headlines

img

மானுடப் புன்னகை - கீழ்குளம் வில்லவன்

காக்கைகுருவி எங்கள் ஜாதி என்று
கவிதையாய் வாழ்கிறேன்!
இந்த மதத்தவன் 
அந்த மதத்தவன் என்று
எவரையும் என்னிடம்
இனம் பிரிக்க வராதே!

ஒன்றுண்டு மானுட ஜாதி
என்றவனின் பிள்ளை நான்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றவனின் தோழன் நான்!
விண்ணைத் தாண்டிச்
சிறகு விரிக்கிறேன் – உன்
வலைக்கனவு – என்னிடம்
பலிக்காது!

எந்த ஆலகாலமும்
எனது உள் இறங்காது!
தடுத்தாட் கொள்ள
என்னோடு தமிழ் இருக்கிறது!
வல்லினத்தை மெல்லினத்தை
இடையினத்தை - 
ஒன்றிணைத்து
நன்று பயப்பது தமிழ்!
எவ்வினமும் எம்மதமும் ஆனாலும்
கூட்டிச் சேர்த்துக்
கொண்டாட வைப்பது தமிழ்!

பெயரில் இல்லை எவனும்
செயலில் வாழ்கிறான் மனிதன்
யாரோ மாட்டி விட்ட
கண்ணாடியைக் கழற்றிவிட்டு - உன்
இயல்பான கண்களால்
என்னைப் பார்
எனக்குள் பாடும் பூங்குயில்
எனக்குள் மணக்கும் மலர்வனம்
எனக்குள் சுடரும் சூரியன்
எனக்குள் கனக்கும் பால்மடி
காண்பாய் நீ!

அறத்தின் மடியில் 
படுத்துக் கிடக்கிறேன்
மதத்தின் பிடியில்
அகப்பட மாட்டேன்!

தமிழ் அருவியில்
குறிப்பதாலோ என்னவோ
கபிலர் சொரிந்து தந்த
குறிஞ்சிப் பூக்கள்
தொண்ணூற்று ஒன்பதுடன்
அன்பு என்னும்
நறும்பூவையும் சேர்த்து
நூறு பூக்களின்
வாசத்துடன் வாழ்கிறேன் - இனி
வேறென்ன வேண்டும்?

நண்பா வா!
தமிழின் மடியில்
அமர்ந்து படிப்போம்!
கடவுளின் சாயலாய்க்
காட்சி தரும்
மரத்தின் அருகிலும்
கருத்துக் கேட்போம்!
நமது வேர்களை – கிளைகளை
வரப்புகள் தாண்டியும் விரிப்போம்

நமது 
இயல்பான எழுச்சியால்
முள் வேலிகள் - கீழே
முடங்கட்டும்
மரங்களுக்குப் பூக்கள் போல
மனிதனுக்கு
இயற்கை வழங்கிய
சிறப்புப் பரிசு - சிரிப்பு
அதனை இழக்காமல் காப்போம்!
மானுடப் புன்னகையால்
மண்ணில் விண் சமைப்போம்!

;