headlines

img

அடிமைக்கு எதற்கு ஆறாம் அறிவு? - பழனி சோ.முத்துமாணிக்கம்

மேற்குத் தொடர்ச்சி மலை ஓர் இரட்டைவடத் தங்கச் சங்கிலிபோல் நீண்டிருந்தது. மருதமலை முருகன் கோயில், முத்துக்கள் பதித்த பதக்கமாகக் காட்சி அளித்தது. அந்த மலையும் வனமும் ஏராளமான விலங்குகளுக்கும் சிறு உயிரினங்களுக்கும் புகலிடம் தந்து வாழவைத்துக் கொண்டிருந்தன. மனிதர்கள் புகுந்து தொல்லை கொடுக்காத பகுதி இது.எனவே அச்சமின்றி எல்லாப் பறவைகளும் பாடிக் கொண்டு எட்டுத் திசைகளிலும் பறந்து சென்று தன் இறகுகளால் வானத்தைக் கோதிவிடும்.
மலைவளம் காணப் பள்ளியிலிருந்து மாணவர்களுடன் சென்ற பிரியா அங்கு பறந்து கொண்டிருந்த கிளிகளைப் பார்த்தவுடன், வீட்டில் கிளி வளர்க்க வேண்டும் என ஆசைபட்டாள். கையோடு கொண்டு வந்திருந்த விதைப்பந்துகளை எல்லாப் பகுதிகளுக்கும் வீசி எறிந்தார்கள் மாணவர்கள். துணைக்கு வந்திருந்த மலைவாசிகளிடம் கேட்டுக் கிளிகளைப் பிடித்துத் தரச் சொன்னாள் பிரியா.
‘புடிச்சுத் தர்றோம் கண்ணு. முந்தீவிட இப்ப இந்த வனாந்திரத்துல பறவேங்க கூடுதலா இருக்குது. கவலய விடு’ என்றார் அந்த மலைவாசிப் பெரியவர்.
‘ஆமா தாத்தா... போன வருசத்தைக் காட்டிலும் பறவைங்க, இப்ப அதிகமா இருக்கும் போல...’ பிரியா வியப்போடு கேட்டாள். பெரியவர், ‘எப்பிடிச் சரியாச் சொல்லற கண்ணு. அது ஏன்னாக்கா...பக்கத்துல இருக்கற வெள்ளிமலை வனத்துல ஒரு சாமியார் வந்து கூடாரம் போட்டுக்கிட்டு ரவ்வுபகலா குத்தாட்டம்.... நம்ம மக்க கூட்டம் கூட்டமா வந்து ஒரே கூச்சல்தான். தண்ணிதேடி, தீனி தேடி மிருகங்கள் எல்லாம், என்னடா நம்ம வழியை மறிச்சுட்டானுகளேன்னுட்டு வேற வேற எடங்களுக்கு நகரத் தொடங்கிருச்சு.அங்கிருக்கற பறவைங்களும் மத்த வனங்களுக்கு வரத் தொடங்கிருச்சு. அதுங்க இருக்கற எடத்தை நாம புடிச்சுக்கிட்டோம்.இப்ப நாம இருக்கற எடத்துக்கு அதுங்க வருது. அதக் கொறை சொல்ல நமக்குத் தகுதியே இல்லை கண்ணு’ என்றார்.
அம்மா அப்பா எதிர்ப்புகளை மீறி வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒரு கூண்டில் கிளிகளைச் சிறை வைத்தாள் பிரியா.
வா பிரியா.. போ பிரியா.. பள்ளிக்கூடம், அப்பா அம்மா.. இப்படிப் பேசத் தொடங்கின இரு கிளிகளும். எல்லாம் பிரியாவின் விடா முயற்சியால்தான். பள்ளிக்கூடத்தில் இருக்கும் நேரம் தவிர, மற்ற பொழுதுகளில் கிளிகளுடனேயே நேரம் போனது பிரியாவுக்கு. இளம்பிறைபோல் வளைந்திருக்கும் மூக்கு, வண்ணக்கலவையாய் விரிந்திருக்கும் சிறகு, மனிதர்களைப் போலவே பேசும் ஆற்றல் ஆகியவற்றைக் கண்டும் கேட்டும் வியந்து போவாள் பிரியா. அடிக்கடி கூண்டுக்குள் படபட என்று சிறகுகளை அடித்துக் கொண்டு கிளிகள் கூச்சலிடும். அவை மகிழ்ச்சியாக விளையாடுகின்றன என்று நினைத்துக் கொள்வாள்.
நாட்கள் நகர்ந்தன. இந்தக் கிளிகளைப் பார்க்கக் குருவிகளும் காக்கைகளும் புறாக்களும் வந்துபோய்க் கொண்டிருந்தன.தங்கள் குரலில் அப்பறவைகள் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தன. அதன் விளைவை உணர்வதற்கு ஒருநாள் வந்தது பிரியாவுக்கு.
‘ஏய் பிரியா.. வா இங்கே..’ கூண்டுக்குள் இருந்து கேட்ட ஒலியைக் கேட்டுத் திகைத்துப் போனவள், ‘என்னம்மா குரல் மெரட்டலா இருக்குது’ எனக் கேட்டாள்.
‘ஓங் கிட்ட ஒன்னு கேக்கணும்.’
‘கேளு’
‘எதுக்கு எங்களக் கூண்டுக்குள்ள அடச்சுப் போட்டிருக்க’.
‘ஆசையா உங்கள வளக்கணும்னுதான்; வெளயாடவும்தான். உங்களுக்குப் புடிச்ச தானியங்கள், பழங்களக் குடுக்கிறேனா இல்லையா?’
‘இதையே கொஞ்சம் மாத்தி ஓசிச்சுப் பாரு’
‘மாத்தின்னா?’
‘என்ன பிரியா எங்களவிட ஒங்களுக்கு அறிவு அதிகம்பாங்க. ஆறு அறிவாமே! புரியலயா? ஒன்னப் புடிச்சு அடச்சுவச்சி, பழங்க, காய்ங்க.... பின்னே உனக்குப் புடிச்ச எல்லாத்தையும் நாங்க கொண்டு வர்றோம்.அடஞ்சு கிடக்க ஒனக்குச் சம்மதமா?’
இத்தனை நாள் எதுவும் பேசாமல் கொடுத்ததைத் தின்று கொண்டிருந்த கிளிகள் இப்படிப் பேசுகின்றனவே; என்ன காரணம்? என்று  தேர்வில் விடைதெரியாமல் விழிக்கும் மாணவன்போல் நின்றுவிட்டாள். எதையாவது சொல்லிச் சமாளிக்க எண்ணினாள்.
புறாக்களும் காக்கைகளும் அடிக்கடி வந்து இந்தக் கிளிகளுடன் பேசிக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது. ‘நீ முந்திமாதிரி இல்லை; உன்னை யாரோ பின்னால இருந்து தூண்டிவிடறாங்க. அதனாலதான் இப்பிடி எதுத்துப் பேசற.’
கிளிகளுக்குக் கோபம் வந்து விட்டது. ‘மனுசங்க மாதிரி மறச்சுப் பேசத் தெரியாது எங்களுக்கு. பின்னால இல்ல.. முன்னால வந்துதான் தூண்டிவிடறாங்க. எங்க பறக்கற உரிமையைப் பறிச்சது நீ. அடிமைப் புத்தி இருக்கறவங்கதான் அடங்கி நடப்பாங்க.’ ‘விட்டு விடுதலையாகி நிற்பாய்.. இந்தச் சிட்டுக் குருவியைப் போல’ன்னு, உங்க பாரதியார் பாடுனதை நீங்கவேணா மறந்திருக்கலாம். எங்களுக்கு யார் தயவும் தேவை இல்ல. தெரிஞ்சுக்கோ. கிளி பொறிந்து தள்ளி விட்டது.
பிரியா வியப்பின் உச்சிக்கே சென்று விட்டாள். பாரதியின் பாட்டு வரிகளைச் சொல்கிறதே. ‘அது சிட்டுக் குருவிக்குச் சொன்னது. உங்களுக்கு இல்லை’.
‘இல்லை பிரியா.. எல்லாப் பறவைகளுக்கும்.. அது மட்டுமில்ல. உங்கள மாதிரி மனுசங்களுக்கும் சேத்துத்தான் பாடிவச்சார். உங்க ஆறாவது அறிவைக் கொஞ்சமாச்சும் செலவு பண்ணுங்க. நீங்க பாரதியையும் நல்லாக் கவனிச்சுக்கல.. அவரு பாடினதையும் கவனிக்கல’.
‘சரி சரி.. உங்கள எங்கேருந்து கூட்டீட்டு வந்தேனோ அங்கேயே விட்டர்றன். உங்க வனம் மருதமலை வனமா? இல்ல..வள்ளிமலை வனமா? சொல்லுங்க’.
‘நாங்க வள்ளிமலை வனம்’.
‘அதுக்கு என்ன ஆதாரம் வச்சுருக்கீங்க?’
‘ஆதாரமா?’
‘ஆமா.. உங்க அம்மா அப்பா எங்கிருந்தாங்க? பாட்டன் பூட்டங்க எங்கிருந்தாங்க? அவங்களப் பெத்தவங்க எங்கிருந்தாங்க? அதச் சொல்லு.. போலாம்’.கிளிகளை பேச்சாலேயே அடக்கி விடலாம் என்று நினைத்தாள் பிரியா.
‘ஆகக.. காகா. ரொம்பத் தெறமையாப் பேசறதா நெனப்போ ஒனக்கு. ஓங் கேள்விக்குப் பதில் சொல்றோம். அப்பறம் நாங்க கேக்கற கேள்விக்குப் பதில் சொல்லு பாப்போம்.’
பேசத் தெரிந்த பறவைகளைக் கொண்டுவந்து வளர்த்தது தவறு என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் பிரியா.
‘எங்க அப்பா வள்ளிமலை.. அம்மா தொண்டாமுத்தூர் சோலை; பாட்டன் பாட்டி சிறுவாணி வனம். அவிங்க அம்மா அப்பா.. அவிங்க.. தெரியலயே. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? சரி இப்ப உன்னோட கதையைச் சொல்லு பாப்போம்’.
பாடத்தில் இருந்து எந்தக் கேள்வி கேட்டாலும் பட் பட் என்று விடை  சொல்லியிருப்பாள்  பிரியா. அதத் தவிர வேறெதையும் படிக்க விடமாட்டேங்கறாங்களே என்று தனக்குள் புலம்பினாள்.
‘ஏம் அம்மா அப்பா பழனியில இருக்கறாங்க. அவிக அம்மா அப்பா திண்டுக்கல். அவிகளோட அம்மா அப்பா..அப்பா.. அப்பா.. தெரியலயே.’ பிரியாவுக்கு வெட்கமாகப் போய்விட்டது.
‘ஆறாம் அறிவு இருக்கறவங்களே இப்பிடி நெனப்புக் கெட்டுப் போய் இருந்தா, கொறை அறிவு படச்ச எங்களுக்கு எப்பிடிப் பரம்பரையைப் பத்தித் தெரியும். எல்லா வனமும் எங்க வனம்தான்’. என்று கிளிகள் ஆவேசமாகக் கூறின.
பள்ளிக்குப் போவதையும் மறந்து விட்டாள். குழப்பத்தில் இருந்து சிறுகச் சிறுக விடுபட முயன்றாள் பிரியா.
‘உங்களக் கூண்டுல அடச்சுவச்சா நீங்க பேசாம இருப்பீங்களா?’ என்ற கிளியின் குரல் வரவர மிகுதியாகிக் கொண்டே வந்தது. ‘‘இப்பிடி அடச்சு வச்சதுக்குப் பதிலா மனுசங்களும் அனுபவிக்கப் போறீங்க. எவனாவது கிறுக்கன் வந்து இந்த நாடே ஒங்களோடது இல்லைன்னு வெரட்டப் போறான். பாத்துக்கிட்டே இரு”. கிளிகளின் பேச்சில் உண்மை இருப்பதுபோல் தெரிந்தது பிரியாவுக்கு. அந்தச் நினைவே அவளுடைய மனதைப் பிசையத் தொடங்கியது.
பிரியாவின் கைகள் தாமாகக் கூண்டைத் திறந்து விட்டன.
விடுதலையான கிளிகள் பிரியாவைச் சுற்றிச் சுற்றிப் பறந்தன.
‘பிரியா.. கோவிச்சுக்காதே.. எங்க உரிமைக்காகப் பேசினோம். ஆனால் உம்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கோம் தெரியுமா? அதனால நாங்க வனாந்தரம் தேடிப் போனாலும், அன்னாடம் உன்னப் பாக்க வருவோம்.’ என்று கூறியபடி மேலெழுந்து பறக்கத் தொடங்கின.
கலங்கிய கண்களுடன் வானை நோக்கிப் பிரியா கையை அசைத்துக் கொண்டே இருந்தாள்.
வானத்தில் நிறையப் பறவைகள் அம்புநுனி வடிவத்தில் பறந்து கொண்டு மேற்கு வான இளம்சிவப்பைப் பருகத் துடிக்கும் ஆவலுடன்  போய்க் கொண்டிருந்தன.

;