமானது. அரசு மருத்துவ கட்டமைப்பை மேலும் வலுவாக உருவாக்க வேண்டியதன் தேவையையும் ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதைஉறுதி செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்களை உடனுக்குடன் நியமிக்க வேண்டும். மறுபுறத்தில் இந்த கொடிய காலத்தில் மக்களிடம் ஏற்பட்டுள்ள உயிர் அச்சத்தை பயன்படுத்தி பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடித்து வருகின்றன. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிக்கு பெருமளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை பயன்படுத்தி கொள்ளை லாபம் குவிக்கின்றன.

இது முற்றாக தடுக்கப்பட வேண்டுமென்று உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மிகச் சரியானது. அரசு ஒரு குழு நியமித்து தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். மீறும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு படுக்கைகளை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்  கொள்ள வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள கொடிய நெருக்கடியை அனைவரும் சேர்ந்து சமாளிக்க வேண்டிய நிலையில் ஒரு சிலர் கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது.

;