headlines

img

குடி கெடுக்கும் உரிமையை கொடுத்தது யார்? - நவகவி

குறுக்கே எங்களுக்கிடையில்
கோடு ஏன் போடுகிறீர்கள்?
தேசத்தின் காற்றை அவர்கள்
திருடவில்லையே.
ஃபக்கிர்களின் சாம்பிராணிப்புகை
போபால் புகையா என்ன?

தேசத்தின் அருவிகள் எம்
சிரங்களின் மேல் விழுகையில்
முண்டாசு கட்டிய சிரம் என்றும்
தொப்பி அணிந்த சிரம் என்றும்
வித்தியாசம் பார்த்து விழுவதில்லை. 

கங்கையும் காவிரியும்
முஸ்லீம் வயல் இந்து வயல் என
பாகுபடுத்தி பாய்வதில்லை.
ஏன் எனில் அவை
கங்கோத்ரியையும், குடகையும் தான்
நதி மூலமாக்கி நடந்து வருகின்றன.

கோட்சேவின் அஸ்திக்கலையமோ
சவார்க்கரின் சமாதி மூலையோ
அவற்றின் நதிமூலமாய் இன்னும்
ஆகவில்லை; இனியும் ஆகாது
நதிமூலம் அல்ல; அவை சதிமூலம்.

கோயில் மணி ஓசைகள்
இஸ்லாமியச் செவிகளில்
விழமாட்டேன் என்று
வீம்பு பண்ணுவதில்லை.

மண்ணில் விளையும் எமதுமஞ்சள்
திலகமுகத்தில் மட்டுமா
பர்தா முகத்தில் படர்ந்தாலும்
ஒரே தங்க நிறமாய்த்தான்
ஒளிர்கிறது .

நாடு என்ற இந்த வீடு; இதில்
நாங்கள் ஒன்றாகவே வசிக்கிறோம்.
நீங்கள் இந்த வீட்டில்
குறுக்குச் சுவர் எழுப்பி
-ஆஷ்ட்விட்ச் முகாம்களின் 
 அடையாளத்துடன் - அவர்களுக்கு
கொட்டடி தயாரிக்கிறீர்கள்.

எங்கள் இந்த வீட்டுக்குள்
நாய்கள் கூட வரலாம்
நாஜிகள் வரலாமா?

குடி உரிமை என்று கூறி
குடி கெடுக்கும் உரிமையை
ஏக சந்தோஷத்துடன் நீங்களே
எடுத்துக் கொண்டீர்கள்.

குடி உரிமை அட்டை உங்கள்
சர்க்காரின் அச்சுக்கூடங்களில்
தயாரிக்கப்படுபவை அல்ல.

அவர்க்கும் எமக்குமான
அந்த அட்டை
நாங்கள் சேர்ந்து புரிந்த
சுதந்திர யுத்தத்தின்
சுவடுகளில் உள்ளது.

குடி உரிமை அட்டை என்பது
நூறு நூறாண்டுகளாய் 
நாங்கள் இணைந்து
நிர்மாணித்த இந்த தேசத்தின்
கடைக்காலாய் உள்ளது
காகிதமாய் அல்ல.

அவர்கள் 20 கோடி பேரும்
வேறு தேச விருட்சங்களில் இருந்து
வெட்டி வந்து இங்கே நடப்பட்டு
வேர் பிடித்தவர்கள் அல்ல.

அவர்களும் நாங்களும்
ஆம் இந்த தேச மரத்தின்
அடிவேர்கள்...
சல்லி வேர்கள் மட்டுமல்ல
ஆணிவேர்கள்.

இந்த மரங்கள் இங்கே தான்
நெடுங்காலமாய் நிழல் விரிக்கின்றன.
இங்கிருக்கும் இவற்றின் நிழல்
இந்தத் தரையில் தான் விழுகிறது.
இந்தியாவை விட்டு அப்பால் 
ஆப்கானிலோ ஆப்ரிக்காவிலோ போய்
அந்நியத் தரையில் விழவில்லை நிழல்.

அவர்கள் ஆயிரமாயிரமாண்டு
சனாதன அவஸ்தையில் இருந்து
விட்டு விடுதலையானவர்கள்.

இலங்கை அகதிகளும்
பிறை சூடும் பெருமானைத் தானே
துதிக்கிறார்கள்?
அந்தப் பிறை உங்களுக்கு
முஸ்லீம்கள் தொழும்
மூன்றாம் பிறை போல் தெரிகிறது போலும்!

அவர்கள் மட்டுமல்ல; உம்
அகராதியில் உங்களைத் தவிர
அனைவரும் அகதிகள்தான்
பஞ்சமர்கள் சூத்திரர்கள்
அனைவரும் தான்.

ஒருவாய் உண்ணவும் எமக்கு
வருவாய் இல்லாத அவலம்.
நீங்களோ ஒவ்வொரு நாளும்
புதுப்புது வெடியாய் கொளுத்திப் போடுகிறீர்கள்.
சந்தோஷத் தீபாவளி வெடியாய் அல்ல
சவ ஊர்வல வாணவெடியாய் வெடித்தபடி
தேசத்தை சிதையேற்றுகிறீர்கள்.

விலைவாசி ஏற்றக் கோடு
விண்ணோக்கி விரைகிறது.
காயமே இது பொய்யடா மட்டுமா?
வெங்காயமுமே இங்கே
பொய்யாய் பழங்கதையாய் 
போய்க் கொண்டிருக்கிறது.

நாடாள்வோரே நீங்கள் நீட்டும்
நாமக்கட்டியையும் விபூதி உருண்டையையும் 
நறுக்கிப் போட்டு குழம்பு வைக்க இயலுமா?

கவலையில் ஏழ்மையில்
கண்பிதுங்கிக் கொண்டிருக்கிறோம்... நீங்களோ
கண்திறந்து கொண்டிருக்கிறீர்கள்.
புதுப் புதிதாய் பொய்யாய் 
முளைத்த சிலைகளுக்கு
கலவரம் செய்ய 
கண் திறந்து கொண்டிருக்கிறீர்கள்.

சாமிக்கு மட்டுமா
சனத்துக்கும் நெற்றிக்கண்
உண்டு என்பதை - அதன்
உக்கிர விழிப்பை உணர்வீர் சீக்கிரம்.

இனங்கள், மொழிகள்,மதங்கள்என
சகல உறுப்புகளின் சங்கமம்
எம் தேகம் - அதாவது - எம் தேசம்.
உடல் உறுப்புகளில்
அங்க உறுப்பு எது?
அகதி உறுப்பு எது?
எது ஒட்டி இருப்பது?
எதை வெட்டி எறிவது?

எல்லா உறுப்பும் தேவை எனினும்
வெட்டிக் களைந்தெறியும்
வீண் உறுப்பும் ஒன்றுளது.

மிகையாய் வளர்ந்த நகத்துணுக்குகள்....
பாசிசக் கிருமிகள் நாசிச அழுக்குகள்
படர்ந்திருக்கும் நக எச்சங்கள்...
வளர்த்த தேகத்தையே - தேசத்தையே-
கீறிப் புண் செய்யும் கேவல எச்சங்கள்.

எம்மையே செரித்து
எமக்கெதிராய் வளர்ந்தஎச்சங்கள்...
கிள்ளி எறிந்து கல்லி எறிந்து
அவற்றை அகற்றுவதல்லவா
ஆரோக்கியம்?

;