headlines

img

எச்சரிக்கை அவசியம்...

கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவது உறுதி என ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும்தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில் எச்சரித்துள்ளது. இரண்டாவது அலை பாதிப்பு ஓரளவு குறைந்துமக்கள் நிம்மதி பெருமூச்சுடன் இருந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனாபாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா கொடுந்தொற்று நோயால் தினசரி குணமடைவோரை விட பாதிப்பு அடைவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஞாயிறன்று நிலவரப்படி 41,831 பேர் பாதிப்படைந்த நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 39,299 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் 541 பேர் பலியாகியுள்ளனர். 

தமிழகத்திலும், சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்றுஅதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனிடையே உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் தேவையற்ற பயணங்களை மேற்கொள்வது போன்றவற்றால்தான் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது எனஎய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலோரியா கூறியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் சுற்றுலா தளங்களுக்கு மக்கள் செல்வது அதிகரித்திருப்பதும், தொற்று பரவலுக்கு காரணமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

தனி மனித இடைவெளி, முகக் கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டதும் தொற்று பரவலுக்கு காரணமாக உள்ளது என எய்ம்ஸ் இயக்குநர் கூறியுள்ளார். இத்தகைய காரணங்களை விட தடுப்பூசி செலுத்துவதில் ஒன்றிய அரசின் அக்கறையற்ற மற்றும் பாரபட்ச அணுகுமுறைதான் முக்கிய காரணமாக உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 108 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்குவது சாத்தியம் என ஒன்றியஅரசு கூறியுள்ளது. ஆனால் அதை சாத்தியமாக்குவதில் உரிய அக்கறை காட்டப்படவில்லை.இப்போதுள்ள சூழ்நிலையில் அதிகபட்சமாக இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான் முக்கியமான பணி. ஆனால் தடுப்பூசிமருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாகவே மோடி தலைமையிலான அரசு அக்கறை காட்டுகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேவையான அளவு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடுத்தியிருந்தால் பெருமளவு மருந்து உற்பத்தி செய்திருக்க முடியும். ஆனால் கொரோனா நோய்த் தொற்றையும் தனியாருக்கு சாதகமாக மாற்றுவதிலேயே மோடி அரசுமுனைப்பாக உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரளத்திலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்கும் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் மூன்றாவது அலை எப்போது துவங்கும் எனஉறுதிபட தெரியாத நிலையில், அதை சமாளிக்கஉரிய மருத்துவ கட்டமைப்பை உறுதி செய்வது அவசியமாகிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலையில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகமாக இருந்தநிலையில், தற்போது மிகுந்த கவனமும், எச்சரிக்கையும் அவசியம்.

;