headlines

img

காற்று  மாசு குற்றங்களை அதிகரிக்கிறதா...? - ஐவி.நாகராஜன்

இந்தியாவின் தலைநகரான டில்லியில் காற்று மாசு என்பது அதிகளவில் இருப்பது சமீபகாலமாக பத்திரிகைகளில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்திருக்கின்றது. அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றிற்கு அவ்வப்போது விடுமுறையும் விடப்படுகிறது. இந்நிலையில் டில்லியில் காற்று மாசு காரணமாக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு பெரும் கவளையளிப்பதாக உள்ளது.
1990க்கும் 2013க்கும் இடைப்பட்ட காலத்தில் காற்று மாசு காரணமாக சுமார் ரூ.4 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக உலக வங்கி ஒரு கணிப்பை சொல்கிறது. சமீபத்திய கால நிலவரத்தையும் கணக்கில் கொண்டால் இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை நிர்வாகிகள், ஏனைய பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் டில்லியில் பணிபுரிபவதற்கு அஞ்சுகிறார்கள். பலரும் டில்லியைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் தகுதியற்ற இடமாக டில்லி மாறிக்கொண்டிருக்கிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களும் பின் தொடர்ந்துவிடுமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.
காற்றுமாசு காரணமாக ஆரோக்கியம் கெடுகிறது என்பது பிறந்த குழந்தைக்கு கூட தெரிந்திருக்கும். ஆனால் இது கொலைகளுக்கும்கூட காரணமாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? மாசடைந்த காற்றை சுவாசிக்கையில் நம் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் உண்டாகி அது குற்ற செயல்களிலும் ஈடுபட செய்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலங்களில் எந்த பகுதியில் காற்று மாசு இருக்கிறது என்பதை கவனித்து அங்கே காவல்துறையை குவித்து குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீவிர ரோந்து பணியை முடுக்கிவிட வேண்டியிருக்கும். இது பல ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் மூலமாகவும் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்கள் வழியாகவும் தெரியவந்திருக்கிறது.
அதிகரித்துவரும் காற்று மாசினால் அறிவாற்றல் பாதிப்புக்குள்ளாகிறதா என்ற கேள்வியுடன் ஆய்வுகள் தொடங்கியுள்ளது. பள்ளிகளில் மாணவர்களிடையே ஆய்வு நடத்தியதில் காற்று மாசு குறைந்து காணப்பட்ட நாட்களில் நடந்த தேர்வுகளில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்றதும், மாசு அதிகமாக இருந்த நாட்களில் நடந்த தேர்வுகளில் குறைவான மதிப்பெண்களை பெற்றதும் தெரியவந்துள்ளது.
காற்று மாசு தனி மனிதரிடத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளால் சமூக பாதிப்புகள் விளைகின்றதா என்பதையும் கண்டறிய ஆய்வுகள் நடந்துள்ளது. இதற்காக லண்டனில் இரண்டு ஆண்டுகளில் நடந்த குற்ற சம்பவங்களின் பதிவேடுகளை காற்று மாசு குறித்த தின பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். எதிர்பார்த்தது போலவே காற்று மாசு அதிகரித்த நாட்களில் குற்ற செயல்கள் அதிகம் நடந்திருக்கிறது. மாசு என்பது காற்றுடனே பயன்படுவது என்பதால் அது பயணிக்கும் பகுதிகளுக்கும் பின் தொடர்ந்து ஆராய்ந்துள்ளனர். எந்த பகுதிகளுக்கெல்லாம் காற்று மாசு பயணப்பட்டதோ அந்த பகுதிகளில் குற்றங்களின் அளவு அதிகரித்துள்ளது என்பது புள்ளிவிபரங்கள் வழியே புலப்பட்டுள்ளது.
இதேபோன்ற ஆராய்ச்சியை அமெரிக்காவில் மேற்கொண்டிருக்கிறார் ஜாக்சன்லூ என்பவர், கொலை, வழிப்பறி, கார் கடத்தல், பாலியல் பலாத்காரம், திருட்டு போன்ற குற்றங்கள் காற்று மாசு அதிகம் இருக்கும் நாட்களில் அதிகரித்து இருக்கின்றன. மாசு மனதிற்குள் எதிர்மறை எண்ணங்களை தூண்டிவிடுகிறது என்பதையும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது மூளைக்கு செல்லக்கூடிய நல்ல காற்றின் அளவு குறைகிறது. இதனால் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்க செய்கிறது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி சுயகட்டுப்பாட்டுடன் மனிதர்கள் நடந்துகொள்ளும்படி வழிகாட்டும் ‘‘பிரி பிரண்டல் லோப்” எனப்படும் மூளையின் முன்பகுதி பாதிப்பிற்குள்ளாவதால் இத்தகைய குற்ற செயல்கள் நடக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் விளக்கத்தை கொடுக்கிறார் ஜாக்சன்லூ.
காற்று மாசினை கட்டுக்குள் கொண்டுவருவது மிக அவசியம் இல்லையெனில் மாசுக்காற்று மூளையை ஆட்டுவித்து மனிதர்களை மூர்க்கர்களாக மாற்றிவிடும். இந்நிலையில் டில்லியில் கடந்த சில நாட்களாக கடும்குளிரும் பனிமூட்டமும் நிலவி வருகிறது. இந்த கடும் குளிரால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பெரும் விபத்துகளும் ஏற்படுகின்றன. பனிமூட்டம் மற்றும் கடும் குளிரும் காற்று மாசோடு கலப்பதால் மேலும் பல அபாயங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
பருவநிலை மாற்றம் எனும் அபாயம் நம் தலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டிருக்கிறது. எனினும் அதைப்பற்றிய உரிய கவனம் பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் செலுத்தப்படுவதில்லை என்பதுதான் இந்தியாவின் எதார்த்தம். நம் அன்றாட பேசுபொருளாக பருவநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் இன்னும் இடம்பெறவில்லை என்பதுதான் பெரும் வேதனையாக உள்ளது.
இந்த துரதிஷ்டமான சூழலில் உலகுக்கு வழிகாட்டும் விதத்தில் இத்தாலி ஒரு முன்னெடுப்பை செய்யவிருக்கிறது. அநேகமாக அடுத்த கல்வி ஆண்டிலிருந்து பருவநிலை மாற்றமும், வளங்கள் குன்றாத நிலையும் இத்தாலியின் பாடத்திட்டத்தில் இடம் பெற இருக்கின்றன. ஏற்கனவே சூழலியியல் ஒரு பாடமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தாலும் மரம் வளர்த்தால் மழை பெறலாம் என்ற ரீதியில்தான் அது இருக்கிறது. இத்தாலியின் பாட திட்டத்திலோ பருவ நிலை மாற்றமானது ஒரு பாடமாக மட்டுமில்லாமல் எல்லா பாடங்களுடனும் அது இணைக்கப்படும் என்கின்றனர். எடுத்துக்காட்டாக கணக்கு பாடத்திலும் பருவ நிலை மாற்றம் இடம்பெறும் அப்போதுதான் எல்லாத்துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்களின் சிந்தனையில் பருவநிலை மாற்றமும் ஊடுருவும். இத்தாலியின் இத்தகைய கல்வித்துறையின் அணுகுமுறையை இந்திய கல்வித்துறை பின்பற்றுமா?

;