headlines

img

நாடுகள் தோறும் காதலர் தினம்

கி.பி இருநூறாம் ஆண்டின் மத்தியில் ரோமப் பேரரசை ஆண்டு வந்த கிளாடியஸ் என்னும் மன்னன் அரச வாழ்வில் தோல்வியடைந்த மன்னனாக இருந்தான். அவனுடைய ஆட்சிக் காலத்தில் மக்கள் இராணுவத்தில் சேர மறுத்தனர். இதற்குக் காரணம் மக்கள் குடும்பமாய் இருப்பதும், காதல் ஜோடிகளாய் இருப்பதும் தான் என்று நினைத்த மன்னன் திருமணத்துக்கே தடை விதித்தான். இதை எதிர்த்த பாதிரியார் வாலண்டைன் நிறைய ரகசியத் திருமணங்கள் செய்து வைத்தார். மன்னனின் கோபத்துக்கு ஆளான வாலண்டைன் சிறையிலடைக்கப்பட்டு கி.பி 270ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த நாளே காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கிலாந்திலும், பிரான்ஸிலும் புனித வாலண்டைன் மிகவும் பிரசித்தம். பண்டைய ரோமில் பிப்ரவரி என்பது வசந்தகாலத்தின் ஆரம்பம். இந்த மாதம்  தூய்மைப்படுத்துதலின் மாதமாக கொண்டாடப்பட்டது. பானஸ் எனப்படும் விவசாயக் கடவுளை பிப்ரவரி பதினைந்தாம் நாள் விழா எடுத்துச் சிறப்பிக்கும் வழக்கமும் அன்றைக்கு இருந்தது. இந்த விழாவே பின்னர் வாலண்டைன்ஸ் தினமாக மாறிவிட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். எப்படியெனினும், வாலண்டைன்ஸ் தினத்தை அதிகாரப் பூர்வமாக அறிவித்தவர் போப் கிளேஷியஸ். கி.பி 498ல் இவர் பிப்ரவரி பதினான்காம் நாளை வாலண்டைன்ஸ் தினமாக அறிவித்தார். அதனாலேயே இது மதம் சார்ந்த விழா என்னும் தோற்றமும் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது இன்றைய காதலர் தினம்போல் இல்லாமல் பரிசளித்து மகிழும் ஒரு விழாவாகவே ஆரம்பித்தது. சீனர்களிடம் ‘ஏழின் இரவு’ எனும் பெயரில் அறியப்படும் இந்தக் காதலர் தினம் ஏழாம் மாதத்தின் ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது. ஜப்பானில் ஜூலை ஏழாம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. 1382ம் ஆண்டு வாலண்டைன்ஸ் தினத்தில் எழுதப்பட்ட ஒரு காதல் பாடல், அப்போதே வாலண்டைன்ஸ் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டதை உறுதி செய்கிறது. சேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்திலும் ‘நாளை வாலண்டைன்ஸ் டே’ எனும் வசனம் காணப்படுகிறது. பிரிட்டனில் காலம் காலமாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்த காதலர் தினக் கொண்டாட்டங்கள் அமெரிக்காவில் சிறிய அளவில் 1700 களிலேயே துவங்கிவிட்டதாக  சில தகவல்கள் தெரிவிக்கின்றன. கிபி 1840 ல் எஸ்தர் எ ஹாலண்ட் என்பவர் வாலண்டைன் தின விற்பனையை அமெரிக்காவில் துவங்கினார். அவருடைய வாழ்த்து அட்டையே வாலண்டைன் தினத்தைத் குறித்து  கிடைத்திருக்கும் மிகப் பழமையான வாழ்த்து என்பது குறிப்பிடத் தக்கது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல வளரத் துவங்கிய இந்த தினம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதும், பூக்கள் கொடுப்பதும், சாக்லேட் கொடுப்பதும் என காதலர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு தினமாக மாறியது. 1980களில் வைர விற்பனைக்காகவும் காதலர் தினத்தைப் பயன்படுத்தும் வழக்கம் ஆரம்பமானது. காதலர் தின வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதை அறிந்த வியாபாரிகள் மார்ச் 14 ஆம் தேதியை வெள்ளை தினம் என்று பெயரிட்டு ஒரு புதிய விழா நாளாக்கினார்கள். அதாவது பிப்ரவரி 14 ஆம் தேதி பரிசு வாங்கியவர்கள். மார்ச் 14 ஆம் தேதி பதிலுக்குப் பரிசு வழங்க வேண்டும் எனும் கொள்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த தினம். கொரியாவில் இன்னும் ஒரு படி மேலே போய் ஏப்ரல் பதினான்காம் நாளை கருப்பு தினமாகக் கொண்டாடினார்கள். எந்தப் பரிசும் காதலர் தினத்தன்று கிடைக்கா தவர்கள் ஒன்று கூடி கருப்பு நிற உணவை உண்பார்களாம். தென்கொரியாவில் நவம்பர் 11ம் தேதி காதலர்கள் பரிசுகளை வழங்கி மகிழும் பெப்பேரோ தினம் கொண்டாடப்படுகிறது. யூத மரபின் படி ஆவே மாதத்தின் பதினைந்தாம் நாள் ( ஆகஸ்ட் கடைசி பகுதி ) காதலர் விழா கொண்டாடப்படுகிறது. வெள்ளை உடை உடுத்தி காதலியர் ஆடுவதைக் காதலர்கள் கண்டு மகிழ்வார்கள். பிரேசில் நாட்டில் டயா டாஸ் நமோரதாஸ் எனும் தினம் ஜூன் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் வாழ்த்து அட்டைகள் பூக்கள் கொடுத்து நாளை சிறப்பிப்பது அவர்கள் வழக்கம். அதற்கு அடுத்த நாள் திருமணங்களின் பாதுகாவலனான புனித அந்தோணியார் தினம் அங்கே கொண்டாடப்படுகிறது. கொலம்பியாவில் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காதல் மற்றும் நட்பு தினம் கொண்டாடப்படுகிறது. அமீகோ சீக்ரட்டினோ – எனப்படும் ரகசிய சிநேகிதனே விழாவும் அங்கே பிரபலம்.  ரொமானியாவில் பிப்ரவரி 24ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாகப் பார்க்கும் போக்கும் இன்று பரவி வருகிறது. தாய்லாந்தில் காதலர் தினத்தன்று திருமணப் பதிவு அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன. காதலர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

;