headlines

img

கொரோனா வைரஸ் பாதிப்பு ;பல்லவி  - - *ஏகாதசி*

பல்லவி 

சுத்திச் செவருக்கு  
சோறுதண்ணி எங்கருக்கு 
கத்தி மாரடிச்சும் - எங்கள 
காங்கலியே அய்யாமாரே 

கையில வேலயில்ல 
காசுதுட்டும் பொழக்கமில்ல 
தொண்டக்குழி காஞ்சு - நாங்க
தூங்கலியே அம்மாமாரே 

கொள்ளநோயி எங்களத்தான் 
கொண்டுபோகு முன்ன 
பட்டினியால் சாகப்போறோம் - வாங்க 
எத்தனன்னு எண்ண 

 சரணம் - 1 

கூலிவேல செஞ்சுதானே 
கொடல்பசி ஆத்திவந்தோம் 
நாழியரிசிக் கிப்போ 
நாதியில்லையே 
வீடுகளப் பூட்டிக்கிட்டு 
வீதிகள மறந்துவிட்டோம் 
ஏழபசி யாரஒரு
சேதிவல்லையே 

மொட்ட மாடியில்ல 
மோள ரூமுமில்ல  
ரோட்டோரம் நின்னுக்கிட்டும் 
கையி தட்டினோம்
ஞாயிறு ராத்திரிக்கு 
லைட்ட அமத்தனுமாம் 
முட்டாள நெனச்சுக்கிட்டு
நாங்க முட்டினோம் 

மனுசங்க பொணமானா 
காசு வெறும் காயிதம் 
கோடி லெச்சமெல்லாம் - அட
கொட சாஞ்சு போயிடும் 

 சரணம் - 2 

காக்கிச்சட்டைக் காவுக 
கண்ணமூடி அடிக்கிறாக 
காரணம் கேக்கக்கூட 
கருணை இல்லயா 
நோய்நொடியப் பத்திமட்டும் 
நூறுமுற சொல்லுறாக 
பசியில மடியிறது 
மரணமில்லையா 

பச்சப் பிள்ளைகளும்  
பிச்ச கேக்குறது 
ஆளுற மந்திரிங்க 
காதில் விழுகல 
எங்க வரிப்பணத்த 
எதுக்கு பதுக்குறீக 
எடுத்துக் குடுத்திடுங்க  
கையி அழுகல 

சர்க்காரு குடுக்குற 
ஆயிரம் ரூவாயப் பாரு - ஒரு
சவக்குழி வெட்டக்கூட 
பத்துமான்னு கேளு 

 - *ஏகாதசி*
 

;